பாலிவுட் ‘ராஜா’, ‘ராணி’யின் திருமண கொண்டாட்டம்!



பாலிவுட்டின் ஹாட் ஜோடிகள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இவர்களின் திருமண விழா, சஞ்சய் லீலா பன்சாலியின் படத்திற்கு சலித்தது அல்ல  என்பது போல், பிரமாண்டத்துடன் களைகட்டி இருந்தது. இவர்கள் நடித்த படம் போலவே இவர்களின் திருமண புகைப்படங்களும் சமூக  வலைத்தளங்களில் இன்றும் வைரலாக பரவி வருகிறது.

தீபிகா-ரன்வீர் காதல் ஜோடி இணைந்து நடித்த முதல் படம், கோலியான் கி ரஸ்லீலா ராம்-லீலா. தங்களின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்  என்பதால், அந்த திரைப்படம் வெளியான அதே தேதியில் தங்களின் திருமணத்தை நிகழ்த்தியுள்ளது. மோஸ்ட் வான்டெட் ஜோடிகளான இவர்களின்  திரைப்படம் போல இவர்களின் திருமண உடைகளும் ஃபேஷனும் ட்ரெடிஷனும் கலந்து பாலிவுட்டையே மிரட்டியுள்ளதுன்னு தான் சொல்லணும்.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பார்த்து பார்த்து இவர்கள் வடிவமைத்த உடைகள் பற்றிய விவரம் ேதாழிகள் உங்களுக்காக ...

திருமணத்திற்கு முன் ஆட்டம் பாட்டம் நிறைந்த விழா தான் மெஹந்தி - சங்கீத். மணப்பெண்ணின் கையில் மெஹந்தி கோலமிட, மறுபக்கம் ஆட்டம்  பாட்டம் என விழா பூண்டு இருக்கும். இத்தாலியில் பிரமாண்டமான நட்சத்திர விடுதியில் நடந்த மெஹந்தி மற்றும் சங்கீத் விழாவில், சப்யாசச்சி  கைவண்ணத்தில் உருவான நூல் வேலைக் கொண்ட இளஞ்சிவப்பு எம்பிராய்டரி குர்தா, துப்பட்டா மற்றும் சால்வை அணிந்த தீபிகா உண்மையிலேயே  இளவரசி போல வலம் வந்தார். ரன்வீரும் அதே இளஞ்சிவப்பு நிறத்தில் கோட் அணிந்து, கையில் “#DeepVeer” என மெஹந்தி இட்டுக்கொண்டு,  உறவினர்கள், நண்பர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தார்.

மெஹந்திக்கு மறுநாள் திருமண நிகழ்ச்சி. கொங்கனி மற்றும் சிந்து முறைப்படி என இரண்டு முறைகளையும் கொண்டு திருமணம் கோலாகலமாக  நடைபெற்றது. கொங்கனி முறைப்படி, மணமகளின் தாயார் புதுமண பெண் உடையைத் தேர்வு செய்ய வேண்டும். தீபிகாவும் அவர் தாயாரும்  பெங்களூரில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர், அங்காடி காலரியா டிசைன் செய்த தென்னிந்திய பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுச் சேலையை  தேர்ந்தெடுத்தனர். இரு தலை கொண்ட கண்டபேருண்டப் பறவையின் உருவம் புடவையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கர்நாடக அரசால் அதிகாரப்பூர்வ சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பல கோவில்களிலும் இந்த பறவையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பறவை  வலிமையுடன் எதிரியை போராடும் திறன் படைத்தது.  இந்த பிரமாண்டமான சேலையை வடிவமைக்க ஒன்றரை மாதமானதாம். கல்யாண  மாப்பிள்ளை ரன்வீர் வெள்ளை பட்டு வேட்டி சட்டை அணிந்து மீசையை முறுக்கி மிடுக்குடன் இருந்தார். சிந்தி முறை திருமண சடங்கில், உச்சந்  தலை முதல் உள்ளங்கால் வரை பாலிவுட் நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி வடிவமைத்த உடையணிந்து வந்த தீபிகா, பத்மாவதி  ராணியை போலவே கம்பீரத்துடன் இருந்தார்.

அவர் அணிந்திருந்த முகத்திரையில் ‘‘சதா சௌபாக்கியம் பவா” என்ற வாசகம் எம்பிராய்டரியில் பொன்னிறத்தில் தைக்கப்பட்டிருந்தது. ரன்வீரும்  தீபிகாவின் உடைக்கு ஏற்றார் போல் சிவப்பு நிற பட்டு ஜரி ஷர்வானியும், அடுக்கடுக்காக  மாணிக்க நகைகள் அணிந்து ஆடைக்கு மெருகேற்றினார்.  Christian Louboutin உடன் சப்யாசச்சி இணைந்து  பிரத்யேகமாக வடிவமைத்த சிவப்பு எம்பிராய்டரி கொண்ட காலணிகளை தீபிகாவும் - ரன்வீரும்  அணிந்திருந்தனர். திருமணம் முடிந்து தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூரில் உள்ள லீலா பேலஸ்ஸில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

அங்காடி காலரியாவின் பொன்னிற ஜரி பட்டு சேலையுடன் மரகத நெக்லஸில் எழில் நயத்துடன் இருந்தார் தீபிகா. இவர் அணிந்திருந்த சேலையை  வடிவமைக்க இரண்டு மாதங்களானதாக கூறப்படுகிறது. ரன்வீர் தனக்கென வடிவமைப்பாளர் ரோகித் பல் தயாரித்த கருப்பு பொன்னிற ஷர்வானி  அணிந்திருந்தார். ஷர்வானிக்கு பொருத்தமாக, பொன்னிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கருப்பு காலணிகளையும் அணிந்திருந்தார். பெங்களூரில் வரவேற்பு  நிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பையிலும் தங்களின் திருமணக் கொண்டாட்டத்தை தொடர்ந்தது தீபிகா - ரன்வீர் ஜோடி.

கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் ரன்வீரின் அக்கா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் தீபிகா சப்யாசச்சி வடிவமைத்த போயிமியன் பாணியில்  லெஹெங்கா அணிந்திருந்தார். அதற்கு பொருந்தும் விதமாக ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் கிரீடத்துடன் கூடிய சிகை அலங்காரத்தில்  வைரம், மரகதம், முத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்க அட்டிகையும் அணிந்து வந்திருந்தார். ரன்வீர் தன் தனித்துவமான ஃபேஷனுக்கு பொருந்தும்  விதமாக மனிஷ் அரோரா தயாரித்த நியான் கோட்டில் ஜொலித்தார். வடிவமைப்பாளர் அரோரா, ரன்வீரின் குறும்பு குணத்தை வெளிப்படுத்த அதில்  ஹார்ட் உருவகங்கள் பொருத்தி, இரவு நடனத்தில் மின்னுவது போல உருவாக்கியிருந்தார்.

மும்பையில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக வரவேற்பு நிகழ்ச்சியை இந்த தம்பதிகள் ஏற்பாடு  செய்திருந்தனர். தீபிகா, அபு ஜானி - சந்தீப் கோஸ்லா இணைந்து வடிவமைத்திருந்த பொன்னிற ஐவரி வண்ணத்தில் அமைந்த சிக்கன்காரி சேலை  அணிந்திருந்தார். அதில் ஸ்வ ரோவ்ஸ்கி படிகங்கள் மற்றும் தங்க zardozi கொண்டு கையால் பூத்தையல் செய்யப்பட்டிருந்தது. ரன்வீர் சிங்,  தீபிகாவின் உடைக்கு மேட்சிங்கா, ரோகித் பல் தயாரித்த பொன்னிற ஷர்வானியும், அதுக்கு பொருந்தும் சால்வையும், காலணிகளும் அணிந்திருந்தார்.

எல்லா வரவேற்பையும் முடித்த இந்த ஜோடிகள் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்காக பிரத்யேக வரவேற்பு விழாவை  கொண்டாடியது. பாலிவுட் திரையுலகமே படை சூழ்ந்த இந்த விழாவில், ஜுஹெய்ர் முராத் வடிவமைத்த தரை முழுக்க பரவி நீண்ட, கண்ணைக்  கவரும் சிவப்பு கவுனில் தீபிகா அவரின் ஸ்டைலுக்கு ஏற்ப ரன்வீர், ரோகித் காந்தியும் ராகுல் கண்ணாவும் இணைந்து தயாரித்த கருப்பு கோட் சூட்டில்  கச்சிதமாக இருந்தார். விடிய விடிய நடந்த கொண்டாட்டத்தோடு தங்களின் திருமண விழாவை முடித்துக் கொண்ட இந்த இளம் தம்பதிகள் ‘சிம்பா’ பட  ரிலீசுக்கு பின் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஸ்வேதா கண்ணன்