வில்லி விஜயலட்சுமி!



‘விஜயலட்சுமி காதல் வலையில் சிக்கி விட்டார்’ என்றும், ‘விரைவில் அவருக்கு திருமணம் நடக்கப் போகிறது’ என்றும் யாரோ வதந்தி வெடியைக் கொளுத்திப் போட, டென்ஷனாகி விட்டாராம் இயக்குனர் அகத்தியனின் அருமை மகள். ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘வெண்நிலா வீடு’ படங்கள் ரிலீசாகியுள்ள நிலையில்,

 இதுபோன்ற கட்டுக்கதைகளை யார் பரப்புவது என்ற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அவர், ‘தமிழ்நாட்டில் உள்ள என்னைப் போன்ற ஹீரோயினை யாரும் வளர்த்துவிட நினைப்பதில்லை. எதையாவது வம்புதும்பு எழுதி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, வளர்ச்சியைக் கெடுக்கத்தான் பார்க்கிறார்கள்’ என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்புகிறாராம் வி.லட்சுமி. அவரது கைவசம் ‘ரெண்டாவது படம்’ இருக்கிறது. இதில் வில்லியாக நடித்துள்ளாராம்.

சினிமா படங்களின் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றி, பிறகு அந்த அனுபவத்தை வைத்து இயக்குனராக மாறியவர்கள் ‘பில்லா’ ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ‘ரம்மி’ பாலகிருஷ்ணன். இப்போது ‘பள்ளிக்கூடம் போகாமலே...’ மூலம் ஜெயசீலன், ‘முருகாற்றுப்படை’ மூலம் கே.முருகானந்தம் இயக்குனர்களாக அறிமுகமாக உள்ளனர். இதில் ‘முருகாற்றுப்படை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் மும்பை இறக்குமதி நவிகா யார் தெரியுமா?

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘சீனிகம்’, ‘பா’ ஆகிய படங் களைத் தொடர்ந்து, இப்போது அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன், பாலிவுட் ரேகா நடிக்கும் ‘ஷமிதாப்’ படத்தை இயக்கி வரும் பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இந்தியில் இயக்கி, பிறகு தமிழில் ‘டப்’ செய்யப்பட்ட ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில், ஸ்ரீதேவியின் மகளாக நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கிறதா? அவர்தான் இந்த நவிகா.