எல்லாம் சினிமா மயம்!



விஜயகுமார்- மஞ்சுளா மகள் வனிதா கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’. உதவி இயக்குனர் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பாக பட வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

“காமெடிதான் படத்தின் அடிநாதம். லோக்கல் ஏரியாவில் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் ராபர்ட் வாழ்க்கையில் சுனாமி மாதிரி ஒரு பிரச்னை வருகிறது. அந்த பிரச்னை ராபர்ட்டை எப்படி துரத்துகிறது, அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் கதை. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து சினிமாவைப் பிரிக்க முடியாது.

 அதுபோல ராபர்ட்டையும் அவருடைய நண்பர்களையும்  சினிமா எப்படி ஆக்கிரமித்துள்ளது என்பதை சொல்வதற்காகத்தான் படத்துக்கு ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்று டைட்டில் வைத்தோம். வனிதா பிலிம் புரொடக்ஷன் என்னுடைய அப்பா, அம்மா ஆரம்பித்த கம்பெனி. அந்த கம்பெனி மூலம் சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’, ரஜினி நடித்த ‘கை கொடுக்கும் கை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளோம். அதே கம்பெனி பேரில்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளேன். ராபர்ட் ‘பட்’ என்ற லோக்கல் இளைஞராக வர்றார்.

ஹீரோயின் சந்திரிகா.  ஹீரோவுக்கு இணையான ரோலில் ராம்கி வர்றார். பாதிரியார் கேரக்டரில் வரும் பவர் ஸ்டார், மினிஸ்டராக வரும் பாண்டு, கிளைமாக்ஸில் ஹீரோ போல் கலக்கியிருக்கும் பிரேம்ஜி, போலீஸாக வரும் ஐஸ்வர்யா என  அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில், சந்திரபாபு பாடிய ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’  பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறோம்.  இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது கம்மி பட்ஜெட்டில் 5டி கேமராவில் ஆரம்பிக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போது ரெட் எபிக், சீனியர் நடிகர்கள், டெக்னீஷியன்கள் என பெரிய படமாக வந்துள்ளது” என்கிறார் வனிதா.

-எஸ்