கிறிஸ்துமஸ் துளிகள்



வாசகர் பகுதி

*    ஜெர்மனியில் ஜிஞ்சர் பிரட்மென் (இஞ்சிச்சாறு சேர்ந்த ரொட்டிகள்) மற்றும் குக்கீஸ்களை கிறிஸ்துமஸ் தின விருந்துக்கு தயாரிப்பார்கள்.  இதற்குப் பெர்னஸி என்று பெயர். பாதாம் மாவிலே சர்க்கரை சேர்த்துக் குழைத்துக் காய்கறிகள், பழங்களை சேர்த்து பல்வேறு விநோத உருவங்களை  போல் செய்வார்கள். இந்த ரொட்டிக்கு மார்ஸிவான் என்று பெயர்.

*    போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓப்லாட்கி என்ற வேஃபர்களை தயாரிப்பார்கள். இதில் மத சம்பந்தமான படங்கள்  பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த வேஃபர்களை கிறிஸ்துமஸ் தின பரிசுப் பொருட்களாகவும் அனுப்புவது வழக்கம். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள்  மாலை குடும்பத்தினர் அனைவரும்  இந்த வேஃபர்களை வைத்துப் பிரார்த்தனை நடத்துவார்கள். கிறிஸ்துமஸ் இரவில் முதல் நட்சத்திரம்  தோன்றியதும் ஓப்லாட்கி பட்சணத்தை (வேஃபர்) மற்றவருக்கு வழங்கி வாழ்த்துக்கூறி உண்டு மகிழ்வார்கள்.

*    டர்டே என்பது ஒரு விசேஷமான ரொட்டி அல்லது கேக். குழந்தை இயேசுவை எப்படிப் பல மடிப்புக்களுடைய துணிக்குள் அன்னை மேரி  வைத்து அரவணைத்தாளோ அதை இந்த வகை ரொட்டி நினைவுறுத்துவதாக ஐதீகம். இந்த கேக் பார்ப்பதற்கும் மடிப்புகள் போல இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகை யின் போது டர்டேக்களைத் தயாரித்து உண்டு மகிழ்வது ருமேனியர்களின் வழக்கம்.

*    நார்வேயில் யூல் (Yule) டின்னருக்கு விசேஷமான அரிசியினாலான புட்டுப் போன்ற ஒருவகைப் பணியாரம் (புட்டிங்) தயாரிப்பது  வழக்கம். இதனுள் பாதாம் பருப்பு ஒன்றை புதைத்துவிடுவார்கள். பாதாம் பருப்பு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு உடனே திருமணமாகி விடும்  என்பது ஒரு நம்பிக்கை.

*    உக்ரேனில், கிறிஸ்துமஸ் மாலைக்குப் புராதானமான மரபுப்படி விருந்து தயாரிப்பார்கள். ஹோலி சப்பர் என்ற புனித இரவுச் சாப்பாட்டில்  பன்னிரெண்டு வகையான உணவுகள் இடம் பெறும். இவற்றில் ஒன்றுக்கு குடியா என்று பெயர். குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் ஒன்று கூடி  பிரார்த்தனை செய்வார்கள். பிறகு வீட்டின் இல்லத்தரசி குடியாவிலிருந்து சிறிதளவு உணவினை எடுத்து மூலை முடுக்குகளில் தூவுவாள். இது  அவர்கள் வீட்டினை தீய சக்தியில் இருந்து பாதுகாக்கும் கவசமாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

*    பின்லாந்தில் கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரம் முன்பே ஓட்ஸ் தானியத்தை சுத்தம் செய்து அரைத்து வைப்பார்கள். அங்கு புனித ஸ்டீபன்  நாள் தான் கிறிஸ்துமஸ் தினம். ஓட்ஸ் கஞ்சி தான் அன்றைய விசேஷ உணவு. இதற்கு செயின்ட் ஸ்டீபன்ஸ் பாரிட்ஜ் என்று பெயர்.

*    செர்பியர்கள் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும்போது அதில் ஒரு வெள்ளிக்காசை ஏதாவது ஒரு கேக்கினுள் வைத்து பேக் செய்வார்கள்.  வெள்ளிக்காசு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்ட மான ஆண்டாக இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

*    மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் புனித இரவின் முக்கியத்துவத்தை குறிக்க முதல் நாள் மாலை சாலட் உணவினை விசேஷமாக  தயாரிப்பார்கள். பலவகைப் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த சாலட்டினை வண்ண மிட்டாய்களைக் கொண்டு  அலங்கரித்திருப்பார்கள்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.