83



கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படத்தில், அவரது மகள் அமியா உதவி இயக்குநராக இணைகிறார். இவர் படத்தில் காட்டும் ஆர்வமும், உழைப்பும்  படக்குழுவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது .1983ல் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக  விளையாடி, உலகக் கோப்பையை வென்றெடுத்து, இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்து, நாட்டிற்கே பெருமை சேர்த்தது. அதற்கு  முக்கிய காரணமாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், அப்போதைய இந்திய அணியின் கேப்டனுமான கபில்தேவ் பற்றியும், இந்திய கிரிக்கெட்  அணியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பற்றிய படம்தான் “83”.

இதில் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி போன்ற படங்களில் நடித்து மூன்று முறை ஃபிலிம் ஃபேர் விருதுகள் வென்று, இந்தியா முழுவதும் பிரபலமான  நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகருமான ரன்வீர் சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான் போன்ற  படங்களை இயக்கிய கபீர் கான் இயக்குகிறார். இன்னிலையில், 83 படத்தில் உதவி இயக்குநராக கபில்தேவ்வின் மகள் அமியா இணைந்துள்ளதாக  படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். கல்லூரி முடித்த சில காலத்திலேயே, சினிமா மீதிருந்த ஆர்வத்தால், நேரடியாக சினிமா கலையை கற்க,  தன் தந்தை படத்திலேயே உதவி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், கபில்தேவின் மகள் என்பதால், கிரிக்கெட் பற்றிய முழுமையான புரிதலும், தந்தை பற்றிய சிறு விஷயங்கள் கூட தெரிந்திருக்கும் என்பது  படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என படக்குழுவினர் அவரை வரவேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது, மற்ற விளையாட்டு வீரர்களிடமும் தொடர்ந்து  நட்புடன் சிறு வயதிலிருந்தே பழகி வருவதால், அமியா அவர்களுடன் சகஜமாக பேசி, திடமான பாத்திரப்படைப்பை உருவாக்குவார் என்றும் நம்பிக்கை  தெரிவித்துஉள்ளனர். நடிகர்களுக்கு, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் பயிற்சியளித்து வருகிறார்.

இதை அமியாதான் தினம்  கவனித்துக்கொண்டு, படப்பிடிப்பின் தினசரி செயல்களை ஒருங்கிணைத்து வருவதாக தெரிவிக்கின்றனர். கபில்தேவும், தன் கதாபாத்திரத்தை ஏற்று  நடித்திருக்கும் ரன்வீர் சிங்கிற்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். இந்த படத்தின் மூலம், நம் கோலிவுட் நடிகர் ஜீவாவும் தன் பாலிவுட்  பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983 கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது, அதிக ரன்கள் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு  உறுதுணையாகயிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீரீகாந்த் கதாபாத்திரத்தில், ஜீவா நடிக்கவுள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் 2020ல் உலகம் முழுவதும்  வெளியாகும் என்பது கூடுதல் தகவல்.

ஸ்வேதா கண்ணன்