கண்ணீர் சிந்துது கறுப்பு வெள்ளை!



கறுப்பு-வெள்ளைக் கருவியான கீ-போர்டில் வண்ண வண்ணமாக இசையை அள்ளித்தந்த விஜி மேனுவல், கறுப்புச்சின்னம் அணிந்து அஞ்சலி செலுத்தச் சொல்லிவிட்டு, காலமாகிவிட்டார். ‘ஒன் மேன் பேண்டு’ என்று புகழப்பட்ட ஹேண்டன் மேனுவலின் மகனாகப்பிறந்து, இயல்பாகவே இசையின்பால் ஈர்க்கப்பட்டவர் விஜி. ஜி.கே. வெங்கடேஷுக்கு இளையராஜா கிதார் வாசித்த காலத்தில், அவருடன் வாசித்தவர் விஜி. ‘அன்னக்கிளி’ தொடங்கி இளையராஜாவுடன் நாற்பது ஆண்டுகளாக 800 படங்களுக்குமேல் பிசிறில்லாத கீ-போர்ட் இசையைத் தந்திருக்கின்றன விஜியின் விரல்கள்.

நண்பரும் டிரம்ஸ் கலைஞருமான சிவமணியின் வியப்பை அறிந்து, விஜியின் கீ-போர்ட் வாசிப்பைப் பார்ப்பதற்காகவே, இளையராஜாவிடம் இசைக்கருவி வாசிப்பாளராகச் சேர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘‘விளம்பரப்பட இசைத்துறையை எனக்கு அறிமுகப்படுத்தி, இசையமைப்பாளராக உருவாவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் விஜி மேனுவல்தான்’’ என்று உருக்கத்தோடு உள்ளம் திறந்து சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.



‘ரெட்டைவால் குருவி’ படத்தில் ‘ராஜராஜ சோழன் நான்…’, ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ‘நின்னுக்கோரி வரணம்…’, ‘ஹேராம்’ படத்தில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’, ‘நெற்றிக்கண்’ணில் ‘ராமனின் மோகனம்…’, ‘ப்ரியா’வில் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்…’ மற்றும் ‘புன்னகை மன்னன்’ படத்து தீம் இசை ஆகியவற்றில் விஜியின் விரலில் கசிந்து கீ-போர்ட்டில் பரவிய நாதவெள்ளம், ரசிக நெஞ்சங்களை மூழ்கடிப்பது நிச்சயம்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நேரத்தில்கூட, இசைக்குறைவு ஏற்பட்டுவிடாமல் நேர்மையாக பணியாற்றியிருக்கிறார் விஜி. இறுதிக்காலத்தில் முழு வேகத்தோடு இசையமைக்க இயலாமல் போனாலும், டிரம்ஸ் சிவமணியின் பாடல்களுக்கு ‘கணிதன்’ படத்தில் கவனம் சிதறாமல் உழைத்திருக்கிறார். அவரை இழந்து கண்ணீர்விடும் கறுப்பு-வெள்ளைக் கட்டைகள், இனி வேறொருவர் விரல்களை ஏற்குமா?

-நெல்பா