ஓவியத்தோடு பழகலாம்!



சென்னை விஜிபி வளாகத்தில் இருக்கும் ஸ்நோ கிங்டத்தில் 2000 சதுர அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம். இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, பார்வையாளரின் பங்களிப்பையும் கேட்கும் வண்ணம் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியத்துடன் இணைந்து ஒரு செயலைச் செய்து, செல்ஃபீ படம் எடுத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்த அருங்காட்சியக ஓவியங்களின் சிறப்பு.


‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்சியகத்தில் உள்ள ஓவியங்களை சிறப்பாக வரைந்திருக்கிறார் ஏ.பி.தர். இதுவரை இவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். கமல்ஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை இவரது ஓவியங்கள் அலங்கரிக்கின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்வாக இருக்கின்றன.

சினிமாக்கலைஞர்களுக்கு மிகவும் நெருக்கமான ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுதி ‘மய்யம்’ படத்தை தயாரித்தவர். படத்தின் ஆடியோவை வெளியிட்டு வாழ்த்தியதைப்போலவே, ‘க்ளிக் ஆர்ட்’ லோகோவையும் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார் இவரது நண்பர் கமல்ஹாசன். காட்சியக துவக்கவிழாவுக்கு வந்திருந்த பார்த்திபன் உள்ளிட்ட அத்தனை பேரும் ஓவியங்களுடன் இணைந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டது, ஓவிய வடிவமைப்பின் நுட்பத்தை எடுத்துக் காட்டியது.



விழாவுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள், குத்துவிளக்கு ஏற்றுவதாக ஏற்பாடு. பெரிய குத்துவிளக்கு ஓவியத்தில், தீபம் எரிவதுபோல தூரிகையால் மஞ்சள் வண்ணம் தீட்டவைத்தது ஸ்ரீதரின் ஓவியத்திறனையும், புதுமைச் சிந்தனையையும் எடுத்துக்காட்டியது. அந்த ஓவியம் அப்படி, இந்த ஓவியம் இப்படி என்று சொல்லிப் புரியவைப்பதில் சுவை குறைவு. நேரில் சென்று பார்த்தால், வியப்பு சூழ்ந்து உங்களை வேற்றுலகிற்கு அழைத்துச் செல்லும்.

- நெல்பா