ஈழத்து இளைஞனின் இதயக்கனவு!



‘இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இத்திரைப்படம்’ என்ற அறிவிப்போடு வெளிவர இருக்கிறது ‘கூட்டாளி’ திரைப்படம். தமிழ் ஈழம் மலர்ந்தால் அந்த மண்ணும் மனிதர்களும் எப்படியிருப்பார்கள் என்பதுதான் கதை.

இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார் சி.நிரோஜன். இவர் மணிவண்ணன், சீனுராமசாமி, சுப்ரமணியசிவா, அரவிந்தன், ‘சிவப்புமழை’ வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

யுத்த பூமியில் நடந்த ரத்தகோரங்களை மையப்படுத்தி இயக்கிய ‘மண்ணும் சிவந்தது’ மற்றும் ‘ஏன்’ ஆகிய குறும்படங்களுக்காக, காட்சித் தொடர்பியல் படிப்பின்போது பல விருதுகளை வென்றெடுத்தவர் இவர்.குறிஞ்சிப்பாடியில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்த(?) முகாம் குறித்த ‘தமிழ்ச்சாதி’, தஞ்சையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் குறித்த ஆவணப்படங்கள் உணர்வாளர்களால் உச்சிமுகர்ந்து பாராட்டப்பட்டன.

ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் ஏற்பாட்டில் இவர் இயக்கிய கோ.ஆப்டெக்ஸ் பற்றிய ‘வேட்டிதினம்’ மற்றும் நெசவாளர்களின் வாழ்வியல் குறித்த ‘நெசவுக்குப்பின்னால்’ ஆவணப்படங்கள், பார்த்தவர்களால் பாராட்டுப்பெற்றன. இப்போது நிரோஜனின் கனவுப்படைப்பாக திரைக்களம் காண தயாராக இருக்கிறது ‘கூட்டாளி’ திரைப்படம். நித்யன் கார்த்திக் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம், வி.வி.பிரசன்னா, ஹரிபிரியதர்ஷினி குரல்களில் உருகவைக்கும் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ‘நீர் பறவை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட 50 படங்களில் பணியாற்றியிருக்கும் மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். எஸ்.சூரியகுமார் தயாரித்திருக்கும் ‘கூட்டாளி’ தமிழ்ப் பங்காளிகளைச் சந்திக்க விரைவில் வருகிறான்.

-பாரதி