அளவான நடிப்பு; அசத்தலான கிளாமர்!



“கிரிக்கெட் ஊழலை சிரியஸாக சொல்லாமல் முழு நீள காமெடியாக சொன்னால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் ‘ஆடாம ஜெயிச்சோமடா’” - என அழுத்தம் திருத்தமாக பேசுகிறார் இயக்குனர் பத்ரி. கரண்ட் மேட்டரில் கையை வைக்கும் போது நிறைய புள்ளிவிவரங்களை சொல்ல வேண்டியிருக்குமே?

 நீங்க நினைக்கிற மாதிரி இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை அலசுகிற படம் இல்லை. ஆனால் அந்த விளையாட்டில் எந்தளவுக்கு அரசியல், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதை ஆராய்ந்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். கிரிக்கெட் விளையாட்டில் எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்பதை வெயிட்டாக சொல்லாமல் லைட்டாக சொல்லியிருக்கிறேன்.

எப்படி சிம்ஹா, கருணாகரனிடம் வேலை வாங்கினீர்கள்?

இரண்டு பேருமே செம ஷார்ப். உண்மையில் அவர்களை நான் வேலை வாங்கினேன் என்று சொல்வதை விட அவர்கள்தான் என்னை வேலை வாங்கினார்கள் என்று சொல்லலாம். ஏன்னா, ஒரு காட்சியை நான் ஓ.கே. பண்ணினாலும் ‘சார் இன்னொரு டேக் வேண்டுமா’ என்று சளைக்காமல் கேட்பார்கள். இதுவரை சிம்ஹாவை முரடராகவே பார்த்திருக்கிறோம். ஆனால் இதுல புதிய சிம்ஹாவை பார்க்கலாம். அந்தளவுக்கு காமெடியில் பின்னியெடுத்திருக்கிறார்.

விஜயலட்சுமிக்கு ஜோடி யார்?

கருணாகரன். அளவான நடிப்பு, அசத்தலான கிளாமர் என இரண்டிலும் கலக்கி யிருக்கிறார். தமிழ் தெரிந்த நடிகைகள் தமிழ் பேசி நடிப்பது தனி அழகு.
இசை?

ஒரு கர்நாடக கச்சேரியில்தான் ஷான் ரோல்டனை சந்தித்தேன். அபாரமான இசை ஞானம் உள்ளவர். இப்ப நிறைய இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசை அமைக்கும் டியூன் கல்யாணியா, காம்போதியான்னு வகை பிரிக்கக் கூட தெரியவில்லை. அந்த விஷயத்தில் ஷான் ஜீனியஸ். இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் சீன் பை சீன் சிரிப்பது நிச்சயம்!