கடைசிவரை யாரோ..?



யாருமற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் ‘ஜீவசாந்தி’ அமைப்பு

நமது பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இறப்பு..? நமது பிறப்பை எத்தனையோ பேர் கொண்டாடுகிறார்கள். ஆனால் இறப்பை..?  வாழ்க்கையையே வெறுத்து எப்போது நாம் சாவோம் எனும் நிலை யாருக்கும் வரக்கூடாது என நம்மிடம் பேசத் துவங்கினார் கோயம்புத்தூரில்  இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவசாந்தி அமைப்பின் நிர்வாக இயக்குநரான சலீம்.

 “அடிப்படையில் நான் ஒரு வங்கி ஊழியர். ஒரு நாள் திடீர்னு ஒருவர் இறந்து சாலையோரம் சாக்கடை அருகில் கிடந்தார். அவரைக் கடந்து பலர்  சென்று கொண்டே இருந்தார்கள். எலிகள் அவரது உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்தன. நாய்கள் சுற்றி வந்தன. மனதிற்கு மிகவும் கஷ்டமாக  இருந்தது. அவருக்கு யாரும் இல்லாத நிலையில், அவரின் எல்லா ஈமச் சடங்கையும் நானே எடுத்து செய்தேன். அன்றைக்கு எனக்கு தோன்றியது.  யாருமில்லாமல் இறந்து போகிறவர்களுக்காக ஏன் இதை நாம் தொடர்ந்து செய்யக் கூடாது என்று. உடனே களத்தில் இறங்கிவிட்டேன்.

2013ல் எனது பணியினைத் தொடங்கியபோது, என்னோடு பல நண்பர்கள் கைகோர்த்தனர். துவக்கத்தில் பல சறுக்கல்கள், நிறைய சவால்களைச்  சந்தித்தோம். எல்லாவற்றையும் சமாளித்து, இதுவரை 2700க்கு மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். எங்கள் ஜீவசாந்தி அமைப்பில்  குறைந்தது 20 பேர் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதில் பெண்களும் அடக்கம். இறுதிச் சடங்கை செய்யும் எங்கள் அமைப்பில் உள்ள நண்பர்கள்  பி.காம்., பி.எஸ்ஸி. டிப்ளமோ, டிரிபிள்.இ, எம்.எஸ்.ஸி எனப் பலவிதமான பட்டப் படிப்புகளை முடித்தவர்கள்.

வங்கி ஊழியர்களில் துவங்கி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், மருத்துவம் என பல துறைசார்ந்தவர்களும் இதில் இருக்கின்றனர். அன்பை மக்களிடம்  விதைக்கவும்.. ஒற்றுமையை கொண்டு சேர்க்கவும் முடிவு செய்து, யாருமில்லாமல் இறந்து போனவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யத்  துவங்கினோம். நடைபாதைகள், ரயில், பேருந்து நிலையங் களில், பொது வெளிகளில் அனாதையாக இறந்து கிடப்பவர்கள், காப்பகங்களில்  இறந்தவர்கள், எச்.ஐ.வி, டி.பி, கேன்சர் வியாதியால் அனாதையான பிணங்கள், மருத்துவமனை பிணவறைகளில் இருக்கும் உரிமை கோரப்படாத  உடல்கள், பெயர் விலாசம் அடையாளம் தெரியாத உடல்களையும் பெற்று நாங்கள் அடக்கம் செய்யத் துவங்கினோம்.

முதலில் கோயம்புத்தூரைச் சுற்றி பத்து கிலோ மீட்டர் வரை துவங்கிய எங்கள் பணி இன்று 200 கி.மீ. தாண்டி மேட்டுப் பாளையம், ஊட்டி,  பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், திருப்பூர், ஈரோடு வரை விரிவடைந்துள்ளது. இறந்த உடல்களை ஏற்றி மயானத்திற்கு கொண்டு செல்ல  ஐந்து ஆம்புலன்ஸ்கள் எங்கள் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சாலையோரத்தில் யாராவது இறந்து கிடந்தால்,  உடனே எங்கள் அமைப்பிற்கு  அழைப்பு வரும். நாங்கள் சென்று பார்க்கும்போது சிலருக்கு லேசாக உயிர் ஓடிக் கொண்டிருக்கும்.

அவர்களுக்கு நெஞ்சுவலி, மயக்கம் அல்லது வலிப்பு நோய் வந்திருக்கும். உயிருக்கு போராடுபவர்களுக்காக ஆக்ஸிஜன் இணைத்த ஆம்புலன்ஸ் மூலம்  அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களே அவர்களை முழுமையாகச் சுத்தப்படுத்தி,  மருத்துவம் செய்வதற்கான அடிப்படை விசயங்களை செய்து கொடுத்துவிடுவோம். அவர்கள் மரணிக்கும்வரை உடன் இருந்து கவனிப்போம். சில  நேரங்களில் ஒரே நாளைக்கு நான்கு ஐந்து உடல்களைக் கூட அடக்கம் செய்யும் நிலையும் வரும்.

அப்போது எங்களுக்கு உணவு உண்ணவும் நேரம் இருக்காது. வெறும் டீ மட்டுமே அருந்தி எங்கள் குழுவினர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். சில  நேரங்களில் மயானத்தில், அடக்கம் செய்யப்படும் இடங்களுக்கு அருகிலே சாப்பிடும் நிலையும் வரும். கோவையில் இந்து-முஸ்லீம் பிரச்சனை  தொடர்ந்த நிலையில்,  மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக செயல்படுகிற மாதிரியான சிந்தனையை இறுதி நிகழ்வில் புகுத்த முடிவு  செய்தோம். சாகும்போது தன் இறப்பிற்கு பின்னான நிகழ்வு மதம் சார்ந்து இருப்பதையே பெரும்பாலோர் விரும்புவார்கள்.

மனிதர்களின்  நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதையே எல்லா மதமும் சொல்கிறது. இறந்த நபர் இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்தவராக யாராக  வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே மத நம்பிக்கைக்கு நாங்கள் ரொம்பவே மதிப்பளிப்போம். அனைத்து உயிர்களுக்கும் அனைத் தும் பொதுவானது.  எங்கள் ஜீவசாந்தி அமைப்பைப் பொறுத்தவரை, எங்களிடம் வரும் உயிரற்ற இந்த உடல் அனைவருக்கும் பொதுவானது. யாரெல்லாம்  இறுதியாத்திரையில் கலந்துகொள்கிறார்களோ, அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார்களோ அந்த மதத்தின் மீதான நம்பிக்கையை உடல் மீது இறுதி  மரியாதையாக அவர்கள் செலுத்தலாம்.

அந்த உடல் எந்த மதம், எந்த சாதி, எந்த வழிபாடாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த உயிர் சாந்தி அடையும் அவ்வளவே. மேலும்  பங்கேற்பவர்கள் மத்தியிலும் ஒரு புரிந்துணர்வு வருகிறது. மாதம் பத்து உடல்கள் என்றிருந்த நிலை கடந்து இப்போது மாதம் 50  உடல் என்ற  நிலைக்கு மாறியுள்ளது. ஆதரவற்றோர் உடல்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் இளைய தலைமுறையினர் மத்தியில் உறவுகளைப் பற்றிய  விழிப்புணர்வு இல்லை என்பதே. உறவுகள் இருந்தும் கைவிடப்பட்டோரும் அனாதைகள்தான்.

சில பெற்றோர்களை பெற்ற குழந்தைகளே வீட்டில் வைத்துக்கொள்ள முடியாமல், ஆட்டோவில் அழைத்து வந்து தெருவோரங்களில் விட்டுச்  செல்கிறார்கள். முதியோர்கள் உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சாலையோரங்கள், கோயில்களில் தஞ்சம் அடைகிறார்கள். சில இளைஞர்கள்  வயதான பெற்றோர்களை தனியாக விட்டு, வெளிநாட்டில் குடியேறி விடுகிறார்கள். படிப்பது, மதிப்பெண் எடுப்பது, பணம் சம்பாதிப்பது இதுதான்  வாழ்க்கை எனக் குழந்தைகளை நிர்பந்திக்காதீர்கள். இதனால்தான் முதியோர் இல்லங்களும், உறவுகளின் நிராகரிப்புகளும் இந்தியாவில் பெருகுகிறது.

எப்போதும் சமூகம் சார்ந்து சிந்திக்கவும், நேசிக்கவும் குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். உதவும் மனப்பான்மையை சின்ன வயதில் இருந்தே  அவர்களிடத்தில் வளர்க்க வேண்டும். யாருமற்ற இறப்பு என்பது சாலையோரங்கள்,  நடைபாதைகள், கோயில்கள், முதியோர் இல்லங்கள்,  பிணவறையில் கேட்பாரற்று கிடக்கும் உடல்கள் மட்டும் என நினைக்கிறோம். இதில் சிலருக்கு வீடு, கார், பணம் என வசதிகள் இருக்கும், கோடிக்  கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் குழந்தைகள் கைவிட்ட நிலையில் அனாதையாகி  இறந்திருப்பார்கள்.

ஆதரவற்றோர் இல்லா உலகம் படைப்போம் என்ற ஒரு திட்டத்தையும் கோவையில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுத்துச்  செல்கிறோம். உங்கள் பெற்றோர் எப்படி யாருமற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். பெற்றோர்களிடத்தில் எவ்வளவு கவனமாக இருத்தல் வேண்டும் என்பதை  மாணவர்கள் மத்தியில் காட்சிகளாய் கொண்டு சேர்க்கிறோம். அனாதையாய் இறந்தவர்களின் புகைப்படம், வீடியோ இவற்றை மாணவர்களிடத்தில்  காண்பிக்கிறோம். சமூக அக்கறையோடு, உறவுகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற பாடத்தை இளைய தலைமுறையிடம் எடுத்துச்  சொல்லி அன்பை விதைக்கிறோம். அப்போதுதான் வருங்கால தலைமுறை உறவுகளை ஒதுக்காமல், ஒற்றுமையாக இருப்பார்கள்’’ என முடித்தார்.

ஜெயந்தி, ஜீவசாந்தி டிரஸ்ட் அமைப்பாளர்

“அடிப்படையில் நான் வழக்கறிஞர். எங்கள் ஜீவசாந்தி அமைப்பில் 7 முதல் 8 பெண்கள் வரை உள்ளோம். எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பே  இந்த வேலையைச் செய்யத்  தொடங்கிவிட்டேன். திருமணத்திற்கு முன் என் கணவரிடத்தில் வெளிப்படையாக எனது சேவையைச் சொல்லிவிட்டேன்.  என் கணவரும் அவர் வீட்டாரும் இதை மிகவும் சுலபமாக எடுத்துக்கொண்டனர். இதற்குமேல் இந்த சமூகத்திற்கு எதுவும் பண்ண முடியாது  என்கிற   முன்னெடுப்பில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் குழுவாக இணைந்து செய்கிறோம்.

பெரும்பாலும் சிதைந்த (decomposed) உடல்கள்தான் எங்களிடம் வரும். கொலையான உடல்கள், வழக்கில் தொடர்புடையவர்கள், உரிமை  கோரப்படாத உடல்கள்தான் எங்களிடம் பெரும்பாலும் வருகிறது. சில உடல்களின் அருகே உறவினர்கள் செல்வதற்கே தயங்குவர். அருவெறுப்பு  அடைவர். உரிமை கோரப்படாத உடல் என்றால் காவல் நிலையத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வரும். அதற்கான அனைத்து முறைப்படியான  நடவடிக்கைகளையும் செய்து முடித்து உடலைப் பெறுவோம்.

அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, முறைப்படியே அந்த உடலின் இறுதி நிகழ்வு நடைபெறும். சில உடல்களுக்கு பெயர் தெரிந்தால் பெயரை  குறிப்பிடுவோம். ஊர், பெயர் தெரியாதவர்களுக்கு அவர்கள் வயதை அனுமானித்து பாலினத்தைக் குறிப்பிட்டு பதிவிடுவோம். குறைப்பிரசவத்தில்  பிறந்து இறந்த சிசுக்களின் உடல்கள், இறந்தே பிறந்த குழந்தைகளையும், சிலர் மயானத்திற்கு எடுத்துச்செல்ல வசதியின்றி எங்களிடம் அப்படியே  கொடுத்துவிட்டுச் சென்று விடுவார்கள்.

சில பெற்றோர் பிணவறை அருகிலேயே குழந்தையின் உடலை வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். நாங்க அந்த சிசுக்களின் சடலங்களையும் பெற்று  இறுதி மரியாதையை செய்வோம். உடல்களை சுத்தப்படுத்தி, வெள்ளை துணிகளால் கட்டி, மாலை அணிவித்து, மூன்று மதத்தை சேர்ந்தவர்களும்  இணைந்தே அவரவர் மத நம்பிக்கையின்படி கைகளில் என்ன கிடைக்கிறதோ அதைப் பெற்று இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்வோம்.  அதிக உடல்கள் வரும் நாட்களில் மயானத்தில் இருப்பவர்களோடு, ஜீவசாந்தி குழுவில் இருப்பவர்களும் இணைந்தே குழிகளைத் தோண்டுவார்கள்”   என்றார்.

ரஞ்சனி ஜிண்டோ, மக்கள் தொடர்பு அலுவலர்

“பி.காம். படித்துள்ளேன். ஒரு நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக இருந்து கொண்டே இந்த சேவையில் ஈடுபடுகிறேன். இரண்டு ஆண்டுகளாக ஜீவசாந்தி  அமைப்பில் இருக்கிறேன். துவக்கத்தில் நான் அதிகம் வெளியில் வராத   பெண்ணாகத்தான் இருந்தேன். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பார்த்து,  இப்படி எல்லாம் கூட மக்கள் பணி செய்ய முடியுமா என உறைந்தே போனேன். கேட்க நாதியற்று இறந்த உடல்களை அடக்கம் செய்வதைவிட வேறு  என்ன பெரிதாக நாம் செய்து விடப்போகிறோம். என் மனம் இயல்பாக இதில் ஈடுபட்டது. என் கணவரும் இதற்கு முழு ஆதரவு தருகிறார்.

சில நேரங்களில் 6வது படிக்கும் என் மகளையும் உடன் அழைத்துச் செல்வேன். நான் அவளை இதற்கு கட்டாயப்படுத்துவது இல்லை. அவளே விரும்பி  வருகிறாள். இதில் அவளுக்கு எந்த தயக்கமும் பயமும் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து எனக்கு கிடைத்த வாய்ப்பு, என் மகளுக்கு இப்போதே   கிடைப்பதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி. நான் முதன் முதலாக மயானத்திற்கு வந்தது, இதய நோயில் இறந்துபோன 70 வயது முதிய பிச்சைக்காரர்  ஒருவரின்  உடலை அடக்கம் செய்ய. தொலைபேசி அழைப்பு வந்ததும் சென்றோம். அவர் இறந்து ஒரு நாளைக்கு மேல் இருக்கும்.

அவரைச் சுற்றி துர்நாற்றம் வரத் தொடங்கி இருந்தது. அவர் உடலை சுத்தம் செய்து, புது துணி போட்டு, எங்கள் குழு இறுதி மரியாதை  செய்த  சம்பவம் எனக்கு கண்ணீரையே வரவழைத்தது. அன்றைய தினம் மன நிறைவாக இருந்தது. நான் இதுவரை 40க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம்  செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 45 வயது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். 18  நாள்  கடந்த நிலையில் உடல் சிதைந்து, அவரின் தலைக்குள் இருந்து மிகப் பெரிய வண்டுகள் வெளியில் வந்தன.

கை கால்கள் எல்லாம் புழுக்களாக இருந்தது. உடலை பார்க்கவே முடியாத ஒரு நிலை. துர்நாற்றம் வேறு. எங்களால் அருகில் நெருங்க  முடியவில்லை. அந்த மாதிரியான ஒரு உடலை எங்கள் குழு எடுத்து இறுதி மரியாதை செய்தது மிகப் பெரிய விஷயமாக  நான் இன்றுவரை  நினைக்கிறேன். தினமும்  யாராவது ஒரு ஆதரவற்றோரின் இறப்பிற்காக நாங்கள் இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு வருகிறோம். சில  நேரங்களில் உடல்களை அடக்கம் பண்ண நாங்களே எங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலையும் வரும்” என முடித்தார்.


மகேஸ்வரி