செல்லுலாயிட் பெண்கள்



அமர காதலின் நாயகி எம்.ஆர்.சந்தான லட்சுமி

பா.ஜீவசுந்தரி - 44

அகன்று விரிந்த கண்கள், அலைபாயும் கூந்தல், அழகான தோற்றப் பொலிவு, பார்ப்பதற்கு லட்சணமான முகம், என்றும் நமக்குள் ஒருவராய்  நினைக்கத் தோன்றும் எளிய தோற்றம். 1930களில் தொடங்கி 1950களின் இறுதி வரை 20 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.   சந்தான லட்சுமி நடித்த ஒரு சில படங்களை மட்டுமே பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. 1937ல் எம்.கே. தியாகராஜ பாகவதர்,  எம்.ஆர்.சந்தான லட்சுமி இணைந்து நடித்த ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் கதாநாயகி சந்தானலட்சுமியைப் பார்க்கும்போது நமக்கு நெருங்கிய  ஒரு உறவினரைப் பார்ப்பது போன்ற உணர்வே எழுந்தது. சோழ நாட்டு இளவரசி அமராவதியின் ஆடை அணிமணிகள், அலங்காரம் என  அனைத்துமே அந்தக் கால மணப்பெண்ணுக்கு எவ்வாறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்குமோ அவ்வளவே… அதிர்ந்து பேசாமல்  மென்மையாக வசனங்களை உச்சரிக்கும் விதமும் அவ்வாறே. இயல்பான பேச்சு, இனிமையாகப் பாடும் திறன் என அந்தக் கால நாடகம்  மற்றும் சினிமாவுக்கு ஏற்ற அனைத்துத் திறன்களையும் கொண்டிருந்த சந்தானலட்சுமியின் குடும்பத்தில் நிலவிய வறுமைச்சூழல் நடிப்புத்  துறையை நோக்கி அவரை உந்தித் தள்ளியது.

கும்பகோணத்திலிருந்து சென்னையை நோக்கி…


கும்பகோணத்தைச் சேர்ந்த கல்கத்தா சுப்பய்யரின் மகள் சந்தானலட்சுமி. கும்பகோணத்துக்கும் கல்கத்தாவுக்கும் ஸ்நான ப்ராப்தி கூட  கிடையாது. அது என்ன சம்பந்தமோ, சுப்பய்யருக்கு அப்படி ஒரு பட்டப்பெயர். இந்த சுப்பய்யர் ஒரு பின்பாட்டுக்காரர், அப்போதைய பிரபல  சங்கீத வித்வான் பாலக்காடு அனந்தராம பாகவதரின் கச்சேரிகளில் பின்பாட்டுப் பாடி அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் கஷ்ட  ஜீவனம் நடத்தி வந்தவர்; ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். இப்போது போல் எல்லாம் இல்லை,  அப்போது கச்சேரி செய்யும் பாகவதருக்கே வருமானம் போதாத காலம் அது.

குடும்ப நிலையை உத்தேசித்து, வருமானம் தேடி கும்பகோணத்திலிருந்து மனைவி, மகன், மூன்று வயது மகளுடன் மதராஸப் பட்டினம்  வந்து சேர்ந்தார். ஆனால், பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாமல் போகவே, வறுமை குடும்பத்தைப் பசியிலும் பட்டினியிலும்  தள்ளியது. அதில் உழல விரும்பாமல் ஒரே மகன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போனான். நான்கு ஆண்டுகள் ஓடி  மறைந்தன. மகளுக்கு ஏழு வயதானபோது, தந்தை கல்கத்தா சுப்பய்யரும் காலமானார். தாயும் மகளுமாய் குடும்பம் நிர்கதியாக நின்றது.  இனிமையான குரலில் நன்றாகப் பாடத் தெரிந்திருந்தது சந்தானலட்சுமிக்கு. தந்தையின் இசையறிவு அச்சு அசலாய் மகளுக்கும்  வாய்த்திருந்தது.

பக்கத்து வீட்டில் குடியிருந்த துரைசாமி அய்யங்கார் என்ற இளைஞர் சந்தான லட்சுமியின் பாடல்களைக் கேட்டு சிறுமியின் இசையிலும்  குரலிலும் மயங்கினார். ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக வேலை செய்து வந்த அவர், அவ்வப்போது நாடகங்களிலும் சிறு சிறு  வேடங்களில் தலைகாட்டி வந்தார். சந்தானலட்சுமி மீது மெல்ல மெல்லக் காதல் பித்தம் மண்டை வரை ஏறியிருந்தது அவருக்கு. அக்கால  வழக்கப்படி எட்டு வயசு சந்தான லட்சுமியை பால்ய விவாகம் செய்து கொண்டார். வறுமை மட்டும் இவர்களை விட்டு ஓடத் தயங்கி,  பின்னாலேயே தொடர்ந்து பயணித்தது. நான்காண்டு இடைவெளியில் சந்தானலட்சுமி, இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்ததால், குடும்ப  உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்கானது.

வறுமையைத் துரத்தி அதிலிருந்து மீள, இனிய குரலும் அழகிய தோற்றப் பொலிவும் கொண்ட மனைவியை நாடகங்களில் நடிக்க  வைப்பதன் மூலம் பொருளாதார நிலையைக் கொஞ்சம் உயர்த்திக் கொள்ளலாமே என்ற எண்ணம் மின்னல் கீற்றாய் துரைசாமி  அய்யங்காருக்குள் தோன்றியது. ஆனால், சந்தானலட்சுமியோ அதற்கு இசையவில்லை. நண்பர்களின் ஆலோசனை, வற்புறுத்தல்,  குடும்பத்தின் வறுமை அனைத்தும் சேர்ந்து அவரை நாடக மேடையில் கொண்டு போய்ச் சேர்த்தது. விளைவு, பன்னிரண்டு வயதில் இரு  குழந்தைகளுக்குத் தாயான சந்தான லட்சுமி நாடகக்குழுவில் சேர்ந்து நடிகையானார். அதன் பின்னர் தொடர்ச்சியாக நாடகங்கள், நடிப்புத்  தொழிலுக்குத் தன் விருப்பமின்றி சூழல் காரணமாய் வந்து சேர்ந்தாலும் மிகக் குறுகிய காலத்திலேயே திறமையான நடிகையாகத் தன்னை  வளர்த்துக் கொண்டார்.

ஸ்பெஷல் நாடக நடிகையாய் முன்னேற்றம்


‘ஸ்டார் தியேட்டரிங் கம்பெனி’, இது கந்தசாமி முதலியாரின் நிர்வாகத்தில் பிரபலமான ஒரு நாடகக் கம்பெனி. மதராஸ் கந்தசாமி  முதலியார் மிகச் சிறந்த நாடக நடிகர். அந்தக் காலத்திலேயே தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர்.  ஷேக்ஸ்பியர் எழுத்துகளில் மயங்கி படிக்கும் காலத்திலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்தி அதில் நடித்தும் வந்தார். ‘நாடகத்தந்தை’  பம்மல் சம்பந்த முதலியாருடன் இணைந்தும் நடித்தவர். அவரின் புகழ் பெற்ற நாடகமான ‘மனோகரா’வில் சம்பந்த முதலியார்  மனோகரனாகவும் கந்தசாமி முதலியார் வசந்தசேனையாகப் பெண் வேடமேற்றுப் பெயரும் புகழும் பெற்றவர்கள்.

சந்தானலட்சுமி அந்தக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற கதாநாயகனான  எம்.கே.ராதா, கந்தசாமி முதலியாரின் மகன். நடிப்பின் மீது கொண்ட மாறாக் காதலால் இவர் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல்,  அப்பாவின் வழியில் நாடகத்துறைக்கு வந்து சேர்ந்தவர். தந்தையும் மகனும் இணைந்தே பல நாடகக் குழுக்களில் சேர்ந்து ஏராளமான  நாடகங்களிலும் நடித்தனர். தந்தை பட்டதாரி என்றால், மகனோ பள்ளிக்கல்வியையும் முடிக்காதவர். 1928ல் எம்.கே. ராதாவுடன் இணைந்து  பல நாடகங்களில் சந்தானலட்சுமியும் நடித்தார். பின்னாட்களில் வேறு சில புகழ்பெற்ற நடிகர்களான எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றவர்களும் அந்த நாடகக் கம்பெனியில் இருந்தனர். மதராஸ் மாகாணம் தவிர, மலேயா, பர்மா, ரங்கூன் போன்ற  நாடுகளுக்கும் இவர்கள் ஆறு மாத ஒப்பந்தத்தில் சென்று நாடகங்களில் நடித்து வந்தனர்.

அதன் பின் புளியம்பட்டி நாடகக் கம்பெனியில் இணைந்து நடிகை எஸ்.ஆர். ஜானகியுடன் இலங்கைக்குச் சென்று நாடகங்களில் நடித்து  வந்துள்ளார் சந்தானலட்சுமி. புகழ் பெற்ற நடிகையாக ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்தார். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடகங்கள்  இசைத்தட்டுகளாக வெளியிடப்பட்டு அதுவும் விற்பனையில் சக்கைப்போடு போட்டது. அப்போதைய பிரபல இசைத்தட்டுக் கம்பெனியான  கொலம்பியா கம்பெனி, இவர் சாவித்திரியாக நடித்த ‘சத்தியவான் சாவித்திரி’ நாடக இசைத்தட்டினை வெளியிட்டது.

நாடகத்திலிருந்து சினிமாவை நோக்கி …..

நாடகங்களில் உச்ச ஸ்தாயியில் பாடியும் வசனம் பேசியும் நடித்து வந்த நடிக, நடிகையர் பேசாப்படங்களில் பொம்மை போல் நடிக்க  விரும்பவில்லை. அதில் நடித்தவர்கள் பெரும்பாலும் ஸ்டண்ட் நடிகர்களும் நாட்டிய மங்கையரும்தான். ஆனால், படங்கள் பேசத்  தொடங்கிய பிறகோ நிலைமை தலைகீழானது. நாடகங்களில் ஹார்மோனியம் வாசித்துப் புகழ் பெற்ற, ‘ஹார்மோனியச்  சக்கரவர்த்தி’  என்று பெயரெடுத்திருந்த கே.எஸ். தேவுடு அய்யர் சிபாரிசால் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. கணவர் முயற்சியால்  சந்தானலட்சுமியும், அதை நோக்கித் தள்ளப்பட்டார். நாடகப் புகழ் அதற்குக் கை கொடுத்தது.

1935 –ல் ‘ராதா கல்யாணம்’ திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் நுழைந்தார். இப்படத்தில் இவருடன் நடித்திருந்தவர் கர்நாடக  இசைக்கலைஞர் எஸ்.ராஜம். ‘சிவகவி’ படத்தில் முருகனாக நடித்தவர். பாகவதரிடம் ‘முட்டை’யாகிய தன்னைப் பாடும்படி கேட்டுத்  தொந்தரவு செய்தவரும் இவர்தான். ஓவியக் கலைஞராகவும் பின்னாளில் புகழ் பெற்றவர். திகில் படங்களை இயக்கி நடித்தவரும் பின்னர்  வீணை வித்வானாக இசையுலகில் ஜொலித்தவருமான எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரர் இவர்.

‘ராதா கல்யாணம்’ படம் சரியாகப் போகவில்லை. பின்னர் இதே ஆண்டில் ‘சந்திரஹாஸா’ என்ற படத்திலும் நடித்தார். இந்தப் படத்தில்  இவருடன் நடித்தவர் கர்நாடக இசைக்கலைஞர் வி.என்.சுந்தரம். ‘மணமகள்’ திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து இவர்  பாடிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலின் இறுதியில், ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி’ என்று  பாலையாவுக்காக ஒலிக்கும் குரல் இவருடையது. காலம் கடந்து இன்றைக்கும் அவர் பேர் சொல்லி நிற்கும் பாடல் இது.
காவிய நாயகி அமராவதி

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்த ‘அம்பிகாபதி’ படத்தின் மூலம் இவரின் நிலை மேல்  நோக்கி உயரத் தொடங்கியது. இன்றளவும் காதலுக்கு உதாரணமாகச் சொல்லப்படும் அமர காவியக் காதல் கதை. கற்பனை கலந்த கர்ண  பரம்பரைக் கதை. அதுவரை புராணக் கதைகளையும் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசக் கதைகளை மட்டுமே படமாக்கிக்  கொண்டிருந்த நேரத்தில் சரித்திரக் கதைகள் வெளிவரத் தொடங்கிய காலகட்டம் அது.

1936ல் ’ராஜா தேசிங்கு’, ‘பக்த கபீர்தாஸ்’ என்று இரு சரித்திரப் படங்களே வெளி வந்திருந்தன. மூன்றாவதாக 1937ன்  இடையில்  ‘அம்பிகாபதி’ வெளியானது. அதுவரை வெளியான படங்களை விட நெருக்கமான காதல் காட்சிகள், இளங்கோவனின் கவித்துவம் மிக்க  வசனங்கள், பாபநாசம் சிவனின் பாடல்கள் மற்றும் இசை, எல்லீஸ் ஆர். டங்கன் என்ற அமெரிக்கரின் இயக்கம் என்று அனைவரின்  கவனத்தையும் குவித்த படம் இது. ஷேக்ஸ்பியரின் சாகாவரம் பெற்ற ரோமியோ – ஜூலியட் காதலைப் போன்றே அம்பிகாபதி–-அமராவதி  காதலையும் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுக்க எண்ணி தமிழுக்குச் சில புதுமைகளையும் அளித்த படம். தமிழ்த் திரைப்பட விமர்சகர்களால்  குறிப்பிட்டுச் சொல்லப்படும் உப்பரிகைக் காதல் காட்சிகள் உண்மையிலேயே சிறப்பானவை என்பதைத் தலைமுறை தாண்டிய  ரசிகர்களாலும் ஏற்க முடிகிறது. இப்படம் தந்த வெற்றி 1930- களில் தொடங்கி 1940-கள் வரை முன்னணிக் கதாநாயகியாக  சந்தானலட்சுமியை வலம் வரச் செய்தது.

தன் அந்தரங்கத் தோழி சுந்தரி (டி.ஏ.மதுரம்)யுடன் உரையாடும் காட்சிகளில் இயல்பான பேச்சுத் தமிழில் நீளமாக இழுத்துப் பேசுவதும்  ‘அடியே, சுந்தரீஈஈஈஈ… சொல்லு சுந்தரீஈஈஈஈ…….’ என்று நீட்டி முழக்குவதும் வெகு இயல்பு. கொலைக்களத்தில் அம்பிகாபதியை  சிரச்சேதம் செய்ய வெட்டுக் கத்தியை ஓங்கியவுடன் அது பூமாலையாக அவன் கழுத்தில் விழுகிறது. அதைக் கண்டு ஆத்திரத்துடன்  குலோத்துங்க சோழன் (ரங்காச்சாரி) தன் குறுவாளால் அம்பிகாபதியை நெஞ்சில் குத்திக் கொல்கிறான். அமராவதியும் அவன் பிணத்தின்  மார்பில் உயிரற்று விழுகிறாள். அடுத்து ‘சுபம்’ கார்டு போடப்படுகிறது. ‘அடப்பாவிகளா! கொன்ற பிறகு என்ன சுபம் வேண்டியிருக்கு?’ என்ற  சிந்தனையும் சிரிப்பும் எழுந்தது, மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்தபோது. 1939-ல் ‘பக்தப் பிரகலாதா’ படம் வெளியானது. பிரகலாதனின்  தாய் வேடம் சந்தான லட்சுமிக்கு. சிறுவன் பிரகலாதனாக நடித்தவர் மாஸ்டர் டி.ஆர். மகாலிங்கம், தன் வசீகரக் குரலால் பின்னாளில்  ரசிகர்களை மயங்க வைத்தவர். இப்படத்தில் இந்திரனாக எம்.ஜி.ஆர் சிறு வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
 
வழக்கு மன்றத்துக்குப் போன வாழ்க்கை…


பிறந்தது முதல் வறுமையை மட்டுமே சந்தித்து வந்த சந்தானலட்சுமி, இப்போது அதன் பிடியிலிருந்து விடுபட்டு சற்றே ஆசுவாசப்  பெருமூச்சுடன் படங்கள், நடிப்பு என்று நிம்மதியாய் இருந்த நேரத்தில் குடும்பச்சூழல் அவர் அமைதியைக் குலைத்தது. அச்சுக் கோர்க்கும்  வேலையை விடுத்து வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த கணவர் துரைசாமி அய்யங்கார் முரண்பட ஆரம்பித்தார்.  ‘பொம்பளை’ சம்பாதித்துக் குடும்பம் நடத்துவதால் ஏற்பட்ட ‘ஈகோ’, ஆண்பிள்ளையான தான் வீட்டில் ‘சும்மா’ இருக்கிறோம் என்ற விரக்தி  மனப்பான்மை, எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவரை ஆட்டிப் படைத்தன. கணவன்-மனைவி பிரச்சனை முற்றிப் போனதால் வீட்டை விட்டு  வெளியேறியதுடன் கோர்ட் படியும் ஏறினார்.

இன்றைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சனை, 1930களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நன்கு  உணர முடிகிறது. ‘நாடகத்திலும் சினிமாவிலும் நடிக்கலாம்’ என்று ஆலோசனை சொன்னவரே இப்போது எதிரியாக மாறிப் போனார். ‘ஒரு  சினிமாக்காரியுடன் மகன் வளர்வது சரியல்ல’ என்று இப்போது அவருக்கு ‘ஞானோதயம்’ தோன்றி விட்டது. குழந்தையைத் தன்னிடம்  ஒப்படைக்க வேண்டுமென்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சந்தான லட்சுமி இதனால் கோபமும் வருத்தமும் அடைந்தாலும்  மனதைத் தளர விடாமல், எதிர்மனு தாக்கல் செய்தார். ‘அவருக்கே வருமானம் இல்லாதபோது, குழந்தையை எப்படி அவரால் கவனித்துக்  கொள்ள முடியும்? அத்துடன் என்னையும் அவர் கொடுமைப்படுத்துகிறார்’ என்று அந்த மனுவில் சந்தானலட்சுமி குறிப்பிட்டிருந்தார்.

இரு  தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டார், துரைசாமி அய்யங்காரின் மனுவை நிராகரித்தனர். வேண்டுமென்றால் ‘கார்டியன் உரிமை’ கேட்டு வழக்குத் தொடரும்படி அவருக்கு நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்தது. ஆனால், அவர்  அவ்வாறு வழக்கு எதுவும் தொடுக்கவில்லை. மேற்கொண்டு கோர்ட், வழக்கு என்று செலவிட அவருக்குப் பொருளாதார வசதியுமில்லை.  மீண்டும் மனைவியின் வருமானத்திலிருந்துதான் அவர் தன் வழக்கை நடத்த வேண்டும். நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு,  மீண்டும் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது என்ற நல்ல முடிவெடுத்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் துரைசாமி அய்யங்கார்.  இந்தக் குடும்பச் சிக்கல்களாலும், கோர்ட், வழக்கு பிரச்சனைகளாலும், சந்தான லட்சுமியின் வாழ்க்கையில் இரண்டாண்டுகள் நிம்மதியின்றி  ஓடி மறைந்தன. 39ல் தொடங்கிய வழக்கு 41ல் முடிவுக்கு வந்தது.

மீண்டும் படங்களில் பரபரப்பானார்

1940ல் ‘சதி முரளி’ என்று ஒரு படம். இந்தப் படத்தில் இரு வேடங்கள் சந்தானலட்சுமிக்கு. ஒன்று முரளி, மற்றது கிருஷ்ணன் வேடம்.  ஆண்கள் பெண் வேடமிடுவதும் பெண்கள் ஆண் வேடமிடுவதும் வழக்கத்தில் இருந்தன. இதனைத் தொடங்கி வைத்தவர் கே.பி.சுந்தராம்பாள்  என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பல சர்ச்சைகளை உருவாக்கிய இந்த மாற்று வேடப் பிரச்சனை, நிலைமை மாறியதால் இப்போது  ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. தற்போதும் தீராத பிரச்சனையான சாதி விட்டு சாதி காதல்தான் இந்தப் படத்தின் கதையும்.  உயர் சாதிப் பெண்ணை தாழ்ந்த சாதி இளைஞன் காதலிப்பதால் தோன்றும் இடர்பாடுகள். அதையெல்லாம் எதிர்கொண்டு இருவரும்  ஒன்றிணைவதுடன் சுபம்…. காதலனாக நடித்தவர் பழைய நாடக இணை எம்.கே.ராதா; காதலி சந்தானலட்சுமி.  
 
1941ல் பி.யு. சின்னப்பாவுடன் ‘ஆர்யமாலா’. இதுவும் ஒரு கர்ண பரம்பரைக் கதையே. காத்தவராயன் கதை. இதில் சக்தி தேவியாகக்  கடவுள் வேடம். 1942- ல் மேலும் முன்னேற்றம். ஆண்டுக்கு ஒரு படம் என்ற நிலை மாறி இந்த ஆண்டில் மூன்று படங்கள்.  ‘பிருத்விராஜன்’, ‘ஆராய்ச்சி மணி’, ‘தமிழறியும் பெருமாள்’. இதில் ஒரு பெண்பாற் புலவர் வேடம் ஏற்றுத் தமிழறியும் பெருமாளாக  நடித்துள்ளார். ‘பிருத் விராஜன்’ வெற்றிப்படம் என்றாலும் இவர் கதாநாயகி இல்லை. இந்தப் படத்தால் பலனடைந்தவர் பி.யு. சின்னப்பா  தான்.

நாயகிகளின் இறுதிப் புகலிடம் அம்மா வேடங்களே

1944-ல் ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் கதாநாயகன் பி.யு.சின்னப்பாவுக்கு ‘அம்மா’ வாகி விட்டார். மிகப் பெரிய வெற்றிப்படமாக இப்படம்  அமைந்தது. இதன் பிறகான படங்களில் எல்லாம் அம்மா வேடம். தான்.1948ல் ‘வீர அபிமன்யு’ படத்தில் பேர் சொல்லும் வேடம்.  எம்.ஜி.ஆர். அர்ஜுனனாகவும் சந்தான லட்சுமி சுபத்திரையாகவும். அபிமன்யுவின் தாய் சுபத்திரை. மகாபாரதப் போரில் சக்கர வியூகத்தை  உடைக்கும் அபிமன்யுவாக எஸ்.எம்.குமரேசன். போரில் கொல்லப்பட்ட மகனைத் தேடி அலைந்து போர்க்களத்தில் தலைவிரி கோலமாய்  அழுது அரற்றும் சுபத்திரை வேடத்தைச் சிறப்பாகவே செய்திருந்தார். அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைக்கும் படங்களில்  இதுவும் ஒன்று.

அதன்பின் வரிசையாக அம்மா வேடங்கள் மட்டுமே. 1950களில் இவர் அம்மா நடிகையாகவே அறியப்பட்டார். பிற்காலக் கதாநாயகர்களான  எம்.ஜி.ஆர்., சிவாஜி, சஹஸ்ரநாமம், எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி கணேசன் என்று அனைவருக்கும் அம்மாவாக நடித்தார். புதிய நாயக,  நாயகிகளின் வரவும் இந்த நிலைக்குக் காரணம். ஒரு சில ஆண்டுகள் வரை கதாநாயகி அந்தஸ்து, பின்னர் நடிகைகளுக்கே உரித்தான  தனிச்சொத்து, அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள். சந்தான லட்சுமியும் இதற்கு விதிவிலக்கில்லாமல் அதே பாணியில்தான்  பயணித்திருக்கிறார். இந்தத் திரையுலகில் எத்தனையோ பேர் வந்தார்கள், ஜெயித்தார்கள், நிலைத்து நின்றார்கள். சிலரோ ஒரு சில  படங்களுடன் காணாமல் போனார்கள். சந்தானலட்சுமி மிகுந்த வறுமைக்கும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இடையில் தன் திறமையால்  நீடித்து நின்றார் என்பதே அவருக்குப் பெருமை சேர்க்கக்கூடிய ஒன்று.

(ரசிப்போம்!)

எம்.ஆர்.சந்தானலட்சுமி நடித்த படங்கள்


ராதா கல்யாணம், சந்திரஹாசன், அம்பிகாபதி, பிரகலாதா, சதி முரளி, ஆர்யமாலா, ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதிச்சோழன்,  பிருத்விராஜன், தமிழறியும் பெருமாள், தாசிப்பெண் அல்லது ஜோதிமலர், பக்த ஹனுமான், ஜகதலப் பிரதாபன், ராஜ ராஜேஸ்வரி,  சாலிவாஹனன், ஆரவல்லி சூரவல்லி, கன்னிகா, அபிமன்யு, மாரியம்மன், காஞ்சனா, மனம் போல மாங்கல்யம், மதுரை வீரன்,  குலதெய்வம், காலம் மாறிப் போச்சு, ஆசை, புதையல்.