தேசத்தை உலுக்கிய கதுவா வழக்கு



“என் மகளை எல்லா இடத்திலும் தேடினேன்... ஆனால், கோயில் மிகவும் புனிதமான இடமென்பதால்
அங்கே மட்டும் தேடவில்லை!”
- ஆசிஃபாவின் தந்தை

“என் மகளின் நினைவுகள் என்னை வாட்டுகின்றன. அவளது வயதுக் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கையில் என்
மனம் கனக்கிறது!”
- ஆசிஃபாவின் தாய்

கதுவா வழக்கின் தீர்ப்பை நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்க, நாட்டை கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய வழக்கின் தீர்ப்பை பதான்கோட் நீதிபதி தேஜ்விந்தர் சிங் கடந்த வாரம் வழங்கினார். வழக்கில் ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி தன் மகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் தந்தை ஒருவர் புகார் அளித்தார். ஜனவரி 17-ம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமிதான் காணாமல்போனவர் என்பது விசாரணையில் தெரியவர, மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவர,  இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  

வழக்கின் விசாரணையில், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நான்கு நாட்கள் அடைத்து வைத்திருந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  பின்னர் கொடூரமாகக் கொலை செய்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் வீசியதாகவும் குற்ற வாளிகள் தெரிவித்துள்ளனர்.

கதுவா காட்டுப்பகுதியில் இருந்து சிறுமியை கடத்திச் சென்ற கயவர்கள் கோவில் ஒன்றில் நான்கு நாட்களாக மறைத்து வைத்துள்ளனர். சிறுமியின் நினைவு திரும்பாத வகையில் மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமலே இந்த கொடூர சம்பவத்தை கோவிலுக்குள் நிகழ்த்தி உள்ளனர். இந்த படுபாதகச் செயல் வெளியில் தெரியாமல் இருக்க தொடர்ந்து பூஜைகளை செய்து கொண்டே சம்பவத்ைத நிகழ்த்தியுள்ளனர்.

இறுதியாக சிறுமியின் தலையில் கல்லை போட்டு கொலையும் செய்துள்ளனர். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட காமுகர்களான முதன்மை குற்றவாளி சஞ்ஜித் ராம் மற்றும் 4 காவல் துறையினர் என மொத்தம் 8 பேரை காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கில்சஞ்ஜித் ராம் என்பவன் மூளையாகச் செயல்பட்டதாகவும், காவல்துறை அதிகாரிகள் வழக்கின் சாட்சியத்தை அழிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

சிறுமியின் மரணம் குறித்து அம்மாநில காவல் துறையினர் தொடக்கத்தில் விசாரணை எதுவும் நடத்தவில்லை. கொந்தளித்து போன பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். சிறுமிக்கு நீதி கேட்டு தேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசியக்கொடியுடன் பெரிய அளவில் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவத்துக்குப் பல்வேறு மிரட்டல்களும் விடுக்கப்பட்டது.  வழக்கிலிருந்து  விலகுமாறு அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.  உச்ச நீதிமன்றம்  ஜம்மு-காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஒருவழியாகக் கதுவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து காஷ்மீரில் வழக்கு நடந்தால் உரிய நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். விசாரணை ஜூன் 3-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதி தேஜ்விந்தர் சிங் தீர்ப்பை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தீர்ப்பு நாள் அன்று, சிறையில் இருந்து குற்றவாளிகள் 8 பேரில் ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவனைத் தவிர்த்து, மற்ற 7 பேர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட்  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊர் தலைவரும் கோவில் பூசாரியுமான சஞ்ஜித் ராம், காவல்துறை சிறப்பு அதிகாரிகள் தீபக்  கஷூரியா மற்றும் பர்வேஸ் குமார் என்ற, மூன்று கயவர்களுக்கு ஆயுள் தண்டனையும், சப் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வர்மா, தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த தத்தா என்ற மூன்று கொடியவர்களுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொலை மிரட்டல், அச்சுறுத்தல்,  பாலியல் வல்லுறவு செய்வோம் என்ற அனைத்துவிதமான அச்சுறுத்தல்களையும் கடந்து, மிரட்டல்களுக்கு துளியும் பணியாமல் துணிச்சலுடன் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை நிகழ்த்தி, வழக்கை சரியான பாதையில் நடத்தி. சிறுமி ஆசிஃபாவின்’ வன்கொலைக்கு நீதியை பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்  தீபிகா சிங் ராஜாவத்  மிகவும் பாராட்டுக்குரியவர்.

அவரோடு இணைந்து, இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளுக்கும் உறுதுணையாக இருந்து உறுதியுடன் போராடிய, சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் தாலிப் ஹுஸைன், இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து, சட்டத்தின் முன் நிறுத்திய விசாரணை அதிகாரி, ஷ்வேதாம்மரி ஷர்மா மற்றும் இந்தச் செய்தியை முதலில் வெளி உலகிற்கு கொண்டு வந்து, உலகம் அறியச் செய்த காஷ்மீர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(CPIM)  சட்டமன்ற உறுப்பினர் தோழர் யூசுப் தாரிகாமி, இவர்களோடு இணைந்து வழக்கை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற அனைத்து தோழர்களும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மகேஸ்வரி நாகராஜன்