குழந்தைகள் பொய் சொல்வார்களா?



பெண் மைய சினிமா

நவீன வாழ்க்கை முறை மாற்றத்தாலும், பெற்றோர்களின் சரியான கவனிப் பின்மையினாலும் குழந்தைகளின் மனதுக்குள் உருவாகின்ற சிக்கல்களை விரிவாக பேசுகிறது ‘தி ஹன்ட்’.

டென்மார்க்கின் இயற்கை எழிலை தன்வசம் வளைத்துப்போட்டிருக்கும் ஒரு கிராமம். அங்கிருக்கும் நர்சரி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார்  லூகாஸ். அவருக்கு கிறிஸ்டன் என்ற மனைவியும், மார்கஸ் என்ற மகனும் உள்ளனர். மனைவியைப் பிரிந்த பின் லூகாஸ் தனியாக வாழ்ந்து  வருகிறார். நர்சரி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் மிகுந்த நேசத்துடனும், அக்கறையுடனும் பழகி வருகிறார். லூகாசின் நெருங்கிய நண்பன் தியோ.  அவரின் மகள் கிளாரா கூட அந்த நர்சரி பள்ளியில் தான் படித்து வருகிறாள்.

கிளாராவிற்குப் பெற்றோர்களைவிட லூகாசிடம் ஒரு நண்பனை போன்ற நல்லுறவு இருக்கிறது. லூகாசுடன் சேர்ந்து நடக்கும்போது அவள் எதை  எதையோ கற்பனை பண்ணி பேசிக்கொண்டே வருவாள். லூகாசும் அவளின் மன இயல்புகளை நன்கு புரிந்துகொண்டு அவள் சொல்வதையெல்லாம்  கேட்டுக்கொண்டும் பதில் சொல்லிக்கொண்டும் சக நண்பனை போல உடன் வருவார். கிளாராவின் அண்ணனும், அவனது நண்பர்களும் ஐ பேட்டில்  ஓடிக்கொண்டிருக்கும் ஆபாச படத்தை அவளிடம் விளையாட்டாக காட்டிவிடுகிறார்கள்.

அடுத்த நாள் கிளாரா நர்சரி பள்ளியில் இதயம் வடிவில் ஒரு பரிசை லூகாசின் கோட்டில் வைத்து விடுகிறாள். குழந்தைகளுடன்  விளையாடிக்கொண்டிருக்கும் லூகாசின் இதழ்களில் ஒரு முத்தத்தையும் பதித்துவிடுகிறாள். அதிர்ச்சி அடையும் லூகாஸ் கிளாராவிற்கு அறிவுரை  கூறுகிறார். பரிசை வேறு ஏதாவது குழந்தைக்கு தருமாறும் சொல்கிறார். கிளாரா ‘பரிசை நான்வைக்கவில்லை...’ என்று மறுப்பு தெரிவிக்கிறாள். உடனே  கிளாராவிற்கு லூகாசின் மீது வெறுப்பு உண்டாகிறது. அன்றைக்கு அவள் பள்ளி விட்ட பிறகும் வீட்டிற்குப்போகாமல் அங்கேயே  இருந்துவிடுகிறாள்.பள்ளியின் முதல்வர் தனியாக உட்கார்ந்திருக்கும் கிளாராவிடம் பேச்சுக்கொடுக்கிறார்.

கிளாரா சம்பந்தமில்லாமல் ‘லூகாஸ் முட்டாள், அசிங்கமானவன், அவனை நான் வெறுக்கிறேன்...’ என்றும், லூகாஸ் மீது பாலியல் ரீதியான புகாரையும்  கொடுக்கிறாள். முதல்வர் அதிர்ச்சியடைகிறார். கிளாராவிடம் விசாரணை நடத்துகின்றனர். அவள் சொல்வதெல்லாம் உண்மை என்று எல்லோரும் நம்ப  ஆரம்பிக்கிறார்கள். பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது. லூகாஸ் மீது கிளாராவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டவன் என்ற பழிச்சொல்  விழுகிறது. நெருங்கிய நண்பன் தியோ உட்பட எல்லோரும் லூகாசை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவரின் நாய் அடித்துக் கொல்லப்படுகிறது. வீட்டின் ஜன்னல் கற்களால் உடைக்கப்படுகிறது. அவரின் மகனும் விரட்டியடிக்கப்படுகிறான். கடைகளில்  நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி நுழைந்தால் அடித்து நொறுக்கப்படுகிறார். அவரின் வாழ்க்கை அவமதிப்புகளாலும், நிராகரிப்புகளாலும் நிரம்பி  வழிகிறது காலம் ஓடுகிறது. நண்பர்களும், சுற்றியிருப்பவர்களும் அவரை விரட்டி அடித்தவர்களும், நாயை கொன்றவர்களும் மெல்ல மெல்ல லூகாஸ்  எந்த தவறும் செய்யாதவர் என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். வருந்துகிறார்கள்,அழுகிறார்கள்.  

இறுதியில் ஒருவன் மீது விழுந்த பழிச்சொல்லை எந்த காலத்தாலும் அழிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக லூகாஸ் மறுபடியும்  தண்டிக்கப்படுவதோடு படம் நிறைவடைகிறது. குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற கருத்து நம் மனதுக்குள் வலுவாக பதிந்து இருப்பதாலும்,  இன்றைய சூழலில் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு பலியாவது அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும் ஆரம்பத்தில் நாமும் லூகாஸின் மீது  சந்தேகம் கொள்கிறோம். கிளாரா சொன்னதை நம்புகிறோம். ஒரு கட்டத்தில் கிளாரா சொன்னது   உண்மையில்லை.

அவள் தெரியாமல் எதையோ உளறியிருக்கிறாள். லூகாஸ் எந்த தவறும் செய்யவில்லை என்று உணரும்போது, கிளாரா தான் சொல்வதை அறிந்து  சொன்னாளா? அறியாமல் சொன்னாளா? கிளாரா ஏன் அப்படிச் சொன்னாள்? அவள் சொன்னது உண்மையில்லை என்றால் அது பொய்யா? கிளாரா  எதற்காக பொய் சொல்ல வேண்டும்? அது பொய்யும் இல்லையென்றால்? கிளாராவிற்கு ஏதாவது பிரச்சனையா? என்ற கேள்விகள் நம் மனதை  துளைத்து எடுக்கிறது. அதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கிளாராவின் மீது நம் கவனம் விழுகிறது.

கிளாரா மனம் ஏதோ சிக்கலுக்குள் மாட்டி தவிக்கிறது. தரையிலோ,இல்லை சாலையின் ஓரத்திலோ நடக்கும்போது கூட அங்கிருக்கும் கோடுகளை  மிதித்து விடாமல் கவனமாக கீழே பார்த்து நடக்குமாறு மனம் அவளை கட்டளை இடுகிறது. இப்படி நடக்கும்போது எங்கு செல்ல வேண்டுமோ அங்கே  செல்கிற பாதையை கூட பலமுறை அவள் தவற விட்டிருக்கிறாள். அவள் எப்போதும் வீட்டிலே இருப்பதில்லை. வெளியே கால் போன போக்கில்  போய்விட்டு வீட்டிற்கு செல்லும் பாதையையும் மறந்து விடுகிறாள். ஒருவேளை அவளுக்கு வீட்டில் இருப்பது பிடிக்காமல் கூட இருக்கலாம்.

ஒருநாள் வீட்டிற்குள் கிளாராவின் அப்பாவும் அம்மாவும் கடுமையாக சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். அவள் வீட்டிற்கு வெளியே தனியாக  அமர்ந்து கொண்டு பெற்றோர்களின் சண்டையை கேட்டபடி எதையோ பறிகொடுத்தவள் போல சோகமாக உட்கார்ந்து கொண்டிருப்பாள். அப்போது  லூகாஸ் அங்கே வருவார். லூகாசைப் பார்த்ததும் அவளின் முகம் மலரும். அவளைப் பள்ளிக்கு அவர் அழைத்து செல்வார். உண்மையில்  பெற்றோர்களை விட லூகாஸ் தான் கிளாராவின் மீது அதிகம் அன்புடையவராக இருக்கிறார். கிளாராவிற்கும் லூகாசை மிகவும் பிடித்திருக்கிறது.

அவளும் வீட்டிலிருந்து பெற்றோரிடமிருந்து விலகி வெளியே  போகவும், லூகாசுடன் நடக்கவும், லூகாஸின் செல்ல நாயான பேனியுடன்  விளையாடவுமே பெரிதும் விரும்புகிறாள்.பெற்றோர்களிடம் அடிக்கடி நடக்கும் சண்டை கூட கிளாராவின் பிஞ்சு மனதில் பிறழ்வை ஏற்படுத்தி  இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியிருக்கையில் கிளாரா லூகாசை பற்றி சொல்லியது அண்ணனின் நண்பன் காட்டிய ஆபாசப் படம் மனதிற்குள்  செலுத்திய பாதிப்பின் வெளிப்பாடாக , அவளுக்குள் முன்பே இருக்கும் இயல்பை மீறிய கற்பனையின் வெளிப்பாடாக இருக்கலாம்.

உண்மையில் அவள் சொன்னது பொய் கூட இல்லை. நாம் கூட சில நேரங்களில் மனம் பாதிப்படையும் போது எதை எதையோ உளறுபவர்களாக  தானே இருக்கிறோம். கிளாராவின் மன இயல்புகளை நன்கு புரிந்து கொண்ட ஒரே ஆள் லூகாஸ் மட்டும் தான். அதனால் தான் கிளாராவின் மீது எந்த  வருத்தமும் அவருக்கு ஏற்படுவதில்லை. கிளாராவிடம் எந்தவித பாவனையும் இன்றி முன்பு போலவே அன்பாக நடந்து கொள்கிறார். தான்  உளறியதால் தான் லூகாஸ் கஷ்டப்படுகிறார் என்பதை உணரும் கிளாரா உறக்கத்தில் வருந்துகிறாள்.

ஆனால், சுற்றியிருக்கும் சமுகமும், பள்ளி நிர்வாகமும், கிளாராவின் பெற்றோர்களும் கிளாராவின் மன நிலையை பற்றி சிந்திக்காமல், குழந்தை பொய்  சொல்லாது என்ற பொது புத்தியில், உணர்வெழுச்சியில் அப்பாவியான லூகாசை அபத்தமாக தண்டிக்கிறார்கள். கிளாராவின் வழியாக இன்றைய நவீனச்  சூழலில் குழந்தைகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை, பெரியவர்களைப் போல அவர்களும் உளசிக்கல்களுக்குள் மாட்டித் தவிக்கிறார்கள் என்பதை  பார்வையாளன் உணர்ந்து கொள்ளும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமஸ் வின்டர்பெர்க். லூகாஸாக, கிளாராவாக நடித்தவர்களின் நடிப்பை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

த.சக்திவேல்