இரானில் பெண்கள்



பெண் மைய சினிமா

உலக சினிமாவில் தனக்கான இடத்தை யாராலும் அசைக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டது இரானிய சினிமா. பல்வேறு  அச்சுறுத்தல்கள், அரசியல் கெடுபிடிகளுக்கு நடுவில் துணிச்சலுடன் அற்புதமான திரைப்படங்களை படைத்துக் கொண்டேயிருக்கின்றனர்  இரானிய இயக்குனர்கள். மொழி, நிலம், கலாசாரம் தாண்டி வாழ்க்கையை நெருக்கமாக, அதன் நிஜத்தன்மையுடன் படம் பிடிப்பதால்  எல்லோருக்குமான ஒரு சினிமாவாக இரானிய சினிமா உயர்ந்து நிற்கிறது. அப்படி உயர்ந்து நிற்க அடித்தளமிட்ட திரைப்படங்களில்  முக்கியமானது ‘The Day I Became a Woman’.இரானிய பெண்களின் குழந்தைப் பருவம், இளம் பருவம், முதுமைப் பருவம்தான் இதன்  கதை.

முதல் நிலையில் ஒரு சிறுமி. அன்று அவளுக்கு ஒன்பதாவது பிறந்த நாள். அவளுக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவனுடன்  விளையாடுவது என்பது அவளுக்கு பெருமகிழ்ச்சி. தனது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக நெருங்கிய நண்பனுடன் விளையாடச்  செல்ல விரும்புகிறாள். அப்போது வீட்டிலிருக்கும் அவளின் அம்மா, ‘‘உனக்கு இன்றுடன் ஒன்பது வயதாகிவிட்டது. நீ பெரிய பெண்ணாகி  விட்டாய். இனிமேல் சின்னக் குழந்தை மாதிரி வீட்டைவிட்டு வெளியே போய் பையன்களுடன் விளையாடக்கூடாது. இனி பர்தா  அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்!’’என்று கட்டளையிடுகிறார்கள். அம்மா சொல்வது எதுவும் அந்தச் சிறுமிக்குப் புரிவதில்லை.  இருந்தாலும் ‘ஆம்’ என்று தலையசைக்கிறாள். ஆனால், வீட்டுக்குள் அவளால் இருக்க முடியவில்லை. எப்படியாவது வெளியே போய்  நண்பனுடன் விளையாட வேண்டுமென்று துடிக்கிறாள். ‘‘நான் மதியம்தானே பிறந்தேன்.

இன்னும் மதியமாகவில்லை. இன்னைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் மதியம்வரை விளையாடிவிட்டு வருகிறேன்...’’ என்று பாட்டியிடம்  கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி தன் நண்பனுடன் விளையாடுவதற்குச் செல்கிறாள். ஆனால், அவளின் நண்பனுக்கோ கொஞ்சம் வேலை.  தான் வரும்வரை அவளைக் காத்திருக்கச் சொல்கிறான். அதற்குள் மதியமாகிவிடுகிறது. அம்மா அவளைத்தேடி வந்துவிடுகிறாள். அந்தச்  சிறுமி பர்தா அணிகிறாள். அவளின் விளையாட்டு உலகம் அன்றுடன் இருளில் மூழ்குகிறது. இனி ஒருபோதும் அவளால் விளையாட்டை  நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இரண்டாம் நிலையில் - திருமணமான ஓர் இளம் பெண். சுதந்திரமாக தான் நினைத்ததை எல்லாம் செய்ய விரும்புகிறவள். அவளுக்கு  சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது பெருங்கனவு. அவளது கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறான் அவளின்  கணவன். தன் கணவனை மீறி சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்கிறாள். பந்தயம் நடந்துகொண்டிருக்கும் இடத்துக்கு அவளின் கணவன்  பின்தொடர்ந்து வந்துவிடுகிறான். அவளைப் பந்தயத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வரச்சொல்கிறான். இல்லையென்றால் விவாகரத்துதான்  என்று மிரட்டுகிறான். கணவன் சொல்வதைப் பொருட்படுத்தாமல் அவள் சுதந்திரமாக பந்தயத்தைத் தொடர்கிறாள். சுதந்திரக் காற்றை  சுவாசிக்க ஆரம்பித்த அந்த நொடியிலே அவளுக்கு மிஞ்சுவது விவாகரத்து. அதுவும் அவளுக்கு ஒரு சுதந்திரமே. ஆனால், அந்த சுதந்திரம்  நீடித்திருப்பது சில நிமிடங்களே.

அடுத்து மூன்றாவது நிலை - இது தன்னந்தனியாக வாழ்ந்து வரும் ஒரு பாட்டியைப் பற்றியது. மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நாளில்  பரம்பரை சொத்தில் இருந்து அவளுக்குப் பெரிய பங்கு கிடைக்கிறது. இளம் வயதில் வாங்க நினைத்ததை எல்லாம் இப்போது வாங்கிக்  குவிக்கிறாள். அது அவளுக்கு பயன்படாது என்றாலும் கூட காசை அள்ளி வீசுகிறாள். பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம்  செய்யமுடியாமல் போன துயரத்துடனும், பொருட்களைக் கொண்டு செல்ல உதவி செய்த சிறுவன் ஒருவனை மகனாக தத்து எடுக்க  ஆசைப்பட்டதில் கிடைத்த ஏமாற்றத்துடனும், தான் ஆசை ஆசையாக வாங்கிய பொருட்களுடனும் அவள் கப்பலில் பயணம் செய்ய கடலை  நோக்கிச் செல்கிறாள். அவள் வாங்கிய பொருட்களை எல்லாம் கப்பலில் ஏற்றுகிறார்கள். கப்பல் புறப்படத் தயாராகிறது. பொருட்கள்  நிறைந்த அந்தக் கப்பலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள் இளம் பெண்களும், விளையாட்டின் கடைசி நாளில் இருக்கும் அந்தச்  சிறுமியும்.பாட்டி, இளம் பெண், சிறுமி மூவரும் இணையும் புள்ளியில் படம் நிறைவடைகிறது.

குழந்தைப்பருவத்தில் ஆண்-பெண் பாகுபாடின்றி எல்லோரும் குழந்தைகளாக இருக்கிறோம். அப்போது மிகவும் சுதந்திரமாக உணர்கிறோம்.  ஆனால், வயது ஆக ஆக குழந்தை சிறுமியாக, பெண்ணாக மாறுகிறாள். அதிலிருந்து அவளுக்குக் கட்டுப்பாடுகளும், அடக்குமுறைகளும்  அதிகமாகிறது. குழந்தையாக இருந்தபோது ஓடி ஆடி யாருடனும் விளையாட, பேச அவளுக்கு கிடைத்த சுதந்திரம், பெண், மனைவி என்ற  நிலையை எட்டிய பின் இரானியச் சூழலில் எப்படி எவ்வாறு நாலாப்புறமும் பறிக்கப்படுகிறது என்பதை அற்புதமாக உணர்த்துகிறது இப்படம்.  இந்தியாவிலும் பல இடங்களில் இதே சூழல்தான் என்பதால் இந்தப் படம் இன்னமும் நமக்கு நெருக்கமாகிறது.வெனிஸ் உட்பட பல  விருதுகளைக் குவித்த இப்படத்தின் இயக்குனர் மெர்ஷியா.   புகழ்பெற்ற இரானிய இயக்குனர் மக்மல்ஃப் இவரது கணவர்.  

த.சக்திவேல்