சாதி ஆணவக் கொலையின் சாட்சி நான்



சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, உடுமலைப் பேட்டையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர் சங்கரின் மனைவி  கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது. சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின்  பாட்டியும் மாலையினை எடுத்துக் கொடுக்க இணையேற்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பறை இசை முழங்க கௌசல்யா-சக்தி  இணையர் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

சங்கரின் இளைய சகோதரர்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு கௌசல்யா-சக்தி இணையரை வாழ்த்தினர். தொடர்ந்து பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கௌசல்யா-சக்தி இணையர், அங்கிருந்த பறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து தாங்களும் பறை  இசைத்து ஆடினர். சாதி ஒழிப்புக் களத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற தொடர்ந்து  போராடுவேன்" என்று திருமணத்துக்குப் பிறகு கௌசல்யா கூறினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் பழநியைச் சேர்ந்த கெளசல்யா  ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த போது 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து  கொண்டனர். சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி கௌசல்யாவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த 2016 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்ட பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

சங்கரின் மனைவி கௌசல்யா தாக்குதலில் இருந்து தப்பியோடி, தனது பெற்றோருக்கு எதிராக சாட்சி அளித்தார். சங்கரின் மீதான சாதிய ஆணவப்  படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. சங்கர் கொலை வழக்கில் கெளசல்யாவின் பெற்றோர்  சின்னச்சாமி-அன்னலட்சுமி உள்பட உறவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பூர் சிறப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜன் ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும்  மற்றும் ஒரு வருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பை வழங்கினார்.

கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரின் சகோதரர் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா எனும் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபர் ஆகிய   மூவர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக கௌசல்யா கூறியிருந்தார். தொடர்ந்து  சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான தனது பிரச்சாரத்தை  முன்னெடுத்த கௌசல்யா, சாதிய வன்முறைகள் மற்றும் சாதிய ஆணவ படுகொலைக்கு  எதிராகவும், பெண்ணுரிமை செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட  வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.

இணையேற்பு நிகழ்வுக்குப் பிறகான ஊடகவியலாளர்கள் சந்திப்பில், “நான் சங்கரை திருமணம் செய்த போதும் எங்களை எதிர்த்தார்கள். தற்போது  சக்தியை திருமணம் செய்த போதும் சிலர் அதனை ஏற்கவில்லை. பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தனியாக முடிவெடுப்பதை பொதுச்  சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை” என தன் கருத்தை பதிவு செய்துள்ளார். சாதி எதிர்ப்புத் திருமணங்கள் பலவற்றை முன்நின்று  நடத்திவைத்துள்ள கௌசல்யா, சமீபத்தில் தெலுங்கானாவில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்யப்பட்ட பிரணாயின் காதல்  மனைவி அம்ருதாவை நேரில் சென்று சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி