கோலிவுட்டுக்கு வரும் கோலி!



ஒரு சில படங்களுக்கு தலைப்பு தான் முகவரியாக அமைந்துவிடுகிறது. பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு இணையாக அந்தப் படங்களின் தலைப்பு எல்லோர் மனதிலும் நச்னு பதிந்துவிடுகிறது.

அந்த வரிசையில் ரீலிஸாகவுள்ள படம்தான் ‘ஒன்பது குழி சம்பத்’. இதன் நாயகன் பாலாஜி. நாயகி நிகிலா. அப்புக்குட்டி, இயக்குநர் இந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், இசை: சார்லி. எழுத்து, இயக்கம் ஜா.ரகுபதி. காதல்கதையை கற்பனையாக சொல்லாமல் உண்மை சம்பவத்தைப் போல சொல்லியுள்ளார்களாம்.

கதைக்களம் திருச்சி என்பதால் அந்த மாவட்டத்தின் வட்டார மொழியையும், பழக்க வழக்கங்களையும் ஹீரோ, ஹீரோயினுக்கு சொல்லிக் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்பை ஆரம்பித்தார்களாம். ‘ஒன்பது குழி’க்கு என்ன அர்த்தம் என்று இயக்குநரிடம் கேட்டால், “ஒன்பது குழி என்பது கோலி விளையாட்டின் வகை.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டைப் பார்க்க முடியும். இது கற்பனைக் கதையாக இருந்தாலும் சினிமாத்தனம் இல்லாத  யதார்த்தமான படமாக இருக்கும்’ என்கிறார் ஜா.ரகுபதி.