வாசகர் பகுதி



*ஆரோக்கியமாக வாழ சில வகை உணவுகளை தவறாமல் உணவில் சேர்ப்பது அவசியம். அந்த வகையில் பார்க்கும் போது சில விதைகள் நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. இதயம் முதல் சரும ஆரோக்கியம் வரை நன்மைகளைத் தரும் இந்த விதைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

*சியா விதைகள் : 2 தேக்கரண்டி சியா விதைகளில் 10 கிராம் அளவிற்கு நார்ச்சத்துள்ளது. தயிர் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். பாதாம் பாலுடன் ஊறவைத்து சாப்பிட்டால், குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான தூக்கத்தை தரும்.

*வைய்ல்ட் ரைஸ் : புல் விதை வகையைச் சார்ந்தது. புரதச்சத்து நிறைந்தது. வெள்ளை அரிசியை விட அதிக ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டது. மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி 6 மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளது.

*பூசணி விதைகள் : மெக்னீசியம் நிறைந்ததால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கவும், தசைகளுக்கு சக்தியை வழங்குகிறது. இதை சூப் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம்.

*மாதுளை விதைகள் : சிவப்பு நிற மணிகள் போன்று இருக்கும் இந்த விதையில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. ஒரு முழு கப் மாதுளை விதைகளில் 130 கலோரிகள் உள்ளன. மாதுளை விதைகள் சருமத்தில் ஏற்படும் காயங்கள், தழும்புகளை குணமாக்கும் தன்மை கொண்டவை. மூளையை சுறுசுறுப்பாக்கும். ஞாபக சக்தியை
அதிகரிக்கும்.

*குயினோ : புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு சத்து நிறைந்தது. காலை உணவில் ஓட்ஸ்மீல் கஞ்சிக்கு பதிலாக குயினோவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் பசையத் தன்மை இல்லை என்பதால் பசைய உணவு அழற்சி இருப்பவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இதில் ஆக்ஸலேட் காணப்படுவதால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.

*ஆளி விதைகள் : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், இதயத்திற்கு இதமானது. இதில் உள்ள நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க
உதவுகிறது. இதை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

*சூரியகாந்தி விதைகள் : ஒரு அவுன்ஸ் சூரியகாந்தி விதைகளில் விட்டமின் ஈ அதிகளவு காணப்படுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க
உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. விட்டமின் டி சத்து காணப்படுகிறது.

*எள் விதைகள் : கெட்ட கொழுப்புக்களை நீக்க பயன்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. ஆரோக்கியமான எலும்புகள் உருவாக உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.