செல்லுலாய்ட் பெண்கள்



அழகு நாயகிகளின் அழகிய அம்மா சந்தியா

பா.ஜீவசுந்தரி-51

திரைப்படங்களில் தானும் ஒருநாள் நடிப்போம், தென்னகம் அறிந்த நடிகையாவோம் என்று ஒருபோதும் அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த ஒரு குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்தவர். ஆனால், வாழ்க்கையில் நாம்  நினைப்பது போல் எல்லாம் நடந்து விடுவதில்லையே. அப்படி ஒரு விபத்தாகத் திரைத்துறைக்குள் நுழைந்து, 30 வயதில் அம்மா வேட நடிகையாக  மாறியவர்.

இவருக்கு முன் நடிக்க வந்த நடிகைகள் பலரும் ஒரு காலகட்டத்தில் நாயகிகளாக இருந்து பின் அம்மா வேடத்துக்கு மாறியவர்கள். அப்போதைய  பிரபல கதாநாயகிகளான பத்மினி, சாவித்திரி, தேவிகா, விஜயகுமாரி என்று அழகு நாயகிகளின் மிக அழகான அம்மாவாகவே பல படங்களில் நடித்துப்  பிரபலமானவர். பின் நாட்களில் தமிழகமே இவரின் மகளை ‘அம்மா’ என்று அழைத்துக் கொண்டாடியது. அம்மாவின் அம்மாவாக அறியப்படும் அவர்  நடிகை சந்தியா.  

எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த துயர வாழ்க்கை

ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரங்கசாமி அய்யங்கார்-கமலம்மா தம்பதிகளின் மூத்த மகளாக 1925 ஆம் ஆண்டு பிறந்தவர் வேதவல்லி.  இவரையடுத்து அம்புஜவல்லி, பத்மாசினி, ஸ்ரீனிவாசன் என்று மூவர். ரெங்கசாமி பணியாற்றியது பெங்களூரில். பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக  முடிக்காத 12 வயது வேதவல்லியை மைசூரைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு இரண்டாம் தாரமாக மணம் முடித்துக் கொடுத்தார்கள். முதல் மனைவி  ஜெயாவுடன் அவருக்கு விவாகரத்தாகியிருந்தது. வசதியான குடும்பம், கணவர் வழக்கறிஞர்.

ஆனாலும் வேலைக்கே போகாமல் வீட்டில் உட்கார்ந்து கேளிக்கைகளில் கவனம் செலுத்தியதால் சொத்து வெல்லக்கட்டியாய்க் கரைந்தது. இவ்வளவு  பிரச்சனைகளுக்கு இடையிலும் மகன் ஜெயக்குமார் அடுத்து மகள் அம்மு என்ற ஜெயலலிதா என இரு குழந்தைகள். அவர்கள் இருவர் மட்டுமே  வேதாவின் வாழ்க்கையை வசந்தமாக்கியவர்கள். மகள் பிறந்து இரண்டாண்டுகளே ஆகியிருந்த நிலையில் வேதவல்லியின் கணவர் ஜெயராமன் 1950ல்  அகால மரணமடைகிறார். 25 வயதில் இளம் பெண் வேதவல்லி கணவனை இழந்து இரு குழந்தைகளுடன் தனித்து நிற்க வேண்டிய நிலை.

குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும், எங்காவது வேலைக்குப் போய் கௌரவமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் பிறந்தகத்துக்கு  பெங்களூர் திரும்புகிறார். வயதான பெற்றோர் வசம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு, தனக்குத் தெரிந்த தட்டச்சர் பணியில் வருமான  வரித்துறையில் வேலைக்குச் சேர்கிறார். வசதியான குடும்பத்து மருமகளாகத் தன் பொழுதைப் போக்க கற்றுக் கொண்ட தட்டச்சும், சுருக்கெழுத்தும்  அவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க, பொருளாதார பலம் பெற பேருதவியாக அமைந்தன. எதிர்பாராத திருப்பங்கள் சினிமாவில் மட்டுமல்ல,  வாழ்க்கையிலும் நிகழும் என்பதற்கு வேதவல்லியின் வாழ்க்கைச் சம்பவங்களே சாட்சி.  

வேதாவின் திரையுலக வழிகாட்டி வித்யாவதி

வேதவல்லியின் தங்கை அம்புஜவல்லி பற்றி இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அவர்தான் வேதவல்லிக்கு திரையுலகில் வழிகாட்டியவர். தன்  குடும்பத்தைச் சேர்ந்த அக்காள், அக்காள் மகள் என மேலும் இரு பெண்களும் நடிகைகளாக மாற அவரே ஆதாரப்புள்ளி. அவர் மட்டும் திரையுலகை  எட்டிப் பார்க்காமல் இருந்திருந்தால், சந்தியா, ஜெயலலிதா என இருவருமே நடிகைகளாகி இருக்கு வாய்ப்பில்லை. ஜெயலலிதாவும் கூட அவர்  விருப்பம் போல் கலெக்டராகவோ அல்லது குழந்தை குட்டிகளுடன் ஓர் இல்லத்தரசியாகவோ மாறியிருக்கலாம்.

அக்காள் வேதவல்லி அமை தியான அழகுக்குச் சொந்தக்காரர் என்றால், அம்புஜவல்லியோ நாகரிகமும் கவர்ச்சிகரமும் நிறைந்த அமர்க்கள அழகுப்  பெண்மணி. பெங்களூர் மஹிளா சமாஜத்தில் பள்ளிக்கல்வி கற்று, மேற்கொண்டு தனிப்பட்ட முறையில் பம்பாய் சென்று இண்டர்மீடியட் படிப்பையும்  முடித்து சில காலம் பம்பாய் ஜவுளி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியவர். மத்திய அரசுப் பணி என்றாலும்  அம்புஜவல்லி அதைத் தொடர விரும்பவில்லை. அழகும் கவர்ச்சியும் மூலதனமாய் இருக்க, அதையே தங்கள் விமானச் சேவைக்கான தேவையாகக்  கருதும் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விட விரும்பவில்லை.

அந்தப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். வசதி படைத்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்கும் காலம் அது. அதனால் திரையுலகைச்  சார்ந்தவர்கள் பலரின் நட்பும் கிடைத்தது. அதில் ஒருவர் நடிகை பத்மினி. அம்புஜவல்லியின் அழகு பத்மினியை ஈர்த்தது. நட்பு அடிப்படையில்  அம்புஜவல்லியிடம், ‘அழகாய் இருக்கீங்க, சினிமாவில் நடிக்கலாமே’ என்ற ஆலோசனையையும் வழங்கினார். அது அம்புஜவல்லியை இறுகப் பற்றிக்  கொண்டது. பத்மினி போட்ட தூபம் வீணாகவில்லை. சினிமாவுக்குச் செல்லும் முடிவைத் தீர்க்கமாக எடுத்தார் அம்புஜவல்லி.

சென்னைக்கு வந்து திரையுலகப் பிரவேசம் செய்தார் வித்யாவதியாக. சித்தூர் நாகையா நடித்து 1953ல் வெளியான ‘என் வீடு’ படத்தில் கவர்ச்சிகரமான  வில்லி வேடம் அமைந்தது. அதைத் தொடர்ந்து நடிகை பி.பானுமதி சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, இரட்டை வேடமேற்று நடித்த ‘சண்டி ராணி’  படத்தில் ஆடிப் பாடி நடித்து அமர்க்களப்படுத்தினார். மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். அக்காள் வேதாவின்  மனதுக்குள் ஆசைத்தீயை மூள வைத்தவர் வித்யாவதி. தானும் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரலாமே  என்ற எண்ணம் வேதவல்லியிடம் எட்டிப் பார்த்தது.  

கற்கோட்டையில் அறிமுகம் சந்தியாவாக....

வித்யாவதிக்குத் துணையாக அவ்வப்போது படப்பிடிப்புத் தளங்களுக்கு வந்த சந்தியா பலரது கவனத்தையும் ஈர்த்தார். அமைதியான தோற்றமும்  அடக்கமான அழகும், காந்தமாய் ஈர்க்கும் பெரிய விழிகளும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளரான கெம்பராஜ் அர்ஸ் கண்களில் தென்பட்டது. தான்  அடுத்து தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க வைக்க விரும்பி வேதாவை அணுகினார். வேதவல்லிக்குத் தயக்கம் இருந்தாலும் தங்கையின்  வழிகாட்டுதலில் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

அலெக்ஸாண்டர் டூமாஸின் பிரெஞ்சு நாவல் ‘The Count of Monte Cristo’   ‘கற்கோட்டை’ யாகத் தமிழில் உருவெடுத்தது. கெம்பராஜ்  கதாநாயகனாகவும் கிருஷ்ணகுமாரி கதாநாயகியாகவும் நடிக்க, வேதவல்லியும் முக்கியமானதொரு பாத்திரத்தில் இப்படம் மூலம் சந்தியா என்ற பெய  ரில் 1954ல் அறிமுகமானார். முதல் படத் திலேயே நீதிபதியின் மனைவியாகவும் இரு குழந்தைகளுக்குத் தாயாகவும், கணவராலேயே விஷம்  கொடுத்துக் கொல்லப்படும் அவலமான பாத்திரம் அமைந்தது.

துடிதுடித்துச் சாகும் அந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்தார் சந்தியா. இம்மாதிரியான நடிப்பு பெண்களின் கண்ணீரோடு ஆதரவையும்  சம்பாதித்துக் கொள்ளும். அதுதான் நடந்தது. ஆனால், ஒரு சில பத்திரிகைகள் மட்டும் கடுமையாக விமர்சித்து எழுதின. வித்யாவதி நடிக்க வந்த  ஓராண்டுக்குள் சந்தியாவும் திரையுலகில் நுழைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் ஒரு கற்கோட்டையாகத் தன்னை  அழுத்தமாக நிலைநிறுத்திக் கொண்டார்.  

அக்காளும் தங்கையும் இணைந்தே நடித்த படங்கள்

தமிழின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான கே.சுப்பிரமணியம் கன்னடத்தில் இயக்கிய  ‘ஸ்திரீ ரத்னா’ படத்தில் அக்காள் சந்தியாவும், தங்கை  வித்தியாவதியும் இணைந்தே நடித்தார்கள். 1954ல் கன்னடத்தில் சந்தியா நடித்து வெளிவந்த ‘நடசேகரா’ கன்னடப்படம், தமிழில் ‘மனோரதம்’ என்ற  பெயரில் எடுக்கப்பட்டபோது, சந்தியா, வித்யாவதி இருவரும் இணைந்தே நடித்தனர். ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகங்களின் கதாசிரியரான பட்டு எழுதிய  கதை ‘சமய சஞ்சீவி’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. பிரபல ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளர் மற்றும் ஸ்டுடியோ அதிபரான வி.எஸ். ராகவன்  (இவர் நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல) இயக்கத்தில் பட்டு கதாநாயகனாக நடித்தார்.

இப்படத்தில் கதாநாயகியாக வித்யாவதியும், முக்கியமான குணச்சித்திர வேடத்தில் சந்தியாவும் நடித்தனர். இந்தப் படம் எண்ணிக்கையில் ஒன்றைக்  கூட்டியதைத் தவிர இருவருக்கும் பெரிதாகப் பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால், தயாரிப்பாளர் ராகவனுக்கு சந்தியாவின் மீது பெரும் மதிப்பை  ஏற்படுத்தியது. அதன் விளைவு தன்னுடைய அடுத்த படமான ‘மணிமேகலை’யில் அவளது தாய் மாதவியாக நடிக்கும் வாய்ப்பை சந்தியாவுக்கு  வழங்கினார். அவரும் அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அற்புதமாகவும் நடித்து அனைவரின்  பாராட்டுதலையும் பெற்றார்.  

எம்.ஜி.ஆர் படத்தில் கிடைத்த வாய்ப்பு

பட்சிராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களப் பன்மொழிப் படம் ‘மலைக்கள்ளன்’. தமிழிலும் அதன்  தெலுங்கு வடிவமான ‘அக்கி ராமுடு’ இரு மொழிப் படங்களிலும் சின்னி என்ற பாத்திரத்தில் நடித்தார். கதாநாயகியாக பூங்கோதையாக நடித்த  பி.பானுமதியைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி, தான் மறைவாகத் தங்கியிருக்கும் மலைப்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வருகிறான்.

அங்கு அவனது பாதுகாப்பில் வேறு பலரும் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி சின்னி. அவள் பூங்கோதைக்கு பாதுகாப்பாக இருக்கிறாள்.  தேவைப்படும்போது, மலைக்கள்ளன் கொடுக்கும் செய்தியை மலையிலிருந்து தன் ஆட்டக் குழுவினருடன் மாறுவேடத்தில் ஊருக்குள் வந்து ரகசியமாக  பூங்கோதையிடம் சேர்க்கிறாள். கதாநாயகன் எம்.ஜி.ஆரின் சகோதரியாகவே அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் சந்தியா.

சிவாஜியின் படங்களிலும் பங்கேற்பு   

ஒவ்வோர் ஆண்டும் சந்தியாவின் வாழ்க்கையில் முன்னேற்றம்தான். பி.எஸ்.ரங்கா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் எடுத்த  ‘தெனாலிராமன்’ படத்தில் என்.டி.ராமாராவ் கிருஷ்ண தேவராயராக நடித்தார். அவரது பட்டத்து மகிஷி திருமலாம்பாள் வேடம் மும்மொழிகளிலும்  சந்தியாவுக்கே கிடைத்தது. தமிழில் தெனாலிராமனாகவும் கதாநாயகனாகவும் நடித்தவர் சிவாஜி கணேசன். மற்றோர் படம் ‘படிக்காத மேதை’.  இப்படத்தில் வளர்ப்புப்பிள்ளை ரங்கனாக சிவாஜி நடித்திருப்பார். ரங்காராவின் மருமகள்களில் ஒருவராக சந்தியா தோன்றுவார்.

வசதி வாய்ப்புகள் இருக்கும்போது அந்தக் குடும்பம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். ‘இன்ப மலர்கள் பூத்துக்  குலுங்கும் சிங்காரத் தோட்டம், நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்’ என்று அண்ணிகள் சந்தியாவும் எஸ்.ஆர்.சிவகாமியும் பாட  நாத்தனார் ஈ.வி.சரோஜா துள்ளாட்டம் போட அமர்க்களமாய் வாழும் குடும்பம், நொடித்துப் போன பின் மருமகள்களின் குணமும் திரிந்து சுருங்கிப்  போகும். சந்தியாவுக்கு நடிப்புடன் கிடைத்த நல்லதோர் பாடல் காட்சி அது. ‘கர்ணன்’ படத்திலோ சிவாஜிக்கு மாமியார் வேடமேற்றார்.

இப்படியான வேடங்களே கிடைத்து வந்த நிலையில் ‘பலே பாண்டியா’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு. மூன்று சிவாஜிகளில்  ஒருவருக்கு தேவிகாவும், வயதான சிவாஜிக்கு சந்தியாவும் ஜோடிகள். படத்தின் பிற்பகுதியில்தான் சந்தியா திரையில் தோன்றுவார். அடக்கமான,  அமைதியான அம்மா வேடங்களை ஏற்று நடித்தவருக்கு இது முற்றிலும் மாறுபட்ட வேடம்தான். விஞ்ஞானியான, ஏழ்மை நிலையிலிருக்கும்  கணவனை ஓயாமல் பணம் கேட்டு நச்சரிக்கும் பாத்திரம்.

கடன்காரர்கள் வாசலில் வந்து நின்று பணம் கேட்கும்போது அவர்களை அசரடிக்கும் விதமாக ஆங்காரமாக பதிலளிப்பதும், இறந்து போன  கொழுந்தனுக்கு சொத்தில் பங்கு கிடைக்கிறது என்று தெரிந்தவுடன், ஆய்வுக்கூடத்துக்குத் தீவைத்து கணவர் இறந்து விட்டார் என நாடகமாடுவது,  கணவனின் தலைக்கு டை அடித்து இளைஞராக மாற்றி, அவரது தம்பி என ஆள் மாறாட்டம் செய்வது என சந்தியா அடிக்கும் கூத்துகள்  நகைச்சுவையின் உச்சம்.

ஆனால், அவர் எதிர்பாராத, அறியாத ஒன்று இறந்து போன கொழுந்தனுக்குத் திருமணமாகி மனைவி இருக்கிறாள் என்பது. அந்த மனைவி நேரில்  வந்து நிற்கும்போதும், தன் கணவருடன் நெருக்கமாக பேசுவதும் பழகுவதும் கண்டு பதறுவதும் பொறாமை கொள்வதும் கூட நகைச்சுவையின் கூறுகள்.  இப்படியும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்.  

ஆஹா.... இன்ப நிலாவினிலே மூன்று ஜோடிகள்

‘மாயாபஜார்’ படத்தின் ஒரு காட்சி. அபிமன்யுவும் வத்சலாவும் (ஜெமினி- – சாவித்திரி) இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்துக்  கொள்வதுடன், ‘ஆஹா…. இன்ப நிலாவினிலே… ஓஹோ ஜெகமே ஆடிடுதே’ என்று நிலவொளியில்  ஆற்றில் படகோட்டியபடியே பாடிச் செல்வார்கள். வத்சலாவின் தாயார் ரேவதி இந்த இளம் காதலர்களின் காதலுக்கு பரம எதிரி. வேறென்ன? அந்தஸ்து பிரச்சனைதான். அதனால் இவர்கள் சந்திப்புக்கும்  தடை விதித்திருப்பார். அந்த நேரத்தில் வத்சலாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் ஆட்களை நியமித்திருப்பார்.

இதை உணர்ந்த வத்சலாவின் சித்தப்பா கிருஷ்ணன் உடனடியாக ருக்மணியை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு விரைவார். இளம் காதலர்களை  ரகசியமாக வேறு பாதையில் அனுப்பி வைத்து விட்டு, ருக்மணியுடன் அதே பாடலைப் பாடியவாறே ஆற்றில் படகோட்டிச் செல்வார். வத்சலாவைத்  தேடி வரும் அவளின் தந்தை பலராமனும் தாயார் ரேவதியும் இந்த மூத்த காதலர்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போவதும், ‘இந்த வயதில்  ருக்மணிக்கு இதெல்லாம் தேவையா?’ என்று கடிந்து கொண்டு வசனம் பேசுவதும் நிகழும்.

அடுத்து மீண்டும் ஆற்றில் படகோட்டியபடி அதே பாடலை மீண்டும் தொடர்பவர்கள் பலராமனும் ரேவதியும்(ஆர்.பாலசுப்பிரமணியம்-– லட்சுமிபிரபா).  போகிற போக்கில் தன் தமக்கை தன்னைப் பற்றி பேசிய விமர்சனக் கருத்துகளைக் காதில் வாங்கியதோடு மனதிலும் உள்வாங்கிக் கொண்ட ருக்மணி,  கிருஷ்ணனிடம் ’இந்த வயதில் என் தமக்கைக்கு இது தேவையா?’ என்று ரேவதி பேசிய அதே வசனத்தை அவருக்கே திருப்பி விடுவார். மூன்று  ஜோடிகள் இந்தப் பாடல் காட்சியில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் காலம் கடந்து இன்றளவும் வாய் விட்டு ரசித்துச் சிரிக்க  வைக்கும் காட்சி. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் இது.

அழகான ருக்மணியாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் சந்தியா. எம்.ஏ.வேணு தயாரிப்பில் 1958ல் வெளியான ‘சம்பூர்ண  ராமாயணம்’ படத்தில் ராவணன்(டி.கே.பகவதி) மனைவி மண்டோதரி. இசைக்கருவியான வீணையைத்  தன் கொடியின் சின்னமாகக் கொண்டவன்  ராவணன். அந்தப் பாத்திரத்துக்கு அற்புதமாகப் பாடியவர் இசைச்சித்தர் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன். ராகமாலிகையில் மிக அற்புதமாக ஒரு பாடலைப்  பாடுவார். ராகங்களுக்கான விளக்கமாகவும் அப்பாடல் அமையும். ஆளுக்கொரு கேள்வியைக் கேட்க மண்டோதரியும், ‘சுவாமி, கயிலைநாதனைத்  தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம்?’ என்று கேள்வி எழுப்புவார்.

மகளின் உயர்வுக்காக ஓய்வின்றி உழைத்தவர்

ஓய்வற்ற உழைப்பு அவருக்கு வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றத்தையும் வாரி வழங்கியது. எட்டு ஆண்டுகள் தன்னைப் பிரிந்து பெங்களூரில்  உள்ள மற்றொரு சித்தி பத்மாசினியின் பாதுகாப்பில் படித்துக் கொண்டிருந்த அன்பு மகள் ஜெயலலிதாவை அழைத்து வந்து சென்னையில் சர்ச் பார்க்  கான்வென்ட்டில் சேர்த்து விட்டார். மகளுடன் இணைந்த மகிழ்வைக் கொண்டாடும் விதமாக வாக்ஸால் கார் வாங்கினார். தி.நகர் சிவஞானம் தெருவில்  வீடு அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் வித்யாவதியும் வந்து சந்தியாவுடன் வசிக்கத் தொடங்கினார்.

அம்முவுக்கு நாட்டியப் பயிற்சி கே.ஜே.சரசாவைக் கொண்டு கற்பிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றத்துக்கு, அப்போதைய கர்நாடகா  முதல்வர் ஜாட்டி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை வகித்தனர். தங்கை வித்யாவதி மூலம் திரைத்துறையில் நுழைந்தாலும், அவரைத்  தாண்டி பேரும் புகழும் பெற்றார். பொருளாதார ரீதியான பலம் இருந்தால் மட்டுமே பெண்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும் என்பதை தன்  வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்ததாலேயே, மகளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவரையும் திரைத்துறையில் ஈடுபடுத்த  விரும்பினார். திரையுலகில் மகள் ஜெயலலிதாவின் உயர்வைக் கண்ணாரக் கண்டார்.

அதன் பிறகு சந்தியா படங்களில் நடிக்கவில்லை. போயஸ் தோட்டத்தில் தாயும் மகளும் இணைந்து வாங்கிய இடத்தில் பார்த்துப் பார்த்துக்  கட்டப்படுகிறது வேதா நிலையம். சந்தியா மீண்டும் வேதாவாகிறார். 1967ல் குடி புகுகிறார்கள். மிக இளம் வயதில் 1971ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு  சந்தியா மரணமடைகிறார். முதல்வர் ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் உயிருடன் இருந்த மூத்த, தன் அம்மா கால நடிகைகள், அவருக்கு  முந்தைய நடிகைகள் என அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தினார். அவருடைய அம்மா சந்தியா இல்லாமல் போனதுதான் குறை. தன்  அம்மாவை நினைவில் நிறுத்தியும் கூட அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.  

சந்தியா நடித்த திரைப்படங்கள்

கற்கோட்டை, மனோரதம், சமய சஞ்சீவி, மணிமேகலை, மலைக்கள்ளன், பிள்ளைக்கனியமுது, தெனாலிராமன், சம்பூர்ண ராமாயணம், மரகதம், செஞ்சி  லட்சுமி, லவகுசா, அன்னை, சந்தியா, படிக்காத மேதை, பாவை விளக்கு, பாக்தாத் திருடன், அன்பே தெய்வம், ரத்தினபுரி இளவரசி, சாரதா, இருவர்  உள்ளம், பலே பாண்டியா, தெய்வத்தின் தெய்வம், தாயில் லாப்பிள்ளை, காத்திருந்த கண்கள், குலமகள் ராதை, ஆசை அலைகள், கர்ணன், சாந்தி,

ஸ்டில்ஸ் ஞானம்
(ரசிப்போம்!)