பெண் கருக்கொலை ஒரு பிரச்சனையின் தொடக்கம் அல்ல...பல பிரச்சனைகளின் முடிவு



பெண் கருக்கொலை குறித்து தமிழக அளவிலான தொடக்கநிலை ஆய்வு, CRY - (குழந்தை உரிமைகளும் நீங்களும்) அமைப்புடன் சமகல்வி  இயக்கமும் இணைந்து, சன் ஃபவுண்டேஷன் உதவியுடன் தங்கள் ஆய்வறிக்கையினை வெளியிட்டது. இந்த ஆய்வில், கடந்த மூன்றாண்டுகளில் பெண் கருக்கொலை அதிக அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடப்பதையும், ஆண், பெண் விகிதம் அதிகமாக இருப்பதையும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை பாலின விகிதம், குழந்தை பிறப்பு விகிதம் என, தேசிய குடும்ப சுகாதாரத் துறையிடம் இருந்தும், தகவல் அறியும் சட்டம் (RTI) மற்றும்  அங்கன்வாடிகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் என அனைத்தும் முரண்பட்டதாக வெவ்வேறு எண்ணிக்கையை காட்டுகின்றன எனவும் இவர்கள்  தெரிவித்தனர். இந்த ஆய்வறிக்கையில் சமகல்வி இயக்க தலைவர் ஜெயம் உட்பட இயக்கத்தை சார்ந்த அன்பழகன், செல்ல செல்வகுமார்,  கிறிஸ்துவராஜ், அறிவழகன் ராயன் போன்றோரும், லயோலா கல்லூரி ஆசிரியர் செம்மலர், வழக்கறிஞர் சுசீலா, ஆமீர் கான்(People’s Health  Assembly), லாவண்யா (News7 Channel) போன்றோரும் பங்கேற்றனர்.

மகப்பேறு நிபுணர் டாக்டர் சிந்தியா அலெக்ஸாண்டர், பெண் கருக்கொலைக்கு காரணமாக மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றி  கூறும்போது, ‘‘இது ஸ்கேன் சென்டரில் தொடங்கி, டாக்டர்கள், நர்ஸ் என பலர் இதில் உடந்தை. நம் இந்திய சட்டத்தின்படி, பெண்கள் கருவுற்ற 20  வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம். அந்த காலம் கடந்து கருக்கலைப்பு செய்வதில்லை. ஸ்கேன் சென்டரில், 22 வாரங்களாகி இருந்தாலும், 20  வாரங்களுக்குள் இருப்பது போலவே ரிஜிஸ்டரில் எழுதி மறைக்கின்றனர். குழந்தை பிறந்ததும், பிறப்புச் சான்றிதழை பெற்றோரும் குடும்பமும் காலம்  தாழ்த்தி வாங்கி சிசுக்கொலைக்கு வாய்ப்பளித்து வழிவகுக்கின்றனர்.

கரு வளர்ச்சியில், உடல் உறுப்புகளில் குறை என்று பொய்யாக கூறி, கருக்கொலை செய்யப்படுகிறது. இதை உறுதிப்படுத்த, போஸ்ட்மார்டம் செய்தல்  கட்டாயம் என  கொண்டு வந்து தடுக்கலாம். மேலும், சில வருடங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு நடக்கும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு மயக்கம்  தந்து, டாக்டர் வளர்ந்த கருவின் உடல் பகுதிகள் ஒவ்வொன்றாக வெட்டி எடுப்பார். ஆனால் இப்போது Medical Pill வந்துவிட்டது. இதை கர்ப்பிணியின்  பிறப்புறுப்பில் செலுத்தினாலே போதும். இந்த சுலபமான முறையால், யார் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்ய வாய்ப்பளிக்கிறது. டாக்டர் மட்டும்  இல்லாமல், சட்டவிரோதமான முறையில் மருத்துவமனை செவிலியர்கள், உதவியாளர்கள் என குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன”  என்றார்.

இவர் மேலும் கூறியதாவது, ‘‘இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவத்தின் நீதி நெறிகளையும், மகத்துவத்தையும்  போதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் காசிற்காக வேலை செய்யும் மருத்துவர்களாக இல்லாமல், சேவை செய்யும் மனப்பான்மையுடனும்  மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்வர். பாலினத் தெரிவை உங்கள் வீட்டில் லஷ்மி வருகிறாள், கிருஷ்ணன் வருகிறான் என கூறுவதில் தொடங்கி  பெண்கருக்கொலைக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் வரை கண்டிப்புடன் இதை தடுக்க வேண்டும்’ என்றும் பரிந்துரைத்தார்.

எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஓவியா கூறும்போது, ‘‘ஆணாதிக்கத்தால் ஊறிப்போன சமூகம் நமது. பாலின விகிதம் கூட நாம் ஆண்களை  வைத்துத்தான் கணக்கிடுகிறோம். பெண் கருக்கொலைக்கு எதிராக செயல்படும் போது, கருக்கலைப்பிற்கு எதிராக செயல்படாதவாறு இதை அணுக  வேண்டும். கருக்கலைப்பு உரிமை பெரும் போராட்டத்திற்குப்பின் பெண்களுக்கு கிடைத்துள்ளது. எனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லும்  உரிமை, பெண்ணுக்கும் உண்டு, ஆணுக்கும் உண்டு. குழந்தை வேண்டாம் என முடிவெடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், குறிப்பாக  பெண் குழந்தை வேண்டாம் என்று கூறுவதற்கான காரணத்தை ஆராயவேண்டியது அவசியம். அது சுய காரணமா அல்லது சமூகத்தினால் உருவான  காரணமா? ஏன் அந்த முடிவு? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் தேட வேண்டும். குழந்தை திருமணம், வரதட்சணை, பாலியல் சீண்டல்கள் எனப்  பல இந்த கேள்வியில் அடங்கும்.

பெண் கருக்கொலைக்கு எதிராக நாம் தொடுக்கும் அழுத்தம் அரசின் பக்கம் மட்டும் தான் இருக்கிறது. அது சமூகத்தின் பக்கமும் இருக்க வேண்டும்.  ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று கூறினால், ‘பரவால்ல பரவால்ல’ என்று சுற்றத்தார் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பெண்  குழந்தை பிறந்தால் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது போல ஆறுதல் கூறும் பெரியோர்கள் நிறைந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். மகள் வீட்டில் சாப்பிடும் நிலைமை வந்தால் அதை அவமானம் என்று கருதி, மகன் வீட்டில் அடிமைகள் போலக்கூட வாழ தயாராக பெற்றோர்கள்  இருக்கின்றனர். மகன்தான் எங்களை வைத்திருக்கிறான் என்று கூறுவதில் ஒரு பெருமை. அவன் கத்துவான், மருமகள் இம்சிப்பாள், எவ்வளவு  கொடுமைகள் இருந்தாலும் சரி, மகன் வீட்டில் இருந்தால் போதும் என்றே வாழ்கின்றனர். இதிலும் பாகுபாடு. பெண் தன் மாமனார், மாமியாரை  கவனிப்பது கடமை. ஆனால், ஒரு ஆண் தன் மாமனார், மாமியாரை கவனிப்பது பெருந்தன்மை. நம் சமுதாயத்திற்கும், பெற்றோர்களுக்கும் இல்லாத  முதிர்ச்சி, டீன் வயது பெண்களுக்கு இருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.
 
தேர்தல் அறிக்கையில் ஒரு கட்சி 21 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் அனுமதி இல்லாமல் திருமணம் செய்ய இயலாது என்ற சட்டத்தை கொண்டு  வந்து குடும்ப அமைப்பை காப்பாற்ற போவதாக சொல்கிறது. ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும் இந்த வாக்குறுதியை, பெண்களுக்கான பகுதியில்  மட்டும்தான் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90 சதவீத திருமணங்கள் பெற்றோரின் விருப்பத்துடன்தான் நடக்கின்றன. பெற்றோர்களை மீறி திருமணம்  செய்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். பெற்றோரின் ஒப்புதல் அவசியம் எனக்கூறும் இந்த வாக்குறுதி, 21 வயதான பெண், ஆண் இருவரின்  ஒப்புதலும் அவசியம் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறது. பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் ஆசைப்படி, விருப்பப்படி கட்டாயப்படுத்தாமல் திருமணம்  செய்யவேண்டும் என்ற வாக்குறுதியை தர ஏன் மறுக்கிறது.

21 வயதாகியும் தன் துணையை தேர்வு செய்ய முடியாதவர்களுக்கு இந்த நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் திறமை எப்படி இருக்கும். அவர்களுக்கு  எதற்கு ஓட்டுரிமை. அதையும் பெற்றோர்களின் ஒப்புதலுடன் செய்ய சொல்லலாமே.  பெண் கருக்கொலையை பல பிரச்சனைகளின் முடிவாகத்தான்  பார்க்கவேண்டும். இதை ஆரம்பமாக பார்க்காமல், எதனால் இந்த முடிவிற்கு குடும்பங்கள் தள்ளப்பட்டன என்பதை ஆராய்ந்து, அது சம்மந்தமான பல  பிரச்சனைகளை தீர்த்தால்தான் இதற்கு தீர்வு கிட்டும்’’ என்றார் சமூக ஆர்வலருமான ஓவியா. இந்த ஆய்வில் பெண் குழந்தை வேண்டாம் என்ற  காரணங்களில், 72% பேர், பொருளாதார சுமையையே காரணம் என்கின்றனர். 86% பேர் ஆண் வீட்டின் பெருமை என்றும், 55% பேர் முதிர்ந்த காலத்தில்  மகன் தான் காப்பாற்றுவான் என்றும், 46% பங்கேற்பாளர்கள் பெண் பாதுகாப்பிற்கான பயத்தை காரணமாக சொல்கின்றனர்.

ஸ்வேதா கண்ணன்