ஒரு நாள் இரவில்



ஒரு நாள் இரவில் விமர்சனம்

இயக்குனராகி இருக்கும் எடிட்டர் ஆண்டனி தன்னுடைய முதல் படத்திலேயே செம கெத்து காட்டியிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடியாத அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது ‘ஒரு நாள் இரவில்’. முதல்ல கையை கொடுங்க சார். வலிக்கிற மட்டும் குலுக்கணும்.

மலையாளத்தில் ஹிட்டடித்த ‘ஷட்டர்’தான் தமிழில் ‘ஒரு நாள் இரவில்’. ஒரே இரவில் என்னென்ன நடக்கிறது என்கிற கதை தமிழுக்கு புதுசல்ல. ஆனால், இவர்கள் சொல்லும் கதை லேட்டா வந்தாலும் பக்கா லேட்டஸ்ட். சிங்கப்பூர் ரிட்டர்ன் சத்யராஜ், வசதி வாய்ப்புக்கு குறைவில்லாத கவுரவமான குடும்பஸ்தர். கல்லூரியில் படிக்கும் மகள் சக மாணவனுடன் சகஜமாகப் பழகுவதை, காதல் என்கிற அபத்தமான முடிவுக்கு வருகிறார். மகளை கல்லூரியில் இருந்து நிறுத்துவதோடு, உடனே திருமணத்துக்கும் ஏற்பாடு செய்கிறார். வீடே ரணகளமாகிறது. மூட் அவுட்டாகும் சத்யராஜ், நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடிக்கிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் எல்லோரும் போய்விட, மீண்டும் சரக்கு வாங்க ஆட்டோக்காரருடன் கடைக்கு பயணமாகிறார்.



வழியில் பாலியல் தொழிலாளி ஒருவரைப் பார்க்கும் சத்யராஜ் சபலப்பட்டு, அவரை பிக்கப் செய்கிறார். தன் வீட்டு வாசலில் இருக்கும் கடையில் அவசரத்துக்கு ஒதுங்குகிறார். பாலியல் சேவகருக்கு டிஃபன் வாங்குவதற்காக வெளியே செல்லும் ஆட்டோ இளைஞன், ஒரு சேஃப்டிக்காக கடையின் ஷட்டரைப் பூட்டிவிட்டு செல்கிறார். ஆட்டோக்காரர் சம்பந்தமேயில்லாமல் போலீஸில் சிக்குகிறார். விடிவதற்குள் ஷட்டருக்குள் இருக்கும் இருவரும் வெளியே வரவேண்டும். அவர்கள் கதி என்ன என்பதுதான் பரபர க்ளைமாக்ஸ்.

இப்படத்தின் பலம் கதை என்றால், பலத்துக்கு பலம் சேர்ப்பது சத்யராஜ். தன் இயல்பான நடிப்பில் அசரடிக்கிறார். உள்ளே ஜன்னல் வழியாக தன் வீட்டாரின் தவிப்பைக் கண்டு துடிக்கும்போதும் சரி, வெளியே ஷட்டர் தட்டப்படும் வேளையில் அதிரும் போதும் சரி, அவரது பதற்றம் அப்படியே ரசிகர்களுக்கும் கடத்தப்படுகிறது. வெல்டன் சத்யராஜ்!

பாலியல் தொழிலாளியாக வரும் அனுமோல்  அப்படியொன்றும் அழகு இல்லை. ஆனால் கண்களாலேயே சுண்டி இழுக்கிறார். அம்மாவாக  வரும் கல்யாணி நட்ராஜ், மகளாக வரும் தீக்‌ஷித், ஆட்டோக்கார இளைஞனாக வரும்  வருண்,  இயக்குனராக வரும் யூகி சேது என அனைவரும் கவனிக்க வைக்கிறார்கள்.   நறுக்கென்று வசனம் எழுதியதற்காக யூகி சேதுவுக்கு சிறப்பு பாராட்டு. நவீன் அய்யரின் இசையில் பாடல்களில் ஈர்ப்பு இல்லை. பின்னணி இசை ஓ.கே. எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. நடிப்பிலும்  பாஸாகிறார். லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் இயக்குனர் ஆண்டனி விறுவிறுப்பாக கதை சொல்லிய ஒரே காரணத்துக்காகவே ஏற்கனவே சொன்னபடி அவருக்கு கை வலிக்கும் வரை குலுக்கிக்கொண்டே இருக்கலாம்.