கலைஞரின் அண்ணா!



‘வண்ணத்திரை’ 16-11-2015 இதழில் இடம்பெற்ற நெல்லை பாரதி எழுதிவரும் ‘பாட்டுச்சாலை’ தொடரில் கவிஞர் கா.மு.ஷெரீப் குறித்த கட்டுரையை வாசித்த பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் பழைய மலரும் நினைவுகளில் மூழ்கி நம்மை தொடர்பு கொண்டார். நிறுத்தி நிதானமாக அந்நாளைய நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டுவந்தார். தமிழ் சினிமாவின் போக்கையே மடைமாற்றிய அந்த வரலாற்றுச் சம்பவம் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது.

“சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் அடுத்த நாள் நாங்கள் எடுக்க வேண்டிய காட்சிகளைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார். முதன்மை உதவி இயக்குனரான சுந்தரேசனும், அடுத்த நிலை உதவி இயக்குனரான நானும் அவரிடம் எடுக்கப்பட வேண்டிய காட்சியின் வசனங்களைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது மாடர்ன் தியேட்டர்சுக்காக பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த கவிஞர் கா.மு.ஷெரீப் அறைக்குள் நுழைந்தார். அதிபர் சுந்தரத்தைப் பார்த்துச் சொன்னார். “ஐயா, நீங்கள் அந்த வெள்ளைக்கார டைரக்டரை (எல்லீஸ் ஆர்.டங்கன்) வைத்து எடுக்கப்போகும் படத்துக்கு கதை தேடிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மாயவரத்தில் ரத்னம் என்பவர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் புதிதாக போட்டிருக்கும் நாடகத்துக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பாம். அந்த நாடகத்தை எழுதின திருவாரூர் புள்ளையாண்டானை எனக்கு நல்லா நெருக்கமாவே தெரியும். நீங்க ஆளனுப்பி நாடகம் பாருங்க. பிடிச்சிருந்தா அதையே படமா எடுக்கலாம்” என்றார்.



உடனே டி.ஆர்.சுந்தரம் எல்லீஸ் ஆர்.டங்கனை அந்த நாடகம் பார்க்க அழைத்துப் போக்ச்சொன்னார். மொழிபெயர்த்துச் சொல்ல நானும் உடன் போனேன். கதை, கமர்ஷியலாக வெற்றி பெறுமா என்று கணிப்பதற்காக சுந்தரேசனும் வந்தார். மாயவரத்தில் நாடகத்தைப் பார்த்ததுமே டங்கனுக்கு பிடித்துப் போனது. அதிபர் சுந்தரத்திடம் ‘ஓக்கே’ சொன்னோம். கவிஞர் ஷெரீப் மூலமாக அந்த நாடகத்தை எழுதியவரை டி.ஆர்.சுந்தரம் வரவழைத்துப் பேசினார்.

கலைஞர், சேலம் வந்து மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த பின்னணி இதுதான். அந்த நாடகம்தான் ‘மந்திரிகுமாரி’ திரைப்படமானது. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியது. கவிஞர் கா.மு.ஷெரீப் செய்த இந்த உதவியை கலைஞர் என்றுமே மறந்ததில்லை. பேரறிஞர் அண்ணாவைத் தவிர வேறு யாரையும் ‘அண்ணா’ என்று விளிக்காத கலைஞர், வேறொருவரை ‘அண்ணன்’ என்று அழைக்கிறார் என்றால் அந்தப்பெருமை கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களுக்கு மட்டும்தான்.”

- யுவகிருஷ்ணா