அஜீத் பிளாஷ்பேக் ஸ்டோரி



மே 1ம் தேதி அஜீத்துக்கு பிறந்த நாள். தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று அதிகார பூர்வமாக அவர் அறிவித்த பிறகும் கூட, அவருக்கான ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும் இயங்கி வருகின்றன. இதுவரை அஜீத் 54 படங்களில் நடித்துள்ளார். அதைப்பற்றிய தொகுப்பு இது.

தமிழில் செல்வா இயக்கிய ‘அமராவதி’ மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜீத், பிறகு தெலுங்கு, இந்தியில் சேர்த்து 54 படங்களில் நடித்துள்ளார். விரைவில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 55வது படம். அஜீத்தை 2 படங்களில் இயக்கியவர்கள் கே.சுபாஷ், அகத்தியன், ராஜ்கபூர், எஸ்.எழில், கே.எஸ்.ரவிக்குமார், விஷ்ணுவர்தன். ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை கே.சுபாஷ் இயக்கினார். ‘வான்மதி’, ‘காதல் கோட்டை’ படங்களை அகத்தியன் இயக்கினார்.

‘அவள் வருவாளா’, ‘ஆனந்த பூங்காற்றே’ படங்களை ராஜ்கபூர் இயக்கினார். ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ படங்களை எஸ்.எழில் இயக்கினார். ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். ‘பில்லா’ ரீமேக், ‘ஆரம்பம்’ படங்களை விஷ்ணுவர்தன் இயக்கினார்.
அஜீத்தை ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என 4 படங்களில் சரண் இயக்கினார்.

ஒரு படத்தில் மட்டும் அஜீத்தை இயக்கியவர்கள் லிஸ்ட் கொஞ்சம் நீள்கிறது. ‘பிரேம புஸ்தகம்’ கொல்லப்புடி சீனிவாஸ், ‘பாசமலர்கள்’ சுரேஷ் மேனன், ‘ராஜாவின் பார்வையிலே’ ஜானகி சவுந்தர், ‘ஆசை’ வசந்த், ‘கல்லூரி வாசல்’ பவித்ரன், ‘மைனர் மாப்பிள்ளை’ வி.சி.குகநாதன், ‘ராசி’ முரளி அப்பாஸ், ‘உல்லாசம்’ ஜேடிஜெர்ரி, ‘பகைவன்’ ரமேஷ் கிருஷ்ணன், ‘ரெட்டை ஜடை வயசு’ சி.சிவகுமார், ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ விக்ரமன், ‘உயிரோடு உயிராக’ சுஷ்மா அகுஜா, ‘தொடரும்’ ரமேஷ்கண்ணா,

‘உன்னைத் தேடி’ சுந்தர்.சி, ‘வாலி’ எஸ்.ஜே.சூர்யா, ‘நீ வருவாய் என...’ ராஜகுமாரன், ‘முகவரி’ வி.இசட்.துரை, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ராஜீவ் மேனன், ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ கவிகாளிதாஸ், ‘தீனா’ ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ சரவணசுப்பையா, ‘அசோகா’ சந்தோஷ் சிவன், ‘ரெட்’ சிங்கம் புலி, ‘என்னை தாலாட்ட வருவாளா’ கே.எஸ்.ரவீந்திரன், ‘ஆஞ்சநேயா’ என்.மகாராஜன், ‘ஜனா’ ஷாஜிகைலாஷ், ‘ஜி’ லிங்குசாமி, ‘பரமசிவன்’ பி.வாசு, ‘திருப்பதி’ பேரரசு, ‘ஆழ்வார்’ செல்லா, ‘கிரீடம்’ ஏ.எல்.விஜய், ‘ஏகன்’ ராஜுசுந்தரம், ‘மங்காத்தா’ வெங்கட் பிரபு, ‘பில்லா 2’ சக்ரி டோலட்டி, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ கவுரி ஷிண்டே, ‘வீரம்’ சிறுத்தை சிவா என, 36  பேர் இயக்கி இருக்கிறார்கள்.

தமிழைத் தவிர தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’, இந்தியில் ‘அசோகா’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படங்களில் மட்டும் அஜீத் நடித்துள்ளார். விஜய்யுடன் ‘ராஜாவின் பார்வையிலே’, பிரசாந்த்துடன் ‘கல்லூரி வாசல்’, விக்ரமுடன் ‘உல்லாசம்’, சத்யராஜுடன் ‘பகைவன்’, கார்த்திக்குடன் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’,

 ‘ஆனந்த பூங்காற்றே’, பார்த்திபனுடன் ‘நீ வருவாய் என...’, சுரேஷ் கோபியுடன் ‘தீனா’, அப்பாசுடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ஆர்யாவுடன் ‘ஆரம்பம்’ என, மற்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அஜீத் நடித்துள்ளார்.
‘அமராவதி’ படத்தில் அஜீத்துக்கு விக்ரம் டப்பிங் பேசியுள்ளார்.

‘அமர்க்களம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த (பேபி) ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜீத்துக்கு அனொஷ்கா என்ற மகள் இருக்கிறாள். ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை டைட்டிலில் தன் பெயருக்கு முன்னால் போடக் கூடாது என்று கண்டிப்புடன் சொன்ன அஜீத், ‘அசல்’ படத்தின் திரைக்கதை, வசன பணியில் இயக்குனர் சரணுக்கு உதவி செய்தார். அதை மட்டும் டைட்டிலில் போட அனுமதித்தார். கார் ரேஸ் வீரரான அஜீத், கார் பந்தய வீரர் கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறார். தவிர, சொந்தப் படம் தயாரிப்பதற்காக ‘ஏ.கே இன்டர்நேஷனல்’ என்ற கம்பெனியை தொடங்கியுள்ளார்.

 தேவா