திலகர்



முதுகிலும், இடுப்பிலும, கையிலும் அரிவாளைத் தூக்கிக் கொண்டு திரியும் ஒரு சமூகத்தைப் படிக்க வைத்து நல்ல வழிக்குத் திருப்ப நினைக்கிறார் கிஷோர். அதனை தன் தம்பி துருவாவை படிக்க வைப்பதன் மூலம் தன் வீட்டிலிருந்தே தொடங்குகிறார். தன் தொழில் எதிரியான 'பூ'ராமு மூலம் அவருக்கு தொடர்ந்து டார்ச்சர்.

அவர் செய்யும் வில்லத்தனத்தையெல்லாம் சமாளிக்கிறார் கிஷோர். 'தியேட்டர் தீண்டாமை' விஷயத்தில் கிஷோர் கொஞ்சம் வேகமான முடிவுகள் எடுக்க... 'பூ'ராமு மகன்களால் கிஷோர் கொல்லப்படுகிறார்.
எந்த நோக்கத்துக்காக தம்பியைப் படிக்க வைத்தாரோ அதுக்கு வருகிறது ஆபத்து. பூவாக இருந்த துருவாவை வீட்டுப் பெண்கள் பொட்டைப் பையன், வீரம் இல்லாதவன் என்று இழித்துப் பேச, அரிவாளைக் கையில் எடுக்கிறார் துருவா. அண்ணனைக் கொன்றவர் களைப் போட்டுத் தள்ளுகிறார். அவர் வன்முறைப் பாதைக்குத் திரும்பினாலும் தன் அண்ணன் மகனைப் படிக்க வைத்து சமூகத்தை மாற்ற நினைக்கிறார். துருவா நினைத்தது நடந்ததா என்பது மீதி கதை.

ரத்தமும் சதையுமான கதையின் இடையில் மிருதுளாவுடனான காதல், கவிதை. துருவா ஆயுதத்தைத் தூக்கியவுடன் "நீ உயிருடன் வருவாயா மாட்டாயா என்று உனக்காக காத்திருக்க முடியாது" என்று மிருதுளா கழன்று கொள்வது யதார்த்தம். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும், கண்ணனின் இசையும் திலகரின் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன. மண்வாசனைக் கதையை யதார்த்தமாகக் கையாண்ட விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் பெருமாள் பிள்ளை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் புகழ்ப் பாடல் வலிந்து திணிக்கப்படாமல் இருந்திருந்தால் நல்ல பதிவாக இருந்திருக்கும்.