போட்டி தயாரிப்பாளர் சங்கம்?



தமிழ் சினிமாவிற்கென்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. தயாரிப்பாளர் கில்டு என்ற அமைப்பும் இருக்கிறது. இது தவிர பிலிம்சேம்பர் என்ற அமைப்பும் உள்ளது. இந்த மூன்றுக்கும் இடையில் உள்ள தகவல்தொடர்பு சிக்கலால் அடிக்கடி டைட்டில் உள்ளிட்ட பல பிரச்னைகள் எழும்.

இந்த நிலையில் தமிழ் இலக்க திரைப்பட, குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்பை கலைப்புலி ஜி.சேகரன் தொடங்கியுள்ளார். (இலக்க என்றால் டிஜிட்டல் என்று பொருள்) இது தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போட்டி சங்கமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வியை கலைப்புலி ஜி.சேகரனிடமே கேட்டோம்.

‘இது எந்த அமைப்புக்கும் போட்டியல்ல. தயாரிப்பாளர் சங்கம் எங்கள் தாய் சங்கம். ஒரு குடும்பத்தில் இருந்த மகன் தனிக் குடித்தனம் செல்வது மாதிரிதான் இது. சர்வைவல்தானே தவிர போட்டியல்ல. சினிமா இப்போது மாறிவிட்டது. கோடிகளில் எடுக்கப்படும் படம், லட்சங்களில் எடுக்கப்படும் படம் என இரண்டாகப் பிரிந்திருக்கிறது. கோடிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை லட்சத்தில் எடுக்கப்படும் டிஜிட்டல் படங்களால் கொடுக்க முடியாது.

எனவே, தனி அமைப்பு, தனி விதிமுறைகள் தேவைப்படுகிறது. டிஜிட்டல் சினிமா, திறமையானவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் கதவைத் திறந்துவிட்டி ருக்கிறது. அவர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும், டிஜிட்டல் சினிமாவைக் கற்றுத் தரவும் இந்த அமைப்பு உதவும்’ என்கிறார் கலைப்புலி சேகரன்.
நாடு முழுவதும் இருக்கும் தயாரிப்பாளர்களை எப்படி ஒருங்கிணைப்பீர்கள்?

‘எங்கள் சங்கத்தில் சேருங்கள் என்று யாரையும் கேட்கப்போவதில்லை. சங்கத்தில் சேர்ந்தால்தான் படம் எடுக்க முடியும் என்றும் சொல்லப்போவதில்லை. எங்கள் உதவி உங்களுக்குத் தேவையென்றால் சேருங்கள். இல்லாவிட்டால் தனியாகவே படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்வோம்.’ குறும்பட தயாரிப்பாளர்களுக்கு என்ன பிரச்னை வரப்போகிறது?

‘தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். என்ன கேமரா, அதற்கு என்ன வாடகை என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறும்படத்தை எடுத்தவர்கள் தனியாகப் பார்க்கிறவரை பிரச்னை இல்லை. பொது இடங்களிலோ, தியேட்டர்களிலோ திரையிட்டால் தணிக்கைக் குழு சான்றிதழ் பெறவேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சங்கம் தீர்வளிக்கும்.’

-மீரான்