சீதா தேவியின் Street Vision



எங்கள் வீட்டில் மொத்தம் 6 குழந்தைகள். சாலையோர நடைபாதையில் 6 குழந்தைகளையும் நடுவில் படுக்க வைத்து ஒரு பக்கம் அம்மா இன்னொரு பக்கம் அப்பாவுமாக இரவில் வரிசையாக படுத்திருப்போம். 
என் அப்பாவுக்கு ரயில்வேயில் போர்டர் வேலை.  சாமான்களைத் தூக்கும்போது பயணிகள் கொடுக்கும் கூலிதான் குடும்பத்தின் மொத்த வருமானமும். அதிகாலை 4 மணிக்கு போனால்தான், வெளியூர் ரயில்களில் வந்திறங்கும் பயணிகளின் உடமைகளைத் தூக்கக் கூலி கிடைக்கும். கொஞ்சம் தாமதமானால் அதுவும் இல்லை. அப்பா ஒருத்தரின் வருமானத்தை நம்பியே ஆறு பிள்ளைகளின் சாப்பாடும், படிப்பும் இருந்தது.

நாங்கள் பெண்கள் நால்வரும் வளர்ந்து பெரிய மனுஷிகள் ஆகும்வரை சாலையில்தான் தினசரி வாழ்க்கை. அதன் பிறகே 250 ரூபாய் வாடகை கொடுத்து ஒரு சின்ன அறைக்கு மாறினோம்.சிறுவயதில் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது காலை உணவுன்னா என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. வெறும் தண்ணியை குடித்துவிட்டு பல நாட்கள் பட்டினியாய் பள்ளிக்கூடம் போவோம்.

கிடைக்கும் கூலியை காலை 10 மணிக்கு அப்பா கொண்டு வந்து அம்மாவின் கையில் கொடுத்தால்தான் எங்களுக்கு அன்றைக்கு சாப்பாடு. 150, 200 ன்னு அப்பா கொண்டு வருவார். அது அன்றைய சாப்பாட்டுக்கு மட்டுமே. கூலி கிடைக்காத நாட்களில் சாப்பாடு இருக்காது. அப்பா வந்துட்டாரா? இன்னைக்கு சாப்பாடு இருக்கான்னு அம்மாவுடன் தெருவில் நின்று ஆறு குழந்தைகளும் ரோட்டைப் பார்த்து நிற்போம். சாப்பாடு போட்டால்தான் படிப்பே எங்களுக்கு ஏறும். பெரும்பாலும் நிலா வெளிச்சத்துலதான் சாப்பிடுவோம். ஒரு சில நாட்கள் அப்பாவுக்கு முடியலை, வேலைக்கு போகவில்லை எனில் அன்று முழுவதும் சாப்பாடு இருக்காது.

அம்மாவும் அப்பாவும் ரொம்ப அன்பானவுங்க. எதுவுமே நமக்கு கிடைக்கலைன்னாலும், இருப்பதை பகிர்ந்து கொடுத்து வாழனும் என்கிற எண்ணத்தை எங்களுக்கு விதைச்சாங்க. கண்முன் யார் கஷ்டப்பட்டாலும் ஓடிச்சென்று உதவ  நினைப்போம். காரணம் இளமையில் எல்லாத்துக்கும் நாங்கள் கஷ்டப்பட்டோம். உணவுக்கு கஷ்டம், உடைக்கு கஷ்டம், படிக்க கஷ்டம், படுக்கக் கஷ்டம், வெளியில எங்காவது செல்லக் கஷ்டம். கஷ்டம்.. கஷ்டம்.. கஷ்டம். இளமையில் கஷ்டத்தை தவிர வேறு எதையும் நாங்கள் பார்க்கல. வறுமை சுத்தி சுத்தி எங்களை வதைத்தது.

இந்த நிலையில் நான் பி.காம் படித்தேன். படித்து வளர்ந்த பிறகு என்னவெல்லாம் எனக்கு கிடைக்காமல் கஷ்டப்பட்டேனோ, அப்படி யாரும் கஷ்டப்படக் கூடாதென நினைக்க ஆரம்பித்து, நான் தொடங்கிய இந்த அமைப்பிற்கு ‘ஸ்டீட் விஷன்’ (Street Vision) எனப் பெயர் என்கிற சீதா தேவி, சென்னையில்  உள்ள  15  மண்டலங்களில்(zone) 42,610 தெருக்களிலும் ஆதரவற்று இருப்பவர்கள்.. சாப்பாடு இல்லாமல் தவிப்பவர்கள்.. மாற்று உடையற்று வாழ்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதே என் விஷன் என்கிறார். சென்னையின் தெருக்களில் 27 சதவிகிதம் மக்கள் இரவு சாப்பாடின்றி தூங்குகிறார்கள். சாப்பாடு பாக்கெட்டோடு இரவு 2 அல்லது 3 மணிக்கு சென்றாலும் பசியோடு சாலையில் தூங்கும் மக்களைப் பார்க்கலாம் என்கிறார் அனுபவ வார்த்தைகளை அழுத்தமாக உதிர்த்தவாறு.

சாலையில் உறங்கும் மக்களுக்காகவே ‘ஃபுட் டிரைவ்’ சேவை தொடங்கி இன்றுடன் 1509வது நாள். திருமண  வீடுகள், விசேஷ வீடுகளில் மீதியாகிற உணவுகளை கொடுக்க ஃபுட் டிரைவ் ஆட்டோவில் உள்ள எண்ணுக்கு அழைத்தாலே போதும். நாங்கள் ஆட்டோவில் சென்று உணவை எடுத்து வந்து தேவைப்படுவோருக்கு கொடுப்போம்.

பெரும்பாலும் நாங்கள் அரசு மருத்துவமனை வளாகங்கள், பெரம்பூர், வியாசர்பாடி தெருக்கள் என ஏழை எளிய மக்கள் நிறைந்த பகுதிகளை நோக்கியே செல்வோம் என்கிற சீதா தேவி சொந்தமாக கம்யூனிட்டி கிச்சன் ஒன்றையும் நடத்துகிறார். என்னைச் சுற்றிலும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். சமைக்கத் தேவையான உணவுப் பொருட்களை முகம் காட்டாமலேவாசலில் வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள் என்றவர், சிலர் பணமாகவும், உடைகளாகவும் கொடுத்தும் உதவி செய்கிறார்கள் என்கிறார்.

உணவு, உடை தவிர்த்து, பெண் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கின், நோயால் தவிப்பவர்களுக்கு மருத்துவ உதவி, கைவிடப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லம்  என ஸ்டீட் விஷன் மூலம் 21 வகையான சமூக சேவைகளை செய்கிறேன் என்றவர்,  இத்துடன் முதியோர் வளமையம் (Elders club) ஒன்றையும் நடத்தி வருகிறார். இருப்பிடம் இன்றி சாலைகளில் இருக்கும் முதியவர்கள், வளமையத்திற்கு வந்து, செய்தித்தாள் படித்து, டிவி பார்த்து, மற்றவர்களுடன் சிரித்துப பேசி அளவளாவிவிட்டு மாலைதான் செல்கிறார்கள். தினமும் 120 முதியோர்கள் வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு, டீ, பிஸ்கட் போன்ற சிற்றுண்டிகள் வள மையத்தில் கொடுக்கப்படுகிறது.

சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் மூலம் தொடங்கப்பட்ட ‘காவல் கரங்கள்’’ திட்டத்தில் தெருக்களில் கேட்பாரற்று விடப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் பாதித்தவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என சாலைகளில் சுற்றுபவர்களைக் காப்பாற்றி காவல்துறை அனுமதியுடன் முறையான அரசு பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து வருகிறேன்.  இதற்காகவே ‘காவல் கரங்கள்’ திட்டத்தின் அடையாள அட்டை எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கென இருக்கும் வாட்ஸ்ஆப் குழுவிலும் எண்ணை இணைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து மனநலம் பாதித்த பெண் ஒருவர் உடையின்றி விமானநிலையம் அருகே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

உடனே செல்லுங்கள் என்றோ, அல்லது குழந்தை ஒன்று பேருந்து நிலையத்தில் தனியாக சுற்றுகிறது என்றோ கைபேசிக்கு அழைப்பு வரும். இவ்வாறு வரும் அழைப்புக்கு செவிசாய்த்து, பாதுகாப்பாக அவர்களை அழைத்துச் சென்று சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு இல்லங்களில் (shelter home) சேர்ப்போம். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு இணைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது என்றவாறு விடைபெற்றார்.

சீதாதேவியின் ‘O2  ஆக்சிஜன் ஆட்டோ’

கொரோனா இரண்டாவது அலை பீக்கில் இருந்த நேரம் அது. மரம் வளர்த்தால் ஆக்சிஜன் கிடைக்கும் என்று படிச்சிருக்கேன். ஆனால் ஆக்சிஜன் கேட்டு என் அம்மாவின் உயிர்
போராடியதை நேரில் பார்க்கிறேன். எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை. ஆக்சிஜனும் கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனைக்கு வெளியில் மட்டும் 70 ஆம்புலன்ஸ்களுக்கு மேல் வரிசையாய் நிற்க, சில தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆக்சிஜனுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் கேட்டார்கள்.

மக்களின் அழுகுரலும்.. ஆம்புலன்ஸ் வண்டிகளின் சைரன் சத்தமும் செவிகளை துளைக்க, கண் முன்னால் சட் சட்டென பலர் இறக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம். கொடுமையான நேரமாக அது இருந்தது. ஆனால் அது என் அம்மாவின் உயிரையும் வாறிக்கொண்டு போகும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

அம்மாவுக்கு ஆக்சிஜனும் படுக்கையும் கேட்டு நீண்ட நேரம் மருத்துவமனை வாயிலில் காத்திருக்கிறோம். இறுதி மூச்சு இழுத்துக்கொண்டே இருக்க, என் கண் முன்னால் அம்மாவின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிவதைப் பார்த்து கண்ணீரோடு நான் நிற்கிறேன். எல்லாவற்றையும் திருப்பிப் பெறலாம்..

ஆனால் உயிர்? அந்த நிமிடம் என் மனசை என்னவோ செய்தது. மே மாதம் 1ம் தேதி அம்மா இறக்க, 5ம் தேதி அம்மாவின் 65 பிறந்தநாள். அம்மாதான் எங்களின் பலம். அன்லிமிடெட் அன்பு அம்மாவிடத்தில் எப்போதும் கிடைக்கும். யாருக்கு தெருவில் உணவில்லை என்றாலும், உடை இல்லை என்றாலும் கூப்பிட்டு கொடுக்கச் சொல்லுவார். ‘ஸ்டீட் விஷன்’ தொடங்கி  இத்தனை சமூக சேவைகளையும் நான் செய்ய என் அம்மாவே காரணம்.

என்னுடைய ஃபுட் ட்ரைவ் ஆட்டோவை அந்த நிமிடமே ஆக்சிஜன் ஆட்டோவாக மாற்றி, எந்த இடத்தில் ஆக்சிஜன் கேட்டு என் அம்மாவின் உயிர் தவித்ததோ அந்த இடத்தில் நிறுத்தி, ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு இரவு பகல் பாராமல் இலவசமாய் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது என்னைப் பற்றிய செய்தி மீடியாக்களில் பரவியது.  ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்ட கைபேசி அழைப்புகள் ஆக்சிஜன் கேட்டு வரத் தொடங்கியது. பல உயிர்களை ஆக்சிஜன் கொடுத்து மீட்டேன்.

இந்த நிகழ்வு ஆக்சிஜன் கிடைக்காமல் தவற விட்ட என் அம்மாவின் உயிரை மீட்ட எண்ணத்தை எனக்கு கொடுத்தது. பலரும் கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீரோடு எனக்கு நன்றி தெரிவித்தார்கள். தொடர்ந்து 90 நாட்கள் ஆக்சிஜனை இலவசமாக வழங்கியதில் 800க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.

எனது செயலுக்கு பலரிடமிருந்தும் பாராட்டுக் கிடைத்தது. தங்களிடம் இருந்த சேமிப்புகளை வழங்கி பலரும் நிதி உதவி செய்தார்கள். தொடர்ந்து இந்தியாவை கோவிட் ஃப்ரீ நாடாக மாற்ற நினைத்து, ஆக்சிஜன் சிலிண்டர்களோடு எனது இரு சக்கர வாகனத்தில் சென்னை முதல் காஷ்மீர் வரை பயணித்து, கோவிட் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தேன்.

மகேஸ்வரி நாகராஜன்