இந்திய சினிமாவின் தாய்வீடு



ஏவி.எம் 70

14.10.2014 - ஏவி.எம் நிறுவனத்துக்கு மறக்க முடியாத நாள். அந்த நாளில்தான் ஏவி.எம் நிறுவனத்தை ஏவி.மெய்யப்பன் 1945ல் சென்னையில் ஆரம்பித்தார். முதன் முதலாக அந்த நிறுவனம் தயாரித்த படம் ‘நாம் இருவர்’. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளில் இதுவரை 175 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது.

சிவாஜியில் ஆரம்பித்து கமல்ஹாசன் உட்பட ஏராளமான நடிகர்களுக்கு ஏவி.எம் நிறுவனம்தான் தாய்வீடு. அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.ஆர்.மகாலிங்கம், வைஜெயந்திமாலா, நாகேஸ்வரராவ், வீ.கே.ராமசாமி, விஜயகுமாரி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, பண்டரிபாய் ஆகியோர் ஏவி.எம்மின் பெருமைக்குரிய அறிமுகங்கள்.

இயக்குனர்களில் ப.நீலகண்டன், கே.சங்கர், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன், இராம.நாராயணன் ஆகியோரும் ஏவி.எம்மின் கம்பீரமான அறிமுகங்கள்.மத்திய அரசின் தங்கப்பதக்கம், தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது உட்பட எராளமான விருதுகளும், பதக்கங்களும் ஏவி.எம் தயாரித்த படங்களுக்கு கிடைத்தாலும், 2006ம் ஆண்டு இந்திய அரசு ஏவி.எம் நினைவாக தபால்தலை வெளியிட்டு ஒட்டு மொத்த இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்த்தது. ‘நாம் இருவர்’, ‘வாழ்க்கை’, ‘சபாபதி’, ‘ஸ்ரீவள்ளி’, ‘வேதாள உலகம்’ போன்ற படங்களை ஏவி.மெய்யப்பன் இயக்கினார்.

1957ல் வெளியான ‘ஹம்பஞ்சி ஏக் டால்கே’ இந்திப் படம் சிறந்த குழந்தைகளுக்கான படமாக பிரதமர் விருதான தங்க மெடல் பெற்றது. அந்த டீமைச் சேர்ந்த ஏவி.எம் உட்பட்ட படக் குழுவுக்கு ஜவகர்லால் நேரு விருந்து கொடுத்து கௌரவித்தார். இந்தியில் ராஜ்கபூர், சுனில்தத், அசோக்குமார், நர்கீஸ், மீனா குமாரி, தர்மேந்திரா, ஜிதேந்திரா, தெலுங்கில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற ஜாம்பவான்கள் நடித்த படங்களையும்  ஏவி.எம் தயாரித்திருக்கிறது.

முதல் அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா ‘ஓர் இரவு’ படத்திலும், கலைஞர் கருணாநிதி ‘பராசக்தி’ படத்திலும், எம்.ஜி.ஆர் ‘அன்பே வா’ படத்திலும், ஜெயலலிதா ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எங்க மாமா’, ‘அனாதை ஆனந்தன்’ படங்களிலும்,

எம்.டி.ராமராவ் ‘பூகைலாஸ்’, ‘ராமு’, ‘சிட்டி செல்லலு’, ‘சங்கம்’, ‘பக்தி மகிமா’ போன்ற படங்களிலும் பணியாற்றியதைத் தொடர்ந்து ஐந்து முதல்வர்கள் கலைச்சேவை செய்த நிறுவனம் என்ற பெருமையும் ஏவி.எம்முக்கு உண்டு. இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கும் ஏவி.எம் நிறுவனம் 70வது ஆண்டிலும் நான்காவது தலைமுறையுடன் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறது.

- சுரேஷ் ராஜா