பெண்களை பாதிக்கும் நோய்கள்



மினித் தொடர்

அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்

பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  முகத்தில் சின்ன பரு வந்துவிட்டாலே வருத்தப்படுகிறவர்கள் பெண்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்னை  என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள்.முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை  சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும் என்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள். முக  அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி அவர் நம்மிடம் இங்கே விளக்குகிறார்.

Bells Palsy or Facial palsy

நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும்12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்னை  ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு எந்தப் பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால்  ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம் சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு  பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள்  செயல்படாது.

இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும் இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால்  சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்னை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும்  வரலாம். சாதாரணமாக இந்தப் பிரச்னை ஏற்படும் போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும்,  முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில்  இந்தப் பிரச்னையை சரி செய்துவிட முடியும்.

வலிப்புக்காக எடுக்கும் மாத்திரைகள்


நரம்பு வியாதியான வலிப்புக்கு மருந்தாக பயன்படும்  PHENYTOIN என்ற மருந்தினை உட்கொள்பவர்களுக்கு உடல் முழுதும் முடி  வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவ்வாறு முகத்திலும் முடிவளர்ச்சி அதிகம் இருக்கும் போது பெண்களுக்கு அது அவர்களின் அழகை  பாதிக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் உண்டாகும். அதுவும் அவர்களின் முகத்தோற்றத்தில் வித்தியாசத்தை உருவாக்கும்.  அதனாலேயே இந்த மாத்திரையை இளம் பெண்களுக்கு பெரும்பாலும் நரம்பு மருத்துவர்கள்பரிந்துரைப்பதில்லை.

BLEPHAROSPASAM

இதுவும் நரம்பு வியாதி தான். சிலருக்கு ஒரு பக்கம் முகம் சுருங்கி கண் அடித்து,பின் முகம் விரியும். கண்ணடிப்பது போல் ஒரு கண்  அடித்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஏற்படும் பிரச்னை இது. இவர்களுக்குக் குறிப்பாக அதிக டென்சன் ஏற்படும் போதோ, கூட்டத்தில்  இருக்கும்போதோ ( நாலு பேருக்கு நடுவில் இருக்கும் போதோ) அடுக்கடுக்காக (தொடர்ச்சியாக) இது போல் வரும். தூக்கத்தில் வராது-  இதற்கும் மருத்துவம் இருக்கிறது. முழுவதுமாக குணப்படுத்தமுடியாவிடினும் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது உயிருக்கு எந்த  பாதிப்பும் ஏற்படுத்தாது எனினும் இந்த வியாதி அதிகளவில் பாதிக்கும்போது கண்கள் அதிகம் பாதிக்கப்படும். அதனால் சிலருக்கு அன்றாட  வாழ்வே பிரச்னையாகத்தான் இருக்கும். குறிப்பாக. உதாரணமாக கார் ஓட்டுதல், படித்தல், சமைத்தல் என்பது போன்ற பல வேலைகளை  செய்தல் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பொது இடங்களில் தன்னை அறியாமல் கண்  அடிக்கும்போது பார்ப்பவர்கள் தன்னை என்ன நினைப்பார்களோ என்று அவமானமாக இருக்கும். சமூகரீதியான சங்கடங்களும் இருக்கும்.

TIC

சிலருக்கு முகம் மற்றும் உடலின் சில பாகங்களில் அசாதாரணமான செயல்பாடுகள் இருக்கும். அதாவது கழுத்து, தோள்பட்டை  இழுத்துக்கொள்வது, கண்கள் அடித்துக்கொள்வது மற்றும் முகம் கோணிக்கொள்வது என இது போன்ற செயல்கள் அவர்களை  அறியாமலேயே தன்னிச்சையாக ஏற்படும். இது எல்லார் எதிரிலும் ஏற்படும்போது பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்கும். இதனால்  அவர்களுக்கு மனதுக்கு வருத்தமாக இருக்கும். சில நேரம் அவர்கள் இதனை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தலாம். ஆனால் மறுபடியும்  அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் அது வெளிப்பட்டுவிடும்.

இது ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தூக்கத்தில் வராது. புதிய இடம், புதிய  மனிதர்களை பார்க்கும்போது அதிகமாக ஏற்படும். சிலருக்கு குணமாகி ஒரு ஆறுமாதம் கழித்து மறுபடியும் வரலாம். இதுவும் முக அழகை  பாதிக்கும் ஒரு பிரச்னைதான். இதனால் உயிருக்கு எந்தத் தீங்கும் இல்லை. உடல்ரீதியான வேறு எந்த பிரச்னையும் ஏற்படாது.ஆனால்  சமூகத்திற்கு முன் அவமானத்தைச் சந்திக்க நேரும் போது அது அவர்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக பெண்கள்  மிகவும் நொந்து போவார்கள்.

NEUROCUTANEOUS SYNDROME

இந்த சிண்ட்ரோம் கண், தோல், நரம்பு ஆகியவற்றைப் பாதிக்கும். நேரடியாக இதனால் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.ஆனால்  இந்தப் பிரச்னையால் சிலருக்கு வலிப்பு வரலாம். மன வளர்ச்சிக் குறைபாடு ஏற்படலாம்.உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். நடத்தை  மாறுபாடு ஏற்படலாம். இந்தப் பிரச்னை மரபுரீதியாக ஏற்படுகிறது. இந்த சிண்ட்ரோமினால் ஏற்படும் பிரச்னைகளில் சில உடல் அழகை  பாதிக்கும். அதில் குறிப்பிடதக்கவை NEUROFIBROMATOSISTUBEROUS SCLEROSIS COMPLEX STURGE - WEBER SYNDROME.        

இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

NEUROFIBROMATOSIS
சிலருக்கு உடல் முழுவதும் தசைக்கட்டிகள் போல் இருப்பதைப் பார்த்திருப்போம். அந்தப் பிரச்னை இதனால்தான் ஏற்படுகிறது. இதனால்  அவர்களின் தோற்றம் பாதிக்கப்படுகிறது. அதிலும் இந்தப் பிரச்னையால் பெண்கள் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

TUBEROUS SCLEROSIS COMPLEX
சிலருக்கு மூக்கைச் சுற்றிக் கட்டிக் கட்டியாக இருக்கும். இதுவும் முக அழகை கெடுக்கும்.

 STURGE - WEBER SYNDROME
முகத்தில் ஒரு பக்கம் மட்டும் சிவந்து போகும். ஒரு பக்கம் மட்டும் அப்படி  இருப்பதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.சில பிரச்னைகளை ஆரம்பத்திலே மருத்துவரைப்  பார்த்து  ஆலோசனைப்பெற்று மருந்து உட்கொள்ளும் போது இதன் பாதிப்புகள்  குறைவாக இருக்கும்.

-ஸ்ரீதேவி மோகன்