குகன்



ஈவ்டீசிங்கில் ஈடுபடும் போலீஸின் மகன்!

கும்பகோணத்தில் வசிக்கும் ஹீரோ அரவிந்தின் அம்மா ஒரு போலீஸ் அதிகாரி. அப்பா ஓவியர். பெற்றோர் இருவரும் தத்தம் வேலையில் பிஸியாக இருப்பதால் தறுதலையாக வளர்கிறார் அரவிந்த். ஒரு ஈவ்டீஸிங் கேஸில் அவர் மாட்ட, சொந்த அம்மாவே போலீஸ் என்பதால் ஹீரோவை புரட்டியெடுத்து விடுகிறார்.

இதனால் கோபமடைந்த அரவிந்த் வீட்டை விட்டு வெளியேறி நரேனிடம் வேலைக்கு சேர்கிறார். அங்கே நரேனின் மகள் சுஷ்மா மீது காதல் கொள்கிறார். மகனைத் தேடி வரும் அம்மா, திரும்ப வீட்டுக்கு அழைக்கிறார். அரவிந்த் அம்மாவுடன் சேர்ந்தாரா, அவரது காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கதையின் ஒன்லைன் அரதப்பழசு என்பதால் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ஒப்பேற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராசி அழகப்பன். ஆனால், மிக சுமாரான இசை மற்றும் அனுபவமற்ற ஹீரோ, ஹீரோயினை வைத்துக்கொண்டு பெரும்பாடு பட்டிருக்கிறார். சிங்கம்புலியின் காமெடியே வர வர ரசிகர்களுக்கு பெரும் ரோதனையாகப் போகிறது. சுப்பு பஞ்சு, நரேன் போன்ற நடிகர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்.