இந்தியா பாகிஸ்தான்



தனக்கேற்ற கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெறுகிறவர் என்கிற பெயரை இந்த முறையும் காப்பாற்றியிருக்கிறார் விஜய் ஆண்டனி.  காமெடி மற்றும் நடனத்திலும் முன்னேறியிருக்கிறார்.

கேஸ் பிடிக்க அலையும் வக்கீல் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறார். நாயகி சுஷ்மா அசப்பில் மட்டுமல்ல, நடிப்பிலும் அனுஷ்காவைத் தொடுகிறார். விஜய் ஆண்டனி- சுஷ்மா இடையே நடக்கும் ஈகோ கலாட்டாக்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஒரே வீட்டில் வாடகைக்கு குடியிருந்து, போட்டிபோட்டு கேஸ் பிடிக்கப் போராடும் அலப்பறைகள் அமர்க்களம்.

பசுபதியும் எம்.எஸ்.பாஸ்கரும் காமெடிக்கபடி ஆடி சிரிக்கவைக்கிறார்கள். வில்லேஜ் எபிசோடைவிட சிட்டியில் காமெடிக்களேபரம் அதிகம்.ஜெகன், மனோபாலா, காளி வெங்கட், முனீஸ்ராஜா, டி.பி.கஜேந்திரன் , ஊர்வசி என ஒரு காமெடிப்பட்டாளமே களமிறங்கி, கதாநாயகனின் வெற்றிக்குக் கைகொடுத்திருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் சரத் லோஹித்ஸ்வா முரட்டு முகத்தில் அழகு நடிப்பைக் காட்டுகிறார்.ஓம் செய்திருக்கும் ஒளிப்பதிவு ஓகேவா என்று கேட்டால் ஆம் சொல்லலாம்.தீனா தேவராஜன் இசையில் ‘பலகோடி பெண்களிலே…’, ‘ ஒரு பொண்ன பாத்தேன் மாமா…’, ‘இந்தியா நான் பாகிஸ்தான் நீ…’, ‘வாடி குட்டி லேடி…’, ‘நான் உன்னை தினமும் நினைக்கிறேன்…’ என ஒவ்வொரு பாடலும் ஒரு சுவை.ஈகோ, காதல், வன்மம் கலந்த கதையை நகைச்சுவை கலந்து நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் ஆனந்.