புன்னகை



‘‘நாம என்ன நினைக்கிறோமோ அதுதானே வாழ்க்கை. நாம் ஒன்றை ஆழ்ந்து வேண்டுமென நினைத்தால் அது நடக்கும் சாத்தியக் கூறுகள் தானாகவே அமையும். அப்படித்தான் என் வாழ்க்கையில் திவ்யா வந்ததும்’’ என பேசத் தொடங்கினார் ராஜேஷ். இவர் பி.இ.,எம்.பி.ஏ. முடித்து சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியில் இருக்கிறார். இவரின் காதல் மனைவி திவ்யாவும், ராஜேஷ் பணிபுரியும் அதே நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். ராஜேஷ்-திவ்யா காதல் அழகைப் பார்த்து, அந்தஸ்தைப் பார்த்து, சாதி பார்த்து வரவில்லை. ஆம். திவ்யாவிற்கு பிறக்கும்போதே ஸ்பினா பிஃபிடா (Spina Bifida) என்கிற தண்டுவட பாதிப்பு நோய் இருந்துள்ளது.

அதென்ன ஸ்பினா பிஃபிடா என்கிறீர்களா? இது ஒருவிதமான முதுகு தண்டுவட பாதிப்பு. மூளைக்கும் முதுகு தண்டுவடத்திற்கும் வருகிற செய்தி இவர்களுக்கு சரியா இருக்காது. முதுகெலும்பு  இணைப்பில் இருக்கும் நரம்புகள் சரியான முறையில் இல்லாமல் இருக்கும். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் சக்தியை இழந்திருப்பார்கள். கால்கள் வலுவிழந்து காணப்படும். சில நேரங்களில் இயற்கை உபாதைகள் வருகிற மாதிரியான உணர்வு இருக்கும். ஆனால் வராது. வராத மாதிரி இருக்கும், வந்துவிடும். இதுமாதிரி  மிஸ்கம்யூனிகேஷன் பிரச்சனைகளை இந்நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் நிறைய சந்திப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கு பிரச்சனை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு மாதிரியாகவும் இருக்கலாம். தொடர்ந்து திவ்யா நம்மிடம் பேசினார்.  ‘‘திருச்சிக்கு அருகே உள்ள கிராமம் என்னுடையது. நான் பிறக்கும்போதே எனது முதுகில் சிறு கட்டி இருந்தது. அது நரம்புகளோடு தொடர்பில் இருந்ததால் அப்போது அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. எதாவது தொந்தரவு வரும்போது பார்க்கலாம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். நான் வளர வளர  கட்டியும் வளரத் தொடங்கியது. என் 7 வயதில் கால்களுக்கு பாதிப்பு வரத் தொடங்கியது. என்னுடைய 9 வயதில் தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  

தொடர்ந்து எனது  உடம்பில் அறுவை சிகிச்சைகளை மாற்றி மாற்றி செய்துகொண்டே இருந்தனர். என்னுடைய யூரினரி பிளாடர், பவல் கேம்ப் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் படிப்பிற்கு தடைகள் வந்தது. இந்த நிலையிலே 10ம் வகுப்பு முடித்தேன். கால்களில் காலிபர் (caliper)  அணிந்து கையில் ஸ்டிக்கோடு நடந்தேன். காலிபர்கள் அழுத்தியதில் கால்கள் புண்ணானது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலையும் உருவானது. பள்ளி போக முடியாமல் ஆனது, எனது மாமா கண்டிப்பாக திவ்யாவை படிக்க வைத்தே ஆகவேண்டும். படித்தால்தான்  அவளால் சுயமாக வாழமுடியும் எனச் சொல்லி கட்டாயப் படுத்தி என்னைப் படிக்க வைத்தார்.

+1 படிக்க விடுதியில் சேர்க்கப்பட்டேன். பள்ளி நிர்வாகமும் நிறைய எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். +2வில் ஆயிரத்து நூறுக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தேன். நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது. தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பொறியியல்  படிக்க இடம் கிடைத்தது. நான்காண்டு விடுதியில் இருந்து படித்தேன். கல்லூரி வளாகத் தேர்வில் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி வாய்ப்புக் கிடைத்தது. விடுதி வாழ்க்கை தொடர்ந்தது. திருமணம் செய்து கொள்வதை பற்றியே நான் நினைக்கவில்லை. யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே என் சிந்தனை.

என் உடல் பிரச்சனைகளை யாரிடமும் மனம் விட்டும் சொல்லவும் மாட்டேன். பொருளாதார ரீதியாக தனித்து வாழும் முடிவோடு இருந்தேன். அப்போதுதான் என் வாழ்க்கையில் ராஜேஷ் நண்பராக நுழைந்தார்’’  என்றார். அவரைத் தொடர்ந்து பேசத் தொடங்கினார் ராஜேஷ்.‘‘எங்களது பார்த்ததும் காதல், பார்க்காமல் காதல், தொலைபேசி காதல் என எந்த காதலுக்குள்ளும் வராத காதல். திவ்யாவின் நிலை அறிந்தே அவளை ரொம்பவும் காதலித்தேன். முதல்நாள் திவ்யாவைப் பார்த்தபோதே எனக்குள் ஃபயர் பற்றிக்கொண்டது. பளிச்சுன்னு சிரித்த முகத்தோடே இருப்பாங்க. எங்கள் நிறுவனத்தில் நாங்கள் இருவரும் வேற வேற டீம்.

அவர் மாற்றுத் திறனாளி என்பது எனக்கு சுத்தமாகத் தெரியாது. பல நேரம் அவர் இருக்கும் கேபினைக் கடக்கும்போது அவரைக் கவனிப்பேன். அவர் முகம்  என்னை ஈர்த்துக் கொண்டே இருந்தது. பெரும்பாலும் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பார்த்திருக்கிறேன். நான் கொஞ்சம் ஷோவியல் டைப் என்பதால் நண்பர்களிடம் அந்த பெண்ணை எனக்கு ரொம்ப பிடிக்குது. அவரோடு பேச நினைக்கிறேன். கொஞ்ச நாளில் அவர் நட்பு வளையத்திற்குள் இருப்பேன். அவர் அருகில் உட்கார்ந்து சாப்புடுவேன்  எனச் சொல்லி வைத்தேன்.  

ஒரு நாள் கேன்டீனில் அமர்ந்து என் நண்பர்களோடு சாப்பிடும்போது, திவ்யாவும் தோழிகளோடு அங்கு இருந்தார். அப்போது அவர் சாப்பிட்டு எழும்போதுதான் கவனித்தேன் அவர் மாற்றுத் திறனாளி என்பதை. ஆனாலும் திவ்யாவை பிடித்திருந்தது. நட்பாகலாம், பேசிப் பார்க்கலாம் என முதலில் நினைத்தேன். உங்க பேரு, ஊரு, எங்க படிச்சிருக்கீங்க என மெல்ல அவரிடம் பேசத் தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் திவ்யாவிடம் நட்புடன் நெருங்கும்போது சிரித்த முகத்தோடு பளிச்சென இருப்பார். ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அவரிடம் இருந்துகொண்டே இருக்கும்.

எதையும் எளிமையாக எடுத்துக்கொள்வார். சிலவற்றை மாற்றியும் யோசிப்பார். அவரின் செயல்கள், பழக்கவழக்கம் எல்லாம் என்னை ரொம்பவே கவர்ந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் மென்மையாக ஈஸி கோயிங்கா அனைவரிடத்திலும் பழகி வேலை வாங்குவார். எல்லோரிடமும் நட்பு பாராட்டி, சுலபமாகப் பேசிவிடுவார். அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. அவரைப் பார்த்தால் சிம்பத்தியே வராது. பழகப் பழக திவ்யாவை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் திவ்யாதான் என் வாழ்க்கை என யோசிக்க ஆரம்பித்தேன்.

திவ்யா அவரைப்பற்றி அவரின் உடல் ரீதியான பிரச்சனையை குறித்து வாய் திறந்து சொல்லவே மாட்டார். தேவையற்ற இரக்கத்தை அவர் தேடுவதில்லை. நெருங்கிய தோழிகளிடமும் அவர் உடல் ரீதியான பிரச்சனையை சொல்லவில்லை. என்னாலும் கண்டு பிடிக்க முயற்சித்து முடியவில்லை. ஒரு மாற்றுத்திறனாளி வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கும்? வழக்கமான நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வார்? இதெல்லாம் எனக்கு சுத்தமாத் தெரியாது. எதுவானாலும் சரியென அவரிடம் என் காதலை தொலைபேசி மூலமாக வெளிப்படுத்தினேன். இதற்கிடையில் என் அலுவலக நண்பர்களுக்கு என் மீது சந்தேகம் இருந்தது.

தொடர்ந்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள்.  நீ எப்படி குடும்பத்தை நடத்துவ? அது சுலபம் இல்லை. யோசிச்சு முடிவெடு என்றார்கள். நான் திவ்யாதான் என் வாழ்க்கை என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். திவ்யாவும் அதை உணரத்  தொடங்கினார். அவர் மனதிலும் என்னைப் பற்றிய ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு நண்பனா என்னைப் பிடிக்கும். காதல் என்றபோது, அதுவரை இயல்பாகப் பழகியவர் என்னோடு பேசுவதைக்  குறைக்கத் தொடங்கினார். திவ்யாவிற்கு  என்னை எப்படி ஃபேஸ் பண்ணுவது எனத் தெரியவில்லை. மௌனித்தால். நேரில் பேசலாம் என அவளை வெளியில் அழைத்தேன்.

வந்தாள். அவளின் உடல் ரீதியான பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல ஆரம்பித்தாள்’’  என்றார். ராஜேஷைத் தொடர்ந்து திவ்யா பேசினார். ‘‘திருமணத்திற்கு முன்பே பிஸிக்கலா அவர் நிறைய உதவி இருக்கார். நான் சொல்லாமலே என் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டார். நல்ல நண்பராக எனக்கு அவரைப் பிடித்தது. திருமணம் என அவர் வந்தபோது தயக்கங்கள் நிறைய இருந்தது. திருமணம் என்பது சுலபம் கிடையாது. சாதாரணமான  நபர் என்னை மாதிரியான ஒரு மாற்றுத் திறனாளியை திருமணம் செய்தால் அது எப்படி இருக்கும் என்பதில் நிறையவே தயக்கம் இருந்தது.

டிசபிளிட்டிஸ் தவிர வேறு சில பிரச்சனைகளும் இருந்தது. திருமண வாழ்க்கையில் பாதிப்பைத் தரும் எனத் தவிர்த்தேன். என் தயக்கத்தை அவர்தான் உடைத்தார். அவர் அன்பில் அதீத நம்பிக்கை வந்தது. என் பிடிவாதத்தை தளர்த்தினேன். இரண்டு வருடம் கழித்தே காதலுக்கு சம்மதித்தேன்’’ என்றார். குறுக்கிட்ட ராஜேஷ், ‘‘அப்போதும் இன்டெப்த்தான பிரச்சனைகள் என்னிடம் சொல்லவில்லை. தனித்து சுதந்திரமாக இருக்கணும்னு நினைக்கிறேன். திருமணம் செய்ய எண்ணமில்லை என்று மட்டும் சொன்னார். ஆனால் கல்யாணம் செய்தால் உன்னை செய்து கொள்கிறேன் எனச் சொன்னார்.

இதிலே என் மீது அவருக்கு காதல் இருக்கு என்று தெரிந்தது. என்னைப் புரிந்துகொள்ள நிறையவே அவகாசம் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக உடல் ரீதியான அவரின் பிரச்சனைகள் எனக்குப் புரியத் தொடங்கியது. ஏன் திருமணத்தை மறுக்கிறார் எனப் புரிந்தது. அவரது கால்களில் உணர்வுகள் இல்லை. முதுகு வலி, யூரினரி பிராப்ளம், மோசன் பிரச்சனைகள் இருக்கிறது எனத் தெரியவந்தது. தண்ணீர் குடிப்பதைக் கூடப் பெரும்பாலும் தவிர்ப்பார். அவசரம் என்றால்  உடனே எழ முடியாது. இதுகுறித்து அவரிடம் பேச ஆரம்பித்தேன். திவ்யா இயல்பானார். உன்னை எல்லாரும் கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள் திவ்யா.  

நீ மட்டும் அங்கேயே தேங்கி நிற்ப. பணத்துக்காக மட்டுமே எல்லாரும் உன்னுடன் இருப்பார்கள். சிலர் மட்டும்தான் உன் மேல் அக்கறையா இருப்பாங்க. ஆனால் உன் வயது மட்டும் கடந்துகொண்டே இருக்கும் என்று சொன்னேன். அவர் தயக்கம் உடைந்தது. தொடர்ந்த நாட்களில் என்னிடம் மனம்விட்டு பேசத் தொடங்கினார். என்னை நம்பினார். இதுதான் என் பிரச்சனையென எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார். அவரை நான் வெளியில் கூட்டிச்செல்லத் தொடங்கினேன். மருத்துவர்கள் மற்றும் தெரபிஸ்டுகளிடம் அழைத்துச் சென்றேன். பிசியோதெரபிஸ்ட் பயிற்சிகள், நீச்சல் பயிற்சி என எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து கூட்டிச் சென்றேன். அவரை ஊக்கப்படுத்தினேன்.

முழுமையாக திவ்யா என்னை நம்பினார். நான்தான் இதில் கொடுத்து வைத்தவன். நானொன்றும் திவ்யாவிற்கு வாழ்க்கை கொடுக்கவில்லை. அவர் யாரையும் சாராமல் தனித்து  வாழ்ந்து கொண்டுதான் இருந்தார். எனக்குதான் அவரைப் பிடித்திருந்தது. அதை காதலாக்கி நான்தான் அவரிடம் சொன்னேன். நண்பர்களாக இருந்த நாங்கள் சேர்ந்து வாழப்போகிறோம். அவ்வளவுதான். அதைத்தாண்டி இதில் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் யாரும் இதை ஈஸியாக எடுத்துக்கொள்ளவில்லை. திருமணத்தில் திவ்யாவின் சம்மதம், என் வீட்டாரின் சம்மதம், சமூகத்திற்கான பதில் என நிறைய சவால்கள் இருந்தது.  

ஆனால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். திருச்செந்தூர் கோயிலில் எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது.  இயல்பாக கடக்க முடியாத பல இடங்களில் நான் திவ்யாவை தூக்கிக் கொண்டுதான் செல்வேன். வாழ்க்கை முழுவதும் இது தொடருமா? இவன் எவ்வளவு தூரம் இதை இவளுக்காகச் செய்வான் என்ற எண்ணம் எல்லாருக்குமே இருந்தது. திவ்யாவின் பெற்றோருக்கும் ஆரம்பத்தில் இருந்தது. திவ்யா ரொம்பவே ஜாலியானவள். எங்களுக்குள் நிறைய காமெடி சென்ஸ் இருக்கும்.

எங்களுக்குள் ஒரு லவ் இருந்துகிட்டே இருக்கும். திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் அவள் தாய்மை அடைந்தாள். பெண் குழந்தை வேண்டும் என்பதில்  ஆர்வமாக இருந்தோம். அதன் பிறகே உண்மையான கஷ்டம்  எனக்குத் தெரியத் தொடங்கியது. அவளுக்கு உடலில் வெயிட் ஏற ஏற நகர முடியாத நிலை  உருவானது. வீல் சேருக்கு அவளை மாற்றினேன். அவளைக் கவனிப்பதில் மருத்துவர்களுக்கே தடுமாற்றம் இருந்தது. இந்தியாவில் இந்தப் பிரச்சனையோடு குழந்தை பெற்றவர்களை தேடினோம். அப்போது இது தொடர்பாக மருத்துவர்கள், வெளிநாட்டு தொடர்புகள், ஸ்பினா பிஃபிடா (Spina Bifida) பவுண்டேஷன் குறித்த தொடர்புகள் கிடைத்தது.

அவர்களிடத்தில் பேசிப்பேசி கொஞ்சம் புரிதல் வந்தது. இயற்கையாக நடப்பது நடக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம் என முடிவுக்கு வந்தோம். அவளைத் தூக்கித் தூக்கி நகர்த்தும் நிலையே இருந்தது. எல்லாவற்றையும் அவளுக்கு ஏற்றமாதிரி அமைத்தேன். தேவையான அனைத்தும் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்தேன். வாமிட் வரும் நேரங்களில் அடிக்கடி நகராமல் இருக்க பிளாஸ்டிக் கவர்கள் அருகிலே இருக்கும். உட்கார்ந்தே இருந்ததில் அவளுக்கு அந்த இடங்களில் புண்கள் வரத் தொடங்கியது. அலுவலகத்துக்கு அருகாமையில் வீடு இருந்ததால், வேலை செய்யும் நேரத்தை எங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொண்டேன். திவ்யாவின் அம்மாவும் உதவிக்கு இருந்தார்.

எங்கள் மகளும் வயிற்றில் இருக்கும்போதே எங்களை உணர்ந்து சமத்தாக நடந்து கொண்டாள். எங்கள் திருமணநாள் அன்றே அவளும் பிறந்தாள். என் மனைவி திவ்யாவின் பெயரின் முதல் எழுத்தையும், எனது பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து, எப்போதும் புன்னகையோடு இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், மகளுக்கு ‘தீரா புன்னகை’ என பெயர் வைத்தோம்.என் மகள். அவளையும் நான்தான் பார்ப்பேன் என முடிவு செய்து நானே அனைத்தையும் அவளுக்கும் செய்கிறேன். பிறந்த ஐந்தாம் நாளிலே காலில் போட்டு குளிக்க வைத்தேன்.

இன்றுவரை என்னிடம் ஜாலியாக குளிக்கிறாள் (சிரிக்கிறார்). இதுவரை எதற்காகவும் உதவிக்கு ஆள் வைக்கவில்லை. எங்கள் வாழ்க்கை ஜாலியா நகர்கிறது’’ என முடித்தார். தொடர்ந்த திவ்யா, ‘‘என்னோட ப்ரெக்னன்சி நேரத்தில் ஹெல்த் பிரச்சனைகள் எனக்கு அதிகமாகத் தொடங்கியது. மருத்துவர்களும் நிறைய உதவியாக இருந்தார்கள். என்னுடைய  ப்ரெக்னன்சி ஹேர் எல்லாவற்றையும் டே ஒன்றில் இருந்தே இவர்தான் செய்தார். அருகாமையிலே இருந்து ரொம்பவே நன்றாக கவனித்தார். இப்போது மகளுக்கும் சேர்த்தே செய்கிறார். குறிப்பாக நான் ரொம்பவே ஆசிர்வதிக்கப்பட்டவள்’’  என நெகிழ்வோடு முடித்தார் திவ்யா.         


- மகேஸ்வரி
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்