விருதுக்கு அலையும் ஹீரோக்கள்!



தேசிய விருது முதல் அமிஞ்சிக்கரை அண்ணாச்சி நினைவு விருது வரை இந்தியாவில் எந்த விருதுகளிலும் 100 சதவிகிதம் உண்மை, நேர்மை இல்லை என்பது சராசரி இந்தியனுக்கும் தெரிந்த ஒன்றுதான். பாரத ரத்னா முதல் பல்லாவரம் கலை விருது வரை இதற்கு விதிவிலக்கல்ல.

எத்தனை சதவிகிதம் நேர்மை என்ற கணக்கைத்தான் பார்க்க வேண்டியது இருக்கிறது. மற்ற விருதுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலும், ஊழலும் அதைச் சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் சினிமா விருதுகளின் நிலை சின்னமனூர் சின்னச்சாமி வரைக்கும் தெரியும். அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள் அந்த சின்னச்சாமியையும் சின்னதாக அதிர்ச்சி அடைய வைத்தது.

திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை அண்மையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் அந்த விருது வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. யார் யாருக்கு என்ன விருது என்பது அங்கு வந்திருக்கும் யாருக்கும் தெரியாதாம். ஒரு வி.ஐ.பி வந்து விருதை அறிவிப்பார்;

இன்னொரு வி.ஐ.பி வந்து விருதை வழங்குவார் என்பது விழாவின் நெறிமுறை. சிறந்த காமெடி நடிகர் என்று அறிவித்த வி.ஐ.பி அது யார் என்று சொல்வதற்கு முன்பாகவே ஒரு காமெடி நடிகர் விருதை வாங்க மேடைக்கு எழுந்து போனார்.

விருதை வாங்கிவிட்டு மேடையில் பேசிய சிலர், "நான்கு நாளைக்கு முன்னாடி தான் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கும் தகவலே தெரியும்" என்று சொன்னார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், விருது பட்டியல் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.

அதோடு 'விழாவுக்கு வருகிறவர்களுக்கு விருது'-இதுதான் பாலிசி. அஜீத்துக்கும், ரஜினிக்கும் கடைசி வரை விருதே கிடைக்காது. காரணம் இருவரும் இது போன்ற விழாக்களுக்குச் செல்வதில்லை. இதிலிருக்கும் வியாபாரத் தந்திரங்களும், முறைகேடுகளும் அவர்களுக்குத் தெரியும்.

அடுத்த நிகழ்வு...

ரஜினிக்கு அடுத்து அவர் இடத்தை யார் பிடிப்பார் என்று அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பொதுத் தேர்தல் போன்று லட்சக்கணக்கில் வாக்கு கணக்குகளைச் சொல்லி இவர்தான் ரஜினி இடத்தை பிடிப்பவர் என்று ஒரு நடிகரை அடையாளம் காட்டினார்கள். விடுவார்களா எதிர் நடிகரின் ஆட்கள்? சமூக வலைத்தளங்களில் அந்த கருத்துக் கணிப்பைப் பற்றி கழுவிக் கழுவி ஊற்றினார்கள். அதன் பிறகு அந்த எதிர் நடிகர்தான் கடையேழு வள்ளல்களில் கடைசி வள்ளல் என்று சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

ஹீரோக்களுக்கு இருக்கும் விருது அரிப்புதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். தேசிய விருதுகளுக்கு நடுவர்களாகச் சென்று வந்தவர்களுக்குத் தெரியும், அங்கு நடக்கும் பாலிட்டிக்ஸ். விருது கமிட்டியில் மலையாளிகள் அதிகம் இருந்தால் அதிக மலையாள சினிமாக்களுக்கு விருது கிடைக்கும், பெங்காலிகள் இருந்தால் அவர்கள் படத்துக்கு கிடைக்கும். ஒருமுறை தமிழ்நாட்டுக்காரர்கள் அதிகமாக இருக்க 12 விருதுகள் வரை தமிழுக்குக் கிடைத்து.

தேசிய விருதே இந்த லட்சணத்தில் இருக்கும்போது வியாபார விருதுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. நல்ல படங்களைத் தரும்போது மக்கள் தருகிற கைதட்டல்தான் மிக உயரிய விருது என்பதை ஹீரோக்கள் உணரும்போது இந்த விருது களேபரங்கள் மறைந்து போகும்.

-மீரான்