ஹன்சிகா போல் காதலிப்பீர்களா?





ஹலோ தன்ஸ், உங்கள் பெயரே தன்ஷிகாதானா?
- துரை கார்த்திகேயன், சின்ன காஞ்சிபுரம்.

என் ஒரிஜினல் பெயரே தன்ஷிகாதான். தஞ்சாவூரிலுள்ள பிலோமினா நகரில் பிறந்த தமிழ்ப் பெண் நான்.

‘பேராண்மை’யில் நடித்ததற்கும், ‘அரவான்’ படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
- வசந்தா, குடியாத்தம்.

‘பேராண்மை’யில் ஜெனீபர் என்ற கல்லூரி மாணவி வேடம். அப்போது எனக்கு 17 வயது. ‘அரவான்’ படத்தில் வனப்பேச்சி என்ற மெச்சூரிட்டி கேரக்டர். படப்பிடிப்பு தொடங்கியபோது எனக்கு 21 வயது. இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், வசந்தபாலன் இருவருமே திறமையானவர்கள். பொறுமையாகவும், நன்கு புரிந்துகொள்ளும் விதமாகவும் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.
 
புதிய படத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
- மருதுபாண்டி, காரைக்குடி.

கட்டளைகள் எதுவும் போடுவது இல்லை. நல்ல கதையும், அதில் என் கேரக்டர் வித்தியாசமாகவும் இருந்தால் கால்ஷீட் கொடுத்துவிடுவேன். புதிய டைரக்டராக இருந்தாலும் சரி, கதை நன்றாக இருந்தால் கேட்பேன். முன்னணி இயக்குநர் படம் என்றால், அவருக்கே நன்கு தெரியும், படத்தில் என்னை எப்படிக் காட்ட வேண்டும் என்று. அவரை முழுமையாக நம்பி, கதைகூட கேட்காமல் நடிப்பேன்!

சந்தானம் ஜோடியாக ‘யா யா’ படத்தில் நடிக்கிறீர்களே! உங்கள் இமேஜ் பற்றி கவலைப்படவில்லையா?
- முரளி, புதுச்சேரி.

முதலில் உங்கள் கேள்வியே தவறு. ‘யா யா’ படத்தில் நான் சிவாவுக்கு ஜோடி. சந்தானத்துக்கு சந்தியா ஜோடி. யார் ஹீரோவாக நடித்தாலும் சரி, திறமையானவராக இருந்தால் போதும். கதையைப் பொறுத்துதான் ஒருவர் வெற்றிகரமான ஹீரோவாக தீர்மானிக்கப்படுகிறார். சந்தானம் மிகவும் திறமையானவர். ஒவ்வொரு படத்திலும் அவரது காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாபெரும் வெற்றிபெற்று, இன்றைக்கு மிக முக்கியமான ஒரு இடத்தில் இருக்கிறார்.
 
‘விழித்திரு’ படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களை நினைத்தால் தூக்கம் வருவது இல்லை! நன்றாகத் தூங்க ஒரு வழி சொல்லுங்களேன்.
- மனோ, கன்னியாகுமரி.

அடக்கடவுளே! வெறும் போட்டோவைப் பார்த்ததற்கே இவ்வளவு பெரிய பில்டப்பா? படம் ரிலீசானதும் பார்த்துவிட்டு சொல்லுங்கள், வழி சொல்கிறேன்.

பாலா இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் நடித்தபோது, அவர் எதிர்பார்த்த மாதிரி நடிக்கவில்லை என்று, கன்னத்தில் அடி வாங்கினீர்களாமே! உண்மையா மேடம்?
- பிரபாகரன், கிருஷ்ணகிரி.

இந்த தகவலில் துளிகூட உண்மை இல்லை. ஒருநாள் கூட அவர் என்னைத் திட்டியதும் இல்லை, அடித்ததும் இல்லை. ‘பரதேசி’ படத்தில் ஒப்பந்தமானபோது, ‘பாலா ரொம்ப கோபப்படுவார்... அடிப்பார்... திட்டுவார்’ என்று சொல்லி என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு ஒரு சின்னக் குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லி, ஒவ்வொரு வசனத்தையும் புரியவைத்து, எல்லா காட்சியிலும் சிறப்பாக நடிக்க வைத்தார்.



நீங்கள் யாருடைய ரசிகை? அவரை ரசிப்பதற்கு என்ன காரணம்?
- உமா மகேஸ்வரி, திண்டுக்கல்.

ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது, அதில் நடித்தவர்களின் கடினமான உழைப்பையும், சிறப்பான நடிப்பையும் பார்த்து, அதிலுள்ள நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வேன். ரஜினியின் ஸ்டைல், சூர்யாவின் கடினமான உழைப்பு மற்றும் தனித்துவமான நடிப்பு, தனுஷின் யதார்த்தமான நடிப்பு என, ஒவ்வொருவரிடமும் ஒரு விஷயத்தை ரசிப்பேன். நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவர், சிம்ரன். அவரது நடிப்பும், நடனமும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை.

நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என்று பத்திரிகையில் படித்தேன்! உங்கள் வீட்டுக்கு வந்தால், விருந்து கிடைக்குமா?
- அருணகிரி, மதுரவாயல்.

உங்களுக்கு பதில் சொல்லும்போது, வீட்டில் ‘பெப்பர் சிக்கன்’ தயாரித்துக் கொண்டிருக்கிறேன். விருந்து கிடைக்குமா என்று கேட்கிறீர்கள். சந்தர்ப்பம் அமையட்டும், பார்க்கலாம்.
 
ஹன்சிகாவைப் போல் தன்ஷிகாவுக்கும் காதல் பிடிக்குமா?  
- மஞ்சுளா கண்ணன், ராணிப்பேட்டை.

காதல் எல்லோருக்கும் பொதுவானது. அது எப்போது வரும், எப்போது போகும் என்று யாராலும் கணிக்க முடியாது. எனக்கு வந்தால் பகிரங்கமாக சொல்வேன். அதற்காக, காதல் வர வேண்டும் என்று பிளான் போட்டு காத்திருக்க மாட்டேன். அது தானாக நடக்கும். இப்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.  
(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்


கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
‘தன்ஷிகாவிடம்
கேளுங்கள்’,
வண்ணத்திரை,  
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4.