ஜில்லா



தாதா தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர் மோகன்லால். ஒரு கட்டத்தில் தாதா தொழிலுக்கு போலீஸ் தடா போடுகிறது. தன் தொழில் பாதுகாப்புக்காக வளர்ப்பு மகன் விஜய்யை போலீஸ் நாற்காலியில் உட்கார வைக்கிறார். காக்கிச் சட்டையை அணியும் விஜய் தன் வளர்ப்பு அப்பாவுக்கே ஆப்பு வைக்கிறார்.

அப்பா, மகன் உறவில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதிக் கதை.
விஜய்க்கு ஆக்ஷன் ஹீரோவுக்கான டைலர் மேட் ரோல். அலட்டிக் கொள்ளாமல் ஆட வேண்டிய இடத்தில் ஆடுகிறார், பாட வேண்டிய இடத்தில் பாடுகிறார், அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்கிறார். ஆக்ஷன் படத்தில் கதாநாயகிக்கு என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதைத்தான் காஜல் அகர்வால் ரோலுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

மோகன்லாலின் கம்பீரமான தோற்றம் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறது. சூரிக்கு இதில் வைட் ரோல். முடிந்தளவுக்கு சிரிக்கவைக்கிறார். மகத், சம்பத், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். டி.இமான் இசையில் ‘கண்டாங்கி' பாடல் ஒன்ஸ் மோர் கேட்கலாம்.

 பரபரப்பான ஆக்ஷன் கதைக்கு தேவையான ஒளிப் பதிவை கணேஷ் ராஜவேலுவின் கேமரா மிகச் சரியாக செய்துள்ளது. ஆக்ஷன் ஸ்கிரிப்ட் கிடைத்தால் கோடம்பாக்க இயக்குநர்கள் எப்படி படம் எடுப்பார்களோ அப்படி எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஆர்.டி.நேசன்.