கெஞ்சுகிறார் ஹன்சிகா



சிம்புவுடனான காதலை வலுக்கட்டாயமாக முறித்துக்கொண்டு,  அம்மா டாக்டர் மோனாவின் வயிற்றில் பால் வார்த்த ஹன்சிகா, இனி தன் வாழ்க்கையில் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ‘கட் அண்ட் ரைட்’டாக சொல்கிறார். ‘என் வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்துவிட்டன. அதை மறக்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் மீண்டும் என் காதலைப் பற்றிக் கேட்டு மனதை நோகடிக்காதீர்கள். நான் ஒரு கருத்து சொல்லி, பிறகு எதிர்த்தரப்பில் வேறொரு கருத்து சொல்லி, அதற்கு நான் ஒரு மாற்றுக் கருத்து சொல்லி, இந்த விஷயம் நீண்டுகொண்டே இருக்க விரும்பவில்லை. தயவுசெய்து என்னை அமைதியாக இருக்க விடுங்கள்’ என்று, சமீபகாலமாக தன்னைச் சந்திக்கும் மீடியாக்காரர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார் ஹன்ஸ்.

‘அமர காவியம்’ அறிமுக நாயகி மியா ஜார்ஜின் இயற்பெயர், ஜிமி ஜார்ஜ். ‘என் பெயரை உச்சரிக்கிறவங்க ‘ஜிமி’, ‘ஜினி’ன்னு குழம்புவாங்க. மலையாளத்தில் அறிமுகமான ‘சேட்டாயீஸ்’ படத்தில், என் கேரக்டரின் பெயர் மியா. அதுக்குப் பிறகு ‘மியா’ன்னு மாறிட்டேன்’ என்ற மியா, கோட்டயம் கல்லூரி யில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறார்.

ஷூட்டிங்கின்போது லீவு போடுகிறார். 2011ல் கேரளாவில் நடந்த போட்டியில் பங்கேற்ற அவருக்கு, ‘மிஸ் கேரளா பிட்னஸ்’ என்ற பட்டம் கிடைத்தது. பரதம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், ஓட்டந்துள்ளல், மார்கம் களி என எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துள்ளார். சலீம் மாஸ்டரிடம் வாய்ப்பாட்டு கற்றுள்ளார். ‘நல்ல வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் பாடுவேன்’ என்கிறார்.

- தேவராஜ்