தலக்கோணத்து தலைவாழையில் கவர்ச்சி விருந்து





ஆகாயத்திலிருந்து விழும் கங்கை போல் பொங்கி பிரவாகமெடுத்து விழுகிறது சாலக்குடி அருவி. பாலச்சந்தரின் ‘புன்னகை மன்ன’னிலிருந்து, மணிரத்தினத்தின் ‘ராவணன்’ வரை நடமாடிய இடம். அங்கு தான் ‘தலக்கோணம்’ படப்பிடிப்பு. சமுத்திரகனியின் உதவியாளர் கே.பத்மராஜ், புதுமுகங்கள் ஜிதேஷ், ரியாவை இயக்கிக் கொண்டிருந்தார். இருவருமே குறைச்சலான டிரஸ் போட்டு காதல் பொங்கும் முகத்துடன் ஆடிக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அதன் நடுவில் இருந்த ஒரு சிறு பாறையில் நின்று ஆடினார்கள். டான்ஸ் மாஸ்டர் கேமரா அருகில் நின்று மைக்கில் உத்தரவுகளை பிறப்பிக்க அதன்படி இருவரும் ஆடிக் கொண்டிருந்தார்கள். கேமராமேன் ராமலிங்கம் அதனை கேமராவில் சேகரித்துக் கொண்டிருந்தார்.

மானிட்டரில் அதை பார்த்துக் கொண்டிருந்த இயக்குநர் பத்மராஜிடம் ‘‘படத்துக்கு ‘தலக்கோணம்’ என்று பெயர் வைத்து விட்டு சாலக்குடியில படம் புடிக்கிறீங்களே?’’ என்றோம். ‘‘கதை நடப்பது என்னவோ சாலக்குடிதான். இது பாட்டு சீன். கொஞ்சம் பசுமையாக இருக்கட்டுமேன்னு இங்க வந்துட்டோம். ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே புதுசுங்கறதால ரொம்ப டைம் ஆகுது. நாங்க இங்க வந்து நாலு நாட்கள் ஆச்சு. இன்னிக்கு கடைசி நாள். அதான் வேகமா போய்ட்டிருக்கு...’’
பேசிக் கொண்டிருக்கும்போதே... படப்பிடிப்பில் பரபரப்பு. பாறையில் நின்று ஆடிக்கொண்டிருந்த ஜிதேஷும், ரியாவும் அப்படியே தண்ணீரில் குதித்தார்கள். ஜிதேஷ் தண்ணீரில் நீந்திச் சென்று அடுத்த பாறையை பிடித்து ஏறினார். ரியா தண்ணீரில் தத்தளித்தார். இங்கிருந்து நாலைந்து பேர் பதறியடித்து ஓடி ரியாவை தூக்கி ஒரு பாறையில் ஏற்றினார்கள். இருவரும் பதட்டத்துடன் தாங்கள் நின்றிருந்த பாறையைக் காட்டினார்கள். கேமராமேன் அந்த இடத்தை சூம் செய்தார். அப்போது மானிட்டரில் தெளிவாகத் தெரிந்தது; 6 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தது. உடனே அங்கு நின்றிருந்த வனக் காவலர் ஒருவர் அதை துரத்த ஓடினார். வேறு பாறையில் படப்பிடிப்பு தொடர்ந்தது... ஹீரோ, ஹீரோயினைக் காப்பாற்றுவது படத்தில் மட்டும்தான் போல...


நம்மிடம் திரும்பிய இயக்குநர் ‘‘நாலு நாளும் இந்த பாம்புங்க தொல்லை தாங்க முடியல. இது பாம்புங்க இனப்பெருக்க காலம்னு அந்த வனக்காவலர் சொல்லிக்கிட்டிருந்தார். ஓகே நாம படம் பற்றி பேசுவோம். ஒரு மந்திரியோட மகள் ஹீரோயின். அவரோட ஒரே கல்லூரியில் படிக்கிறவர் ஹீரோ. இரண்டுபேரும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து என்.சி.சி கேம்புக்காக காட்டுக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் மந்திரி மகளை ஒரு கூட்டம் கடத்துகிறது. அவளுடன் ஹீரோவையும் கடத்துகிறது. அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள், கடத்தியவர்கள் யார், அவர்கள் மீண்டார்களா என்பதுதான் திரைக்கதை. இதற்கான காரணங்களுக்குப் பின்னால பெரிய பெரிய விஷயங்கள் இருக்கிறது. அதற்கு இடையில் அழகான காதலும் இருக்கு...’’ என்றார்.

இயக்குநரிடம் பேசிவிட்டு திரும்பிப் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் ஆதிவாசிகள் உடையில் இன்னும் கவர்ச்சியாக நின்று கொண்டிருந்தார்கள். ‘‘மனிதனோட முதல் காதல் உதித்த இடம் காடுதான். லவ்வர்ஸ் இருவரும் காட்டுக்குள்ள தான் இருக்காங்க. இங்க அவங்க திருமணம் நடந்தா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனைய பாட்டுல சேர்த்திருக்கோம்...’’ என்றார், இயக்குநர்.
எப்படியோ, ரசிகர்களுக்கு தலக்கோணத்து தலைவாழையில் கவர்ச்சி விருந்து காத்திருக்கிறது.
- மீரான்