மேற்குலகின் மையம்



அமெரிக்கப் பயணக் கட்டுரை

சரஸ்வதி சீனிவாசன்

மினித்தொடர்


உலகில் உள்ள ஒவ்வொரு புதிய இடத்தைப் பார்க்கும்பொழுதும், அதைப்பற்றி தெரிந்துகொள்ளும்பொழுதும் சில நேரங்களில் நமக்கு  அதிசயமாயிருக்கும். பல ஆச்சரியங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, சில வாழ்வியல் நம்பிக்கைகளை நம்மிடையே புகுத்தி,  நம் வாழ்க்கை மாற்றத்திற்கு அந்த இடம் உந்துசக்தியாக அமையும். இங்கு எப்பொழுதும்  உழைத்துக்கொண்டும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்  மக்களை பார்க்கும்பொழுது நாம் ஏன் இவ்வளவு வேலைகள் செய்வதில்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அமெரிக்காவில், மக்கள்  தம் வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்து, தங்கள் வாழ்க்கைத் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொண்டு, வீட்டு வேலைகளைத்  தாங்களே பார்த்துக்கொண்டு என எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடும்போது தேவையற்ற  சிந்தனைகளை தவிர்க்க முடியும் என்பது எவ்வளவு உண்மை என நிரூபிக்கிறார்கள்.

எண்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்கூட எவ்வளவு அழகாக வண்டி ஓட்டிச் செல்கிறார்கள் என்பதை மிகவும் நான் ரசித்தேன்.  நடப்பதிலும் ஒரு வேகம். அது மட்டுமா? மலையேறுவதைப் பார்க்க வேண்டுமே. இங்கே பல்வேறு இடங்களில் இயற்கை பல்வேறான  வடிவங்கள் கொண்டு, உலகத்தவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, மினியோபாலிஸ் நகரை ஏரிகள் நகரம்  என்பார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள். ஒவ்வோர் ஏரியும்  அழகுதான். ஒவ்வோர் ஏரிக்கரையும், நம் மெரினா கடற்கரை  போன்றுதான்.

ஏரிகள், காடுகள், நதிகள், பறவை சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் போன்ற பலவும் இங்குண்டு. இந்த ஒரு நகரைப் பார்க்கவே,  பல மாதங்கள் ஆகும். ஏனெனில் இதன் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என ஒவ்வொரு பகுதியிலும் விசேஷ அம்சங்கள் உண்டு.  அப்படியானால் ஒவ்வொரு நகரமும் எப்படியிருக்கும் என்று யோசிக்கலாம். ஒவ்வொரு நகரத்திலும் நேரம் வேறுபடுவதையும் இங்கு காண  முடிகிறது. இதுவும்கூட இயற்கையின் விளையாட்டு எனலாம். அதுபோல், இரவு ஒன்பது மணிக்கு சூரியன் மறையாது என்பதை நான்கூட  முதலில் நம்பவில்லை. பல நாட்கள் அங்கு இருந்து பார்த்தபொழுதுதான் எனக்கு எல்லாம் புரிந்தது. சில நேரம் இரவு ஒன்பது மணிக்கு  வேறு நகரத்திலுள்ள உறவினருக்கு போன் செய்வேன். அவர்களுக்கு அப்பொழுது இரவு பதினொன்று. தூங்கி விட்டோம் என்பார்கள். நாடு  ஒன்றானாலும் எத்தனை வித்தியாசங்களைக் காண முடிகிறது. ஒவ்வோர் இடத்திலும் அங்குள்ள மனிதர்கள், பழக்க வழக்கங்கள்,  செயல்பாடுகள் என எத்தனையோ விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது நம் வாழ்வில் நிச்சயம் ஒரு படிப்பினைத் தரும்  என்பதில் ஐயமில்லை.

பலவித சந்தோஷங்கள் ஒரே இடத்தில் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட ஓர் இடத்திற்குச் சென்ற நாங்கள் அங்கு  படகுசவாரி முதல் மலை ஏறுவது வரை ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. எல்லா இடங்களுக்கும்  சென்றோம். அந்த இடம், டெய்லர்ஸ்  ஃபால்ஸ் அல்லது டெய்லர்ஸ் பார்க் (Taylors Park) என்று அழைக்கப்படுகிறது.இங்குள்ள அருவி மிகவும் பிரபலம். அருவியை ஒட்டி  கீழேயுள்ள நதியில் படகு சவாரி ரொம்பவும் பிரபலம். மலை முழுவதும் பாறைகள். பாறைகளின் நடுநடுவே சிறிய பாதைகள். அந்தப்பாறை  இடுக்குப் பாதைகள் மூலம்தான் மலைக்கு ஏறிச்செல்ல வேண்டும். அங்கங்கே, நாங்கள் பெரிய பாறைக் கற்கள் மீது அமர்ந்து ஓடும்  நீரையும், படகு சவாரி செய்யும் மக்களையும் வேடிக்கை பார்ப்போம். அவர்கள் படகிலிருந்து கையசைக்க, நாங்கள் மேலே பாறை மேல்  அமர்ந்து டாட்டா காட்டுவோம். ஆனால் மனதிற் குள் ஒரே பயம். கரணம் தப்பினால் மரணம் என்பார்களே. அதுபோல், ரொம்ப  ஜாக்கிரதையாக கற்களின் மேல் அமர்ந்துகொண்டு இயற்கை அழகை ரசிப்போம். அந்த நிமிடம் நாம் எங்கு உள்ளோம் என்பதுகூட நமக்கு  மறந்துவிடும்.

காடுகள்கூட பிக்னிக் செல்வதற்கான இடம் தான். அவ்வளவு ஆர்வத்துடன் மக்கள் கூட்டம் வரும். இயற்கையை ரசிக்க விரும்புவதால்,  அதை ரசிக்கும் விதத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளும் ஒவ்வோர் இடத்திலும் பிரமாதமாக இருக்கும். மலைப்பாங்கான காட்டுப்  பகுதிகளில் நாம் ஏறிச்செல்ல வசதியாக சிறுசிறு படிகள் அமைக்கப்பட்டிருக்கும். வயதானவர்கள் அங்கங்கே பிடித்துச்செல்லும்படியும்  கைப்பிடிகள் அமைக்கப்பட்டிருக்கும். கொஞ்சம் உயரம் சென்றவுடன் களைப்பாகயிருந்தால், சிறிது நேரம் அமர்ந்து செல்லும்படி அங்கங்கே  ஓரங்களில் பெஞ்சுகள்கூட அமைக்கப்பட்டிருக்கும். திருப்பங்களில் அங்கங்கே கழிவறைகள் இருக்கும். அதேபோல் தண்ணீர் குழாய்களும்  உண்டு. குழாய்களில் வாய் வைத்து நீர் பருகும்படி அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய மலையேற்றத்தை நாங்களும் அனுபவித்தோம்.  இயற்கை மூலிகைக் காற்றுக்கிடையில், நிசப்தமான படிக்கட்டுகளில் ஏறி இயற்கையை ரசிப்பது என்பது ஓர் அசாத்தியமான அரிதாக  கிடைக்கக்கூடிய வாய்ப்பு. கீழிருந்து மேலே பார்த்தால் பயம் வரும்.

ஆனால் அங்கு மலையேற்றத்திற்காகவே வரும் முதியவர்களைப் பார்த்தால், நமக்கும் தைரியம் வந்துவிடும். அவ்வளவு தூரம் ஏறி, பின்  இறங்கி வந்தபிறகும் துளிக்கூட சோர்வேயில்லை.அதன்பின்னும் நாங்கள் பாறைகளில் அமர்ந்துகொண்டு ஓடும் ஓடை நீரின் அழகை  ரசித்தோம். ரதம் போன்ற படகுகளையும், அதில் சவாரி செய்யும் நூற்றுக்கணக்கான மக்களின் உடை, நடை, பாவனைகளையும் ரசித்தோம்.  ஏனெனில், பல நாட்டினரும் தென்பட்டதால், பலவிதமான நிகழ்வுகளையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் ஆர்வத்துடன் கண்டோம்.  பத்து நிமிடங்களுக்கான படகு சவாரியும் உண்டு,  45 நிமிடங்களுக்கானதும் உண்டு.  குடும்பத்துடன் படகுச் சுற்றுலா சென்று வரலாம்.  சிலர் நாள் முழுவதும் படகில் சவாரி செய்வர். இதுபோல் பலவிதமான சலுகைகள் உண்டு. இரவுப் பொழுதுக்கென சில படகு சவாரிகளும்  உண்டு.

படகுப் பயணம், மலையேற்றம் மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான தீம் பார்க் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களும் உண்டு. விடுமுறை  நாட்களில் காலையில் கிளம்பி வந்தால் போதும். இரவு வரை மகிழ்ச்சியுடன் நாளைக் கழிக்கலாம். வரப்போகும் வாரத்தை, களித்தபின்  புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம். அனைத்து பூங்காக்களுடன் சிறுவர் விளையாட பெரிய மைதானங்களும் உண்டு. குளிர்காலங்களில்  பனிச்சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலம். அதற்கான பயிற்சியும் உண்டு. சிறுவர்களுக்குத் தனி, பெரியோர்கள், ஆண்-பெண் என  அனைத்துத் தரப்பினரும் விளையாடுவர். அதற்கென தனி மைதானமும் உண்டு. அதில் போட்டிகளும் நடைபெறும்.விதவிதமான  வெளிநாட்டு உணவுகளை ருசிக்க விரும்புவோர் அதற்கேற்றபடியும் தங்கள் சுற்றுலாவை தீர்மானிப்பர். கோடைகாலத்திற்கேற்ற இடம்.  குடும்பத்துடன் குதூகலிக்கலாம்.

இதன்மூலம் எத்தனை புதுமையான அனுபவங்கள் பெற முடியும் தெரியுமா? கோடை முடிந்தவுடன் வேறு என்னவெல்லாம் மாற்றங்கள்  தெரியுமா? மரம், செடிகள் அனைத்தும் எப்படித்தான் நிறம் மாறுமோ, தெரியாது. என்ன ஒரு அழகு! பிரவுன் மற்றும் சிவப்பு நிறங்களில்  இலைகள் அனைத்தும் மாறி அடர்த்தியாக வண்ணமயமாக ஜொலிக்கும்.கிட்டத்தட்ட 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காட்டுப்பாதை போன்ற  இடங்களில் ரயில் பாதைகள் போன்று அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் மக்கள் வரிசையாக நடந்து செல்வதைக் காண முடியும். போகும்  வழிகள் அனைத்தும் குறியிட்டு நாம் பயப்படாத அளவுக்கு எவ்வளவு முன்னெச்சரிக்கைகள் தரமுடியுமோ, அவ்வளவும் அறிவிப்புகள்  எழுதப்பட்டு பலகைகளில் வைக்கப்பட்டிருக்கும். காட்டுப்பகுதியாக இருப்பினும், அதை மக்கள் பிக்னிக் இடமாகவே கருதி  முன்னேற்பாடுகளுடன் வந்துவிடுகின்றனர்.

ரெடிமேட் நாற்காலிகளை மடித்து எடுத்துவந்து வேண்டிய இடத்தில் பிரித்துப் போட்டு அமர்ந்து கொள்வர். குழந்தைகளுடன் வருபவர்கள்  குழந்தைக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் தங்களுடன் எடுத்துச் செல்வர். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து வந்து நாளை  சந்தோஷமாகக் கழிப்பர். அப்படியான பல நண்பர்கள் கூட்டம், ஒரு திருப்பத்தில் மரத்தினடியில் அமர்ந்துகொண்டு அந்த உணவை பகிர்ந்து  உண்டு மகிழ்ந்து, பலவிதமான புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை பார்த்தோம்.காடாகயிருந்தாலும் அதை பூங்கா போன்று அமைத்து  அனைவரும் சென்று வருமளவிற்கு அமைத்திருப்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்று. காடுகளின் முக்கியத்துவமும், விலங்கினங்களின்  பாதுகாப்பும் நன்கு புலப்படும். இவற்றின் ஒரே நோக்கம் இயற்கையை பாதுகாப்பது மட்டும்தான்.

தீங்கு விளைவிப்பது மாதிரியான சில செடி கொடிகள் இருந்தாலும், அவற்றை அழித்துவிடாமல், அதன்மேல் தொட வேண்டாம் என போட்டிருப்பார்கள். அவை வேறு ஏதாவது ஆராய்ச்சிகளுக்கு  பயன் படுவதாகயிருக்கலாம். விலங்குகளும் உட்பகுதியில் நடமாடுவதால் ஒரு சில இடங்களில் எச்சரிக்கை பலகை இருக்கும். எப்படியோ,  ஒருவழியாக கஷ்டப்பட்டு மலை ஏறிவிட்டுத் திரும்பினோம். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது நம்மாலும் அது முடியுமென்று. என் மகன்  உடற்பயிற்சிக்காக அடிக்கடி அங்கு செல்வதாகச் சொன்னான். அதனால் வெகு சீக்கிரம் ஏறிவிட்டான். நாங்கள் மெல்ல ஏறினாலும், செல்லச்  செல்ல நடையில் வேகமும், மனதில் புத்துணர்ச்சியும் வந்தது. காலை முதல் மாலை வரை இதுபோன்ற இயற்கை காட்சிகளைப் பார்த்து,  நடந்தது, ரசித்தது அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் இளமை திரும்பியதுபோல் தோன்றியது. இதுபோன்ற சந்தர்ப்பங்கள், எப்பொழுதோ  கிடைக்கும்பொழுது பயன்படுத்திக் கொள்ளுவது நல்லது தானே?

(பயணம் தொடரும்!)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்