கேரளாவிலிருந்து... வெள்ளத்திற்கு பின்




ஷாஹினா நஃபீஸா, பத்திரிகையாளர் தமிழில்: கவின் மலர்


இரண்டு கட்டங்களாகப் பெய்த கனமழைக்குப் பின் கேரளா மெல்ல மெல்ல தன்னை மறுசீரமைப்பு செய்து வருகிறது. மொத்த  மாநிலத்தையுமே வெள்ளம் புரட்டிப் போட்டுவிட்டது. பருவமழைக் காலங்களில் அவ்வப்போது நிகழும் நிலச்சரிவுகள் தவிர்த்து கேரளா  பெரிதாக இயற்கைப் பேரழிவுகளை சந்தித்ததில்லை. வெள்ளமோ நிலநடுக்கமோ கேரளா இதுவரை காணாதது. ஒட்டுமொத்தமாக  மாநிலத்தையே துடைத்தெறிந்திருக்கும் பிரளயம் எங்களுக்குப் புதிது. ‘99 பெருவெள்ளம்’ குறித்து பெரியவர்கள் சொன்ன கதைகளைக்  கேட்டிருக்கிறோம். ‘99 பெருவெள்ளம்’ 1924 ஜூலையில் பெரியாறு பெருக்கெடுத்தபோது வந்தது. அது மலையாள நாட்காட்டியில் (கொல்லம்  சகாப்தம்) 1099  ME.  அந்த வெள்ளத்தின் கதையை நாங்கள் தேவதைக் கதையை எப்படி கேட்போமோ அப்படித்தான் கேட்டிருக்கிறோம்.  ஆகவே வெள்ளம் வந்தவுடன் முதற்கட்டத்தில் நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம்.

செய்வதறியாது திகைத்தோம். மக்கள் பெருக்கம் மிகுந்த நகரங்களையும் கிராமங்களையும் வெள்ளம் வென்றபோது ஸ்தம்பித்து நின்றோம்.  ஆனால் இதுவரை காணாத ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் கேரளா மீண்டு வருவதற்காக எதிர்நீச்சல் போடுகிறது.  தங்களுக்கிடையேயான மாற்றுக்கருத்துகளை ஒருபுறம் வைத்துவிட்டு கேரள முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும்  ஒன்றாக இணைந்து  பணியாற்றுகிறார்கள். எந்தக் கவலையுமின்றி இணையத்தில் புறம்பேசி கேலி செய்துகொண்டிருக்கும் ஒரு சிறுகூட்டத்தைத் தவிர்த்து,  கேரள மக்கள் அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரே கூறியதுபோல ‘கேரளத்தின் ராணுவமாக' மாறி மீனவர்  சமுதாயம் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் மக்களை மீட்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டது.

வரலாற்றின் மிக மோசமான வெள்ளத்தை கேரளா கண்டிருக்கிறது. வெவ்வேறு கால இடைவெளியில் 42 அணைகள் திறக்கப்பட்டன.  கேரளாவில் 44 நதிகள் உண்டு. அவை அனைத்தும் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடின. பல இடங்களில் நதிகள் வழக்கமான பாதையை  விடுத்து வேறு பாதையை தேர்ந்தெடுத்து பல நகரங்களையும் கிராமங்களையும் விழுங்கின. பல பெரிய கட்டடங்கள், வீடுகள், பாலங்கள்  மற்றும் வணிக நிறுவனங்களும் மூழ்கின. உணவும் குடிநீரும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் இரண்டு மூன்று நாட்கள்வரை  தவித்தனர். மீட்புப் பணிகள் முடிந்து நிவாரணப் பணிகள் முழுவீச்சில் துவங்கி இருக்கின்றன. இடைவிடாது இணையத்திலும்  களத்திலும்  மக்கள் அதற்காகப் பணியாற்றுகின்றனர்.

ஆகஸ்ட் 20 வரையிலான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி இரண்டு வார வெள்ளம், 223 உயிர்களைக் குடித்திருக்கிறது. முதற்கட்டமாக  கணக்கிடப்பட்டபடி இழப்பு 20,000 கோடி ரூபாய். மாநிலம் முழுவதும் ஆறாயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 19,819  வீடுகள் சேதமடைந்துள்ளன. 37,275 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. பயிர்களின் இழப்பு மட்டும் 605 கோடி ரூபாய்.  ஒட்டுமொத்தமாக முதற்கட்ட கணக்கெடுப்பில் 20,000 கோடி வருவாய் இழப்பு என முடிவாகியது. மே 29 ஆம் தேதி மழை  தொடங்கியபோது அது வழக்கமான பருவமழைதான் என்றே ஒவ்வொருவரும் எண்ணியிருந்தோம்.  கொஞ்சம் கொஞ்சமாக மழை  கனமழையாக மாறியது. மிக அதிக அளவாக கேரள நீர்த்தேக்கத்தின் தலைநகரமான இடுக்கி மாவட்டத்தில் மழை பதிவானது.

மாநிலம் முழுவதும் உள்ள அணைகளின் மதகுகளைத் திறப்பதென அரசு முடிவு செய்தது. போதுமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.  மக்கள் வெளியேற்றப்பட்டனர். நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. மக்களிடையே தகவல் பரவலாகப் போய்ச் சேருவதற்கும்  வழிவகை செய்யப்பட்டது. ஆனாலும் நிலச்சரிவுகளிலும் நீரில் மூழ்கியும் சிலர் இறந்தனர். ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நிலைமை  வேறுமாதிரி மாறத்தொடங்கியது. கேரளாவில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கான கனமழை பெய்தது. நிற்காமல்  ஆக்ரோஷமாகக்  கொட்டித் தீர்த்தது மழை. இதன் காரணமாக தொடர் நிலச்சரிவுகளை கேரளம் கண்டது. நீர்த்தேக்கங்கள் விரைந்து நிரம்பி அதிகபட்ச  அளவை எட்டியதால் மதகுகள் திறக்கப்பட்டன. ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று இடுக்கி நீர்த்தேக்கத்தின் (செறுதோனி அணை) ஒரு மதகு 26  ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. ஆயினும் நீர்தேக்கத்தின் நீரளவு குறையவில்லை. மாறாக  நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  கொட்டிய மழையால் உயர்ந்துகொண்டே இருந்தது. அதே வேளையில் வேறு பல சிறியதும் பெரியதுமான அணைகளும் திறக்கப்பட்டு  ஆறுகளில் நீர் அதிகளவில் விடப்பட்டது. புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான மழம்புழா அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் ஒட்டுமொத்த  பாலக்காடும் வரலாறு காணாத பிரளயத்தை சந்தித்தது. முழு நகரமும் நீரில் மூழ்கியது. கட்டடங்களின் மொட்டைமாடிகளில் மக்கள்  தஞ்சம் புகுந்தனர். பல கட்டடங்களின் முதல் தளம் நீரில் மூழ்கியது. வடக்கே, மலபார் பகுதியில், மலப்புரம், கோழிக்கோடு, மலைகள்  நிரம்பிய வயநாடு ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

பெரும் நிலச்சரிவுகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. இதனால் இப்பகுதியின் அனைத்து நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.  இடுக்கி மட்டுமல்லாமல், பல சிறிய அணைகளும் திறக்கப்பட்டு நீர்  பெரியாறு நதியில் விடப்பட்டது. எர்ணாகுளம் மற்றும் இடுக்கி  மாவட்டங்களின் முக்கிய நகரங்களும் கிராமங்களும் பெரியாறு நதியின் கரையில் அமைந்தவை. அவை மூழ்கின. பெரும்பாலும் ஆற்றின்  கிழக்குப் பகுதியில் வெள்ளம் அதிகம். வெள்ளத்தின் பிறப்பிடமாக இடுக்கி மாவட்டம் இருந்ததால் அந்த மாவட்டமே மிக மோசமாக  பாதிக்கப்பட்டு பெரும்பாலான நகரங்களும் கிராமங்களும் மூழ்கின. சுற்றுலாப்பிரியர்களுக்குப் பிடித்த மூணாறு நீருக்கடியில்  நிலைகொண்டது. தெற்கே, பம்பை நதியும், அச்சன்கோவில் நதியும் வெள்ளப்பெருக்கெடுத்து பத்தனம்திட்டா மாவட்டத்தை மூழ்கடித்தது.  இங்குதான் சபரிமலை உள்ளது.

தப்பிக்க சிறிதும் நேரமே தராமல் எல்லா பகுதிகளிலும் வீடுகளும் பல மாடிக் கட்டடங்களும் மூழ்கின. மக்கள் இரண்டாவது தளத்திற்குச்  சென்று, அதன் பின் மொட்டைமாடிக்குச் சென்று பாதுகாப்பாக நின்றனர். அப்படியும் பலர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.  சற்று  நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது.  நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மீட்புபணிகளுக்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.  அதிகரிக்கும் நீரளவின் நடுவே நின்றபடி தங்களைக் காப்பாற்றும்படி சமூக வலைத்தளங்களில் மக்கள் அபயக்குரல் எழுப்பினர். பல்வேறு  நாடுகளில் வாழும் மலையாளிகள் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை அறிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு மட்டுமல்ல,  பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தெரிந்தவர்கள் என அனைவருடைய எண்களுக்கும் அழைத்தனர். வெள்ளம் பாதிக்காத பகுதிகளில்  இருந்த மக்கள், தங்கள் முகநூல் பக்கங்களில் காப்பாற்றக் கோரியவர்களின் கோரிக்கைகளை பகிர்ந்தபடி இருந்தனர்.

இந்த மிகப்பெரிய நடவடிக்கையில், உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மலையாளிகளும், மலையாளி அல்லாதோரும்  ஈடுபட்டிருந்தனர்.   ஐக்கிய அரேபிய எமிரேட்ஸில் இரவு பகலாய் உதவி மையங்கள், கேரளாவில் மீட்புப்பணியில் இருந்தோரிடம்  தொடர்புகொண்டு செயலில் இறங்கின. ஆகஸ்ட் 15 முதல் கேரளாவின் மீனவர்கள் மீட்புப் பணிகளில்  பெரியளவில் தங்களை  ஈடுபடுத்திக்கொண்டனர். பெரிய பெரிய லாரிகளில் நூற்றுக்கணக்கான படகுகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்டு  வெள்ளம் தொடங்கும் பகுதிகளில் இறக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.மூழ்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் படகை  செலுத்துதல் பெரும் சவாலான பணி.

ஆனாலும் மீனவ சமுதாயம் அந்த சவாலை ஏற்றது. பத்தனம்திட்டா பகுதியின் பேரழிவு மேலாண்மைப்பணிகளுக்கான சிறப்பு அதிகாரியின்  கூற்றுப்படி 70 சதவிகித மக்களை வெள்ளத்திலிருந்து மீட்டது மீனவர்களே. மீன்வளத் துறை அமைச்சர் ஜே. மெர்சிகுட்டியம்மாவின்  மேற்பார்வை யில் ‘மீனவ ராணுவம்' செயல்பட்டது. மலப்புரம் மாவட்டத்தின் தானூரைச் சேர்ந்தவர் கே.பி. ஜெய்சல். இவர்தான் சில  பெண்கள் படகுக்குள் ஏறுவதற்காக தன் முதுகையே படிக்கல்லாக்கி குனிந்து நின்றவர். இவர் மலையாளிகளின் தற்போதைய  கதாநாயகன்.‘அடிப்படையான மீட்பு நடவடிக்கைகளில் எங்கள் மீனவ சமுதாயத்துக்குப் பயிற்சி உண்டு. பத்தாண்டுகளாக மலப்புரம்  மாவட்டத்தில் நடந்த பேரிடர்களின்போதெல்லாம் நாங்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்’ என்கிறார் ஜெய்சல். பெண்கள் படகில் ஏற  வெகு இயல்பாகவும் தன்னிச்சையாகவும் தன் முதுகைத் தந்து உதவினார் ஜெய்சல். பெண்களுக்கு, குறிப்பாக, சேலை, சுடிதார், பர்தா  அணிந்தவர்களுக்கு படகில் ஏறுவது சிரமமாக இருக்கும். திரைப்பட இயக்குநர் வினயன் உட்பட பலர் அவரைப் பாராட்டி வெகுமதியாக நிதி  அளிக்க முன்வந்தபோது அதை அப்படியே நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் ஜெய்சல்.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு தலா மூவாயிரம் ரூபாய் தொகையும், மீட்புப் பணிகளின்போது சேதமடைந்த  படகுகளை சீரமைப்பதற்கான தொகையையும் வழங்கிவிடுவதாக அறிவித்திருக்கிறது கேரள அரசு.  எனினும் பல மீனவர்கள்  அத்தொகையை நிவாரண நிதிக்கே நன்கொடை செய்யவிருப்பதாகத்தெரிவித்திருக்கின்றனர். காவல்துறையிலிருந்து சுகாதாரத் துறை வரை  அனைத்து அத்தியாவசிய சேவைத்துறைகளும் துரிதகதியில் இயங்கி இரவுபகலாக வேலை செய்திருக்கின்றன. போதுமான பாதுகாப்பு  உபகரணங்கள் இல்லாமல், பல காவலர்கள் மீனவர்களுடன் படகுகளில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து உதவியிருக்கின்றனர்.  ராணுவமும் கடற்படையும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

ஒத்துழைக்காத வானிலையும், கேரளாவின் புவியியலும் வான்வழியான மீட்பை கடினமாக்கின. ஹெலிகாப்டர்கள் பெரும்பாலும் உணவுப்  பொட்டலங்களையும் பிற நிவாரணப் பொருட்களையும் விநியோகம் செய்யவே பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவம் உலகிலேயே  இரண்டாவது பெரிய ராணுவமாக இருந்தாலும் கேரளாவிற்கு அனுப்பப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையும் வாகனங்கள்-ஹெலிகாப்டர்களின்  எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. அதிகாரபூர்வத் தகவலின்படி 26 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 364 முறை  பறந்திருக்கின்றன. 574 பேரை மீட்டிருக்கின்றன. இறந்தவர் களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டாமல் இருந்ததற்கு மீனவ சமுதாயத்தின்  அர்ப்பணிப்பும் அபாரமான மீட்பு நடவடிக்கையுமே காரணம் என்பது சந்தேகத்துக்கிடமின்றி தெளிவாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெள்ள பாதிப்பின் முதல் சில மணி நேரங்களுக்கு முழுதும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. மீட்புக்கான  கோரிக்கைகளால் சமூக வலைத்தளங்கள் நிரம்பின. மீட்புப் பணிகளுக்காக தரப்பட்டிருந்த தொலைபேசி எண்களை தொடர்புகொள்ள  முடியவில்லை என்கிற புகார்களும் அதிகம் காணப்பட்டன. ஒவ்வொருவரையும் மற்றவரை தொடர்புகொள்ள முயன்று அனைத்து எண்களும்  செயலிழந்தன. "நாங்கள் பதினைந்து பேர் இங்கிருக்கிறோம். கர்ப்பிணிப் பெண்களும் முதியவர்களும் எங்களோடு உள்ளனர். தயவுசெய்து  எங்களைக் காப்பாற்றுங்கள். நீரின் அளவு இரண்டாம் தளம் வரை உள்ளது. இப்போது நாங்கள் மொட்டைமாடியில் இருக்கிறோம். எங்களைக்  காப்பாற்றுங்கள்" என்று ஒரு செய்தி."ஏறத்தாழ ஆயிரம் பேர் இந்தக் கட்டடத்தில் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கர்ப்பிணிப் பெண்  பிரசவ வலியால் துடிக்கிறார். அவரைக் காப்பாற்றுங்கள்.

எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று இன்னொரு செய்தி. "ஒரு சின்னக் குழந்தை இறந்துவிட்டது. இங்கே பெண்களும் குழந்தைகளும் பலர்  உள்ளனர். கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளோம். தயவுசெய்து உதவுங்கள்" என்று இன்னொரு அழைப்பு. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள  கட்டுப்பாட்டு அறையில் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் பணியில் இருந்தபோது நான் பதிலளித்த அழைப்புகளில் இவை சில. பல  அழைப்புகள் இதுவே தங்கள் இறுதிச் செய்தி என்பது போலவே இருந்தன.இந்தப் பேரிடரின்போது கேரளா தன் ஒற்றுமையால் ஒரு  முன்மாதிரியாகி நிற்கிறது. குற்றஞ்சாட்டும் அரசியலுக்குள் காங்கிரஸ் தலைமையிலான எதிர்த்தரப்பு  நுழைய இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக்கொள்ளவில்லை. முதல்வர் செல்லுமிடங் களுக்கெல்லாம் கூடவே எதிர்க்கட்சித் தலைவரும் சென்றார்.  மீட்பு மற்றும்  நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவு மிகப்பெரிது.  இந்த நாட்களில் கேரளா வெள்ளத்தால்  மட்டுமல்ல, அன்பாலும் அக்கறையாலும் ஒற்றுமையாலும்கூட நிரம்பி வழிந்தது.

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தொகை அனுப்பக் கோரும் பரப்புரை மக்களால் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் கூட தங்கள்  பங்கை செலுத்தினர். ஒரு பெண், தன்னிடம் பணமில்லாததால், தன் காதணிகளைக் கழற்றித் தந்தார். பதினாறு வயதான வி.எஸ்.  ஸ்வஹாவும் அவருடைய சகோதரன் பிரம்மாவும் இணைந்து தங்கள் தந்தை சங்கரனிடம், 40 லட்ச ரூபாய் விலைபோகக்கூடிய தங்கள்  100 சென்ட் நிலத்தை தருவதற்கு ஒப்புதல் கேட்டனர். அவரும் அதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். சங்கரன் தன்னிடம் 10 ஏக்கர்  நிலமுள்ளதாகவும் ஒரு ஏக்கர் நிலத்தை அளிப்பதில் தனக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை எனவும் கூறுகிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளியான மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த விஷ்ணு கேரளாவில் கம்பளி விற்பவர். அவர் அருகில் இருந்த நிவாரண  முகாமுக்குச் சென்று தன்னிடம் இருந்த ஐம்பது கம்பளிகளை அப்படியே தந்துவிட்டுச் சென்றார். பின்னர் ஊடகங்களிடம் பேசும்போது,  கேரளாதான் தனக்கு உணவு தரும் இடம் என்றும் கேரள மக்கள் படும் துயரங்களைக் காணப் பொறுக்கவில்லை என்றும் கூறினார். மத்திய அரசு கேரளாவிடம் நடந்துகொண்ட விதம்தான் எல்லாவற்றையும்விட மிக மோசமான விஷயம். முதலில் 8000 கோடி இழப்பு  என்று மதிப்பிடப்பட்டது. எனவே கேரள அரசு உடனடி நிவாரணமாக 1220 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டது. (இதில் 820 கோடி  2017 வெள்ளத்தின்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கொடுக்கப்படவில்லை). இப்படிக் கோரிக்கை வைத்ததன் பின்னால், மத்திய  அரசு 100 கோடி ரூபாய்  நிவாரணம் அறிவித்தது.  

பின்னர் பிரதமர் கேரளாவுக்கு வந்து வெள்ளச் சேதங்களை பார்வையிட்டபின், கூடுதலாக 500 கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார்.  இதுவரை 80 கோடிதான் உண்மையில் கையளிக்கப்பட்ட தொகை. மீதமுள்ள தொகை சொல்லளவில்தான் உள்ளது. கேரள முதலமைச்சர்  அலுவலகத்தின் அதிகாரபூர்வத் தகவலின்படி, இதுவரை கேரளாவுக்கு 209 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் வந்து  சேர்ந்திருக்கிறது. கூடுதலாக 160 கோடி வரவேண்டி இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை எப்போதுமே மலையாளிகள் தங்கள் புகுந்த  வீடாகச் சொல்வதுண்டு. அங்கிருந்து 700 கோடிக்கான நிவாரணத் தொகையை அனுப்புவதாக அந்நாட்டு அரசு சொன்னது. ஐக்கிய அரேபிய  எமிரேட்ஸின் துணை அதிபர் ஷேக் முகமது, கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு தன் மக்களுக்கு  கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.  "இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கான வெள்ளச் சேதாரம் ஏற்பட்டிருக்கிறது.  நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஈத் பெருநாளையொட்டிய  ஈகையாக கேரளாவுக்கு உதவ முன்வாருங்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் கொள்கை முடிவெனக் கூறி மத்திய அரசு ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அளிக்க முன்வந்த உதவித்தொகையை ஏற்கவில்லை.  கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையையும் மத்திய அரசு  ஏற்கவில்லை. ஏற்கனவே கேரள மக்களுக்கு உள்ள துயரங்கள் போதாதென, கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ்  கேரளாவிலிருந்து வரும் உணவு மற்றும் உதவிக்கான கோரிக்கைகளை நிராகரித்தார்.

அவரைப் பொறுத்தவரை கேரளாவுக்கு உணவோ  மற்ற எந்த பொருளோ தேவையில்லையாம்; எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள் போன்ற திறமையான பணியாட்கள்தான் தேவையாம்.   உண்மையில் கேரளாவில்  பணியாட்களுக்குப் பஞ்சமில்லை.  சேதமடைந்த வீடுகளுக்கான மறுசீரமைப்புப் பணிகளை கட்டணம்  பெற்றுக்கொள்ளாமல் இலவசமாகவே ப்ளம்பர்கள் - எலெக்ட்ரீஷியன்களுக்கான தொழிற்சங்கங்கள் கேரளா முழுவதும் செய்துவருகின்றன.  மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களால் மலையாளிகளின் சமூக வலைத்தளப் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன.  இந்த  வெள்ளத்தின்போதான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளால் கேரளாவில் அக்கட்சிக்கு கல்லறை கட்டுவதற்காக,  சவப்பெட்டியின் கடைசி  ஆணியும் அறையப்பட்டுவிட்டது.

இந்தப் பேரழிவுக்கு ஒரு வாரத்துக்குப் பின்னும்கூட, ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் தெற்கில்  நடக்கும் இப்பேரழிவில் ஆர்வம் காட்டவில்லை. வந்த செய்திகளும் சரியான புரிதலற்று இருந்தன. ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே  உண்டு. "உங்களுக்கு பெரிய சேனல்களில் பணியாற்றும் (தேசிய ஊடகங்கள்) யாரையேனும் தெரிந்திருந்தால், டில்லியில் பொருத்தமாக  காய் நகர்த்த சரியான நபர்களை அறிந்திருந்தால், அவர்களை நாம் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறோம். மத்திய  அரசில் செல்வாக்கு செலுத்தக்கூடிய யாரையேனும் நீங்கள் அறிந்திருந்தால், சர்வதேச அளவில் தங்கள் அரசாங்கங்களை வலியுறுத்தி  இந்தியாவின் தெற்கு மூலையில் உள்ள கேரளாவுக்கு உதவிகள் செய்யமுடியும் அளவுக்கு யாரையேனும் உங்களுக்குத் தெரிந்தால்,  அவர்களுக்குச் சொல்லுங்கள் ‘எங்களுக்கு உதவி வேண்டும். தாமதிக்காமல் உதவ  வேண்டும்' எனச் சொல்லுங்கள்" என்கிறார் மூத்த  பத்திரிகையாளர் ஸ்ரீஜித் திவாகரன்.

மிகத் தீவிரமான விமர்சனங்கள் எழுந்தபின்தான் பலர் இவ்விஷயத்தையே கையிலெடுத்தனர். கேரளாவைச் சாராத இந்துத்துவ சங்  பரிவாரங்களின் விஷமப் பிரச்சாரமும் எடுபடவில்லை. பினரயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நிதியளித்து ‘இந்து சமூகம்'  உதவக்கூடாதென  சங் பரிவாரங்களுக்கு ஆதரவானவர்கள் என நன்கறியப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகளைப்  பரப்பினர். 

இப்பிரச்சாரத்திற்கு முரண் பாடாக, கேரளாவின் ஒரேயொரு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஓ.ராஜகோபாலும், கேரள  பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் தற்போதையை மிஸோரம் ஆளுநருமான கும்மானம் ராஜசேகரன் ஆகியோர் முதல்வரின்  கோரிக்கையை ஏற்று உடனடியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கணிசமான தொகையை அளித்தது மக்களிடையே வரவேற்பைப்  பெற்றுள்ளது. இணையத்தில் உள்ள இடதுசாரிகளின் பதில் பிரச்சாரத்தால் மட்டுமே இது சாத்தியமானது.இப்போது இந்த நெருக்கடியான  நிலைமையின் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறோம். நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த  நிலையில் ஒரு மாநில அரசு மக்களிடையே புகழ் பெறுவதென்பது அத்தனை எளிதல்ல. கோளாறுகளும் அதிருப்தியும் இல்லாத இடமே  இல்லை. ஆனால் இப்போதைய தேவை கைகள் கோர்த்து  ஒன்றாய் இருத்தல் மட்டுமே. இன்னும் நீண்ட தொலைவு செல்லவேண்டி  இருக்கிறது.