தீபாவளிக்கு ஆடைகள் பார்த்து வாங்குவது எப்படி?



சில டிப்ஸ்

இதோ… இதோ என்று தீபாவளி நெருங்கி வந்துவிட்டது. இனி வீடுகளில் துணிமணி எடுக்கிற படலம்  துவங்கிவிடும். சில நேரங்களில் குடும்பத்தோடு  கடைக்குப் போகும்போது பசங்களோட செல்ல இம்சைகளுக்கு நடுவில் நாம் வாங்கின உடைகளில் பட்டன் இருக்காது, ஜிப் சரியாக இருக்காது... இப்படி  சில தவறுகள் நேர வாய்ப்புண்டு. சில நேரங்களில் நம் கவனச் சிதறல்களாலும் இந்தத் தவறுகள் நேரலாம்.

வீட்டுக்கு வந்தபின் அதைப் பார்த்தால் நமக்கு மூட் அப்செட் ஆகிவிடும். அதற்குப் பிறகு எடுத்த உடையை மாற்ற வேண்டி இருக்கும். மறுபடி அதற்கு  ஓர் அலைச்சல் அலைய வேண்டி இருக்கும். அதுவும் மறுபடி செல்லும் போது நாம் விரும்பும் அதே கலர் அதே டிசைனில் அந்த ஆடை வகை  கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். அதனால் தீபாவளிக்கு உடைகள் எடுக்கும்போது கவனித்து வாங்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி  சொல்கிறார் டைனோஸ் துணிக்கடை உரிமையாளர் லஷ்மி பிரியா.

“தீபாவளிக்கு துணி எடுக்கச் செல்லும் முன் நம் வாட்ரோப்பை ஆராய்ந்து நம்மிடம் இல்லாத நிறம் என்ன? எந்த நிறத்தில் பல உடைகள் இருக்கின்றன  என்பதையெல்லாம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பச்சை நிறத்தில் இரண்டு மூன்று உடைகள் இருந்தால் துணி வாங்கும்போது  அந்த வண்ணத்தை தவிர்க்கலாம். அடுத்து நாம் வாங்க போவது பார்ட்டி வியரா? டெய்லி யூஸா அன்றாட பயன்பாடா அல்லது கேஷுவலாக என்ன  மாதிரியான உடை எடுக்கப்போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின் எந்தெந்த கடையில் துணி எடுக்கலாம். எந்த கடையில் யாருக்கு எடுக்கப் போகிறோம் என்பதை யோசித்து முடிவெடுத்துப் பின்  கிளம்பினால் குழப்பங்களை தவிர்க்கலாம். எவ்வளவு பட்ஜெட் என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும். கடைக்குச் சென்ற பிறகு எடுக்கும்  உடை யாருக்காக எடுக்கிறீர்களோ அவர்களுக்கு ஃபிட்டிங் சரியாக இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். அடுத்தது குவாலிட்டி செக்கிங்  செய்வது நன்று. அதாவது வாங்கும் உடையில் பட்டன்கள், ஊக்குகள், ஜிப், ஹாங்கிங்ஸ் அதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் உடையில் தையல் ரொம்ப ஓரத்தில் இருந்தால் அது ரிஸ்க். எனவே ஓவர்லாக்காவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  இல்லையெனில் அந்த உடையை மிகவும் பிடித்து எடுத்து வந்துவிட்டீர்கள் எனில் இன்னொரு தையல் போட்டுவிடுவது (மேல் தையல்) நல்லது.  வாடாமல்லி போன்ற அடர் நிறத்தில் உள்ள சில உடைகள் சாயம் போக வாய்ப்புண்டு. அதனால் அவை வெள்ளை நிற காம்பினேஷனில் இல்லாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். கல் பதித்த உடைகள் என்றால் பரவாயில்லை. பெரிய பெரிய கல் பொருத்திய ஆடைகள் என்றால் அவற்றை பராமரிப்பது  கடினம்.

விருப்பப்பட்டு வாங்கினால் அதனை மடக்காமல் வைக்க பாருங்கள். இடமில்லாத பட்சத்தில் மடக்கித்தான் வைக்க வேண்டும் என்றால் லேஸ் அல்லது  நெட் கிளாத்தில் படாதவாறு வைக்கவேண்டும். கல் அவற்றைக் கிழித்துவிட வாய்ப்புண்டு. பருத்தி ஆடையை லைட்டுக்கு அருகில் வைத்துப் பார்த்தால்  ஜன்னல் மாதிரி இடைவெளி தெரிந்தால் அதற்கு அடுத்த அளவில் உடை வாங்க வேண்டும். ஏனெனில் அந்த டிரஸ் சிங்க் ஆவதற்கு நிறைய  வாய்ப்புண்டு. ரேயான் கிளாத்தில் ஆடை வாங்கும் போது ரொம்ப டைட் ஃபிட்டிங் எடுக்கக் கூடாது. ரொம்ப  டைட் ஃபிட்டிங்கில் அந்த ஆடையை  போட்டால் ஓரங்களில் தையல் இருக்கும் இடங்கள் பிரிவது போன்று இருக்கும். கிழிவது போல் ஆகிவிடும்.

பட்டுத்துணிகள் வாங்கும்போது அவற்றை எப்படிப் பாதுகாப்பது என்று குறிப்பு கொடுத்திருப்பார்கள். அப்படி கொடுக்கவில்லை எனில் அந்தப் பட்டுத்  துணியை எப்படி பாதுகாப்பது? ட்ரை கிளினா, ஃபுல் டைம் ட்ரை வாஷா என்பது போன்று அது குறித்துக் கட்டாயம் கேட்டுத் தெரிந்து கொள்ள  வேண்டும். பொருளாதாரரீதியாகவும் அதாவது லிமிடெட் பட்ஜெட் என்றால் பார்ட்டி வியரை விட  கேஷுவல் வாங்கினால் நீண்ட நாள்  பயன்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தீபாவளிக்கு என்று கிராண்டாக வாங்காமல் தினசரி உபயோகத்திற்கான ஆடைகள் எடுத்தால்  தீபாவளிக்கு புதிதாகவும் போடலாம். அதன் பின் தினசரி உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
                                                        

ஸ்ரீதேவி மோகன்