பிரமாண்ட ஜில்லா



சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் ‘ஜில்லா’. இதன் நாயகி காஜல் அகர்வால். இவர்களோடு மோகன்லால், பூர்ணிமா  பாக்யராஜ், மகத், சூரி, தம்பிராமையா, ரவிமரியா, பிரதீப்ராவத், ஜோ மல்லூரி, ப்ளாக் பாண்டி ஆகியோரும் இருக்கிறார்கள். ‘‘முதலில் ‘ஜில்லா’ என்கிற  டைட்டில் எப்படி கிடைத்தது என்பதை குறித்து சொல்லிவிடுகிறேன். ‘ஜில்லா’ என்றால் குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த கதையாக இருக்கும் என்று நீங்கள் கருதலாம்.

ஆனால், இந்த கதை அப்படி அல்ல. இந்தப் படத்தின் கதையை சில வருடங்களுக்கு முன் ரெடி பண்ணிவிட்டேன். அந்த சமயத்தில் டைட்டில் எதுவும் வைக்கவில்லை. லொகேஷன் பார்க்க மதுரைக்கு போனேன். அப்போது தற்செயலாக சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தேன். அந்த  பசங்க பயன்படுத்திய வார்த்தைதான் ‘ஜில்லா’. கேச்சிங்காக இருந்ததால் அந்த பெயரையே டைட்டிலாக வைத்துவிட்டோம்.

இதில் விஜய்யின் தோற்றம் சமீபத்தில் பார்க்காத அளவுக்கு இருக்கும். ‘வேலாயுதம்’ படத்தில் இணை இயக்குநராக வேலை செய்யும் போதே அவரிடம் இந்தப் படத்தின் கதையை சொன்னேன். கிரீன் சிக்னல் கிடைத்ததும் எந்தளவுக்கு கதைக்கு வலு சேர்க்க முடியுமோ அந்தளவுக்கு வலு சேர்த்துள்ளேன்.

படம் ஆரம்பிக்கும் போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு தைரியத்தில் லாலை சந்தித்து கதை சொன்னேன்.  நானே எதிர்பார்க்காத வகையில் முதல் சந்திப்பிலேயே ஓ.கே.சொன்னார். மதுரைப் பெண்ணாக வரும் காஜல் அகர்வாலுக்கு இந்தப் படம் பேர் சொல்லும் படமாக இருக்கும். ‘தமிழன்’ படத்துக்கு பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கும் இமான் அனைத்துப் பாடல்களிலும் தனித்துவத்தை காண்பித்துள்ளார்.

 சூப்பர் குட் பிலிம்ஸ் படங்களில் இது பிரம்மாண்ட படைப்பாக இருக்கும். ஏனெனில் ஜப்பானில் சாங் ஷூட்டிங், 100 ஏக்கர் சோளக் காட்டில் சண்டைக் காட்சி என படம்  அமர்க்களமாக வந்துள்ளது...’’ என்கிறார் இயக்குநர் நேசன்.

- எஸ்