பி12 குறைபாடா? எச்சரிக்கை !



விட்டமின் பி12, கோபலாமின் (Cobalamin) என்றும் குறிப்பிடுவார்கள். இது நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து. தினமும் சராசரியாக பெரியவர்களுக்கு  (2.4 ug) அளவு தேவைப்படும். நம் உடலுக்கு மிகச்சிறிய அளவே தேவைப்படுகின்ற ஊட்டச்சத்தாக இருந்தாலும் பல வேலைகளை செய்யத்  தேவைப்படுகின்ற மிக முக்கியமான விட்டமின் பி12. இதன் குறைபாடு மெதுவாகத்தான் பாதிப்பை வெளிப்படுத்தும். பாதிப்பு அதிகரிக்கும் போது தான்  இப்படி ஒரு பிரச்னை இருப்பது நமக்குத் தெரிய வரும் என்கிறார் உணவு ஆலோசகர் ஷீலா ஸ்வர்ணகுமாரி.

விட்டமின் பி12 குறைபாடு ஏற்பட காரணங்கள்

விட்டமின் பி12 உள்ள உணவுகளை போதிய அளவு எடுத்துக் கொள்ள தவறுவது. எடை குறைப்பு சர்ஜரி, ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள், எய்ட்ஸ்,  குடற்புழு தொற்று, குரோன்ஸ் நோய் (Crohn's Disease), வலிப்புக்கான மருந்துகள், ஆட்டோ இம்யூன் நோய் போன்றவற்றின் காரணமாக விட்டமின்  பி12 குறைபாடு ஏற்படலாம்.

அறிகுறிகள்

* கை, கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போதல்
* மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம்
* ஞாபக சக்தி குறைபாடு
* சிந்திப்பதில், பகுத்தறிதலில் சிரமம்.
* ஆட்டோ இம்யூன் நோய், எடை குறைப்பு சிகிச்சையினால் புரத குறைபாடு ஏற்பட்டு, விட்டமின் பி12 பாதிப்பால் ரத்த சோகை ஏற்படும்.
* நடப்பதில் சிரமம்
* சமநிலை தவறுதல் (பேலன்ஸ் இழத்தல்)
* உடல் பலவீனம், சோர்வு
* வாய்ப்புண், நாக்கு அழற்சி
* பார்வை நரம்பு பாதிப்பினால், பார்வை குறைபாடு.

இதனை ஆரம்ப கட்டத்தில் சரி செய்ய தவறினால், இதயம், மூளை, நரம்பு, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். விட்டமின் பி12 குறைபாட்டினை  மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ளலாம். ரத்த அணுக்களின் சோதனை (CBC Count) மூலமும் விட்டமின் பி12 அளவு  ஆகியவற்றினை தெரிந்து கொள்ளலாம். விட்டமின் பி12 குறைபாடு பொதுவாகக் காணப்படுவது தான். சைவ உணவு சாப்பிடுகிறவர்கள்,  முதியவர்களிடையே இந்த பிரச்னை இருக்கிறது. ஆரம்ப கட்ட குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதனை உணவுப்பொருட்களால் சரி செய்ய முடியும்.

விட்டமின் பி12 இருக்கும் உணவுப் பொருட்கள்

* பால் மற்றும் பால் பொருட்கள்
* மீன் (குறிப்பாக மத்தி மற்றும் சூரை மீன்)
* கோழிக்கறி, முட்டை.

சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் தானியம் மற்றும் பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த குறைபாடு அதிகமாக இருக்கும் போது உணவுடன்  டாக்டரின் ஆலோசனை படி விட்டமின் பி12 மாத்திரைகள் அல்லது ஊசி போட்டுக் கொள்ளலாம்.

ஸ்ரீதேவி மோகன்