யுட்யூபை கலக்கிய ஆந்திரா மூதாட்டி!



சுறுக்கம் விழுந்த சருமம், பளிச்சென்று மிளிரும் கண்கள், பொக்கை வாய் சிரிப்பு... இது தான் சமையல் மகாராணி மாஸ்தானம்மாவின் அடையாளம்.  கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக யுட்யூபில் இவரின் சமையல் வீடியோக்கள் பிரபலம். அடுத்த என்ன சமைப்பார்? எப்போது போஸ்ட் செய்வார் என்று  பலரை காக்கவைத்தவர். இப்போது பலரையும் காக்க வைத்துவிட்டு தன் 107ம் வயதில் விண்ணுலகை எய்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தின் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் மாஸ்தானம்மா. இவரின் சமையல் நிகழ்ச்சிக்கு யுட்யூபில் ஒரு மில்லியனுக்கும் மேலான  சப்ஸ்கிரைபர்ஸ். கடந்த  ஆறு மாத காலமாக உடல் நலம் குன்றியிருந்தவர், டிசம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். இவரின் பேரன் லஷ்மன்  விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றபோது, அங்கு கிராமிய உணவைச் சமைக்கும் தன் பாட்டியை வீடியோ எடுத்து யுட்யூபில் பதிவிட ஆரம்பித்தார்.  அப்படித்தான் உலகமெங்கும் பாட்டியின் சமையல் பீவர் தொற்றிக் கொண்டது.

இதனையடுத்து தான் ‘கண்ட்ரி ஃபூட்ஸ்’ என்ற யுட்யூப் சேனல் வைரல் ஆனது. 107 வயதான மூதாட்டியாக இருந்தாலும் அவரது அப்பாவியான சிரித்த  முகமும், ஒளி நீங்காத கண்களும் மாஸ்தானம்மாவை பிரபலமாக்கின. வயல் வெளியில் அடுப்பை பற்ற வைத்து, ஆற்று நீரில் காய்கறிகள் கழுவி  வகை வகையாக பிரியாணி முதல் பீட்சா வரை சமைப்பது இவரின் சிறப்பு. சமைப்பது மட்டும் இல்லாமல் அதை வாழை இலையில் இவர் பரிமாறும்  விதத்தை பார்க்கும் போதே நமக்கு இங்கு நாக்கில் எச்சில் ஊறும்.

அதற்காகவே இவர் அடுத்து என்ன போஸ்ட் செய்வார் என்று ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனில் காத்திருப்பர். அரிவாள்மனையில் அவர்  காய்கறிகளை நறுக்கும் விதம் மற்றும் விரகடுப்பில் சமைக்கும் பக்குவம், உணவு பொருட்களை கண்களிலேயே அளந்து அசத்தலாக அவர் செய்யும்  சமையல் வீடியோக்கள் மற்ற சமையல் வீடியோக்களில் இருந்து மாறுபட்டு பார்வையாளர்களை ஈர்த்தது. 11 வயதில் திருமணமாகி 22 வயதில்  கணவரை இழந்து, கைம்பெண்ணாக தன் 5 குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார் மாஸ்தானம்மா.

ஒரு கட்டத்தில் 5 குழந்தைகளில் நான்கு குழந்தைகளும் தவறி போக, விரக்தி அடையாமல், தனக்கு தெரிந்த சமையல் கலை மூலம் தன்  வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அவர் சமைத்த தர்பூசணி சிக்கன் வீடியோ பதிவினை மட்டுமே 11 மில்லியனுக்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர்,  பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர். தன் கடைசி காலம் வரை தன் வேலைகளை தானே செய்து வந்து ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார். இவர்  இறந்த செய்தியை அறிந்து, உலகம் எங்கிலும் உள்ள உணவுப் பிரியர்கள் யுட்யூபில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வேதா கண்ணன்