இசையே சுவாசம் இமானுக்கு!



நெல்லைபாரதி

இம்மானுவேல் வசந்த் தினகரன் என்கிற இமான், டேவிட் கிருபாகர தாஸ் - மஞ்சுளா தம்பதியின் மகனாகப் பிறந்தார். பெற்றோருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிறந்த தவமகன் இவர். அப்பா பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார். தேவாலயத்துக்கு தவறாமல் செல்லும் பழக்கம் இருந்ததால், அங்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகள் இமானைக் கவர்ந்தன. மகனின் ஆர்வத்தை அறிந்த பெற்றோர், இசைப்பயிற்சிக்கான ஏற்பாட்டைச் செய்தார்கள்.



நான்கரை வயதிலேயே பியானோவை பிரமாதமாக வாசித்தார் இவர். அப்துல் சத்தார், சுரேஷ், மகாலட்சுமி, பிரேம்குமார் சத்யா, ராஜீவன் டேவிட், சேகர் ஆகியோரிடம் முறையாக சங்கீதங்களைக் கற்றுத் தேர்ந்தார் இமான். சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் படிக்கும்போதே ஆதித்யன் மற்றும் ‘நம்மவர்’ மகேஷ் ஆகியோருக்கு கீபோர்டு வாசித்து வந்தார்.

பள்ளியில் வகுப்பு முடியும் நேரத்தில் ஆட்டோவில் காத்திருக்கும் அம்மாவுடன் இசைப்பணிக்கு புறப்பட்டு விடுவார் இமான். மகனுக்காக கீபோர்டை சுமந்து செல்வார் அம்மா. ஆட்டோ ஓட்டுநர் பெயர் விநாயகம் என்பதையும், ஆட்டோவின் எண் டி .எம்.எப் 3733 என்பதையும் நினைவில் வைத்திருக்கிறார் இமான்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே அருணா ரெக்கார்ட்ஸ் இவரது இசையமைப்பில் ஒரு ஆல்பத்தை வெளியிட்டது. அது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மகத்தான வரவேற்பைப் பெற்றது. 11ஆம் வகுப்பு படிக்கும்போது மேக்னா சவுண்ட்ஸ் நிறுவனம் இவரது இசையில், ‘ஷம்மா’ என்ற ஆல்பத்தை வெளியிட்டது. அந்த சிடியை முன்னணி படத்தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். பலன் கிடைத்தது. குட்டி பத்மினி அழைப்பு விடுத்தார்.

தங்களது சொந்தத் தயாரிப்பில், ‘காதலே சுவாசம்’ படத்துக்கு இசையமைப்பாளராக இமானை ஒப்பந்தம் செய்தார் குட்டி பத்மினி. முதல் சந்திப்பிலேயே பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. அவரது கணவர் பிரபு நேபால், தென்னாப்பிரிக்க இசைக்கருவிகளை இவருக்கு வழங்கினார். ‘சொக்குதே சொக்குதே...’ என்ற பாடலை சோனு நிகாம்- சித்ரா பாட, ஒலிப்பதிவு செய்தார் இமான். அந்தப்படம் வெளிவரவில்லை. இவரது இசையின் மீது நம்பிக்கை வைத்திருந்த குட்டி பத்மினி, தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைக்க வாய்ப்பு தந்தார்.

அந்த நேரத்தில் அறிமுகமாகியிருந்த ‘ரோலண்ட்’ கீபோர்டை வாங்க விரும்பினார் இமான். அதன் விலை ஒரு லட்ச ரூபாய். பொருளாதார நிலை சரியில்லாதபோதும் வீட்டை அடமானம் வைத்து மகன் விரும்பிய கீபோர்டை வாங்கிக் கொடுத்தார் அப்பா. ஜேடி-ஜெர்ரி பணியாற்றிய பல படங்களுக்கு இசையமைத்தார் இமான்.

குட்டிபத்மினியின் ‘கிருஷ்ண தாசி’ இவரது இசையமைப்பில் வந்த முதல் தொலைக்காட்சித் தொடர். அதில் ‘சிகரம் பார்த்தாய், சிறகுகள் எங்கே....’ பாடலுக்கு இசையமைத்து, நித்ய மகாதேவனுடன் இணைந்து பாடினார். தொடர் ஒளிபரப்பானபோது, டைட்டிலில் ‘இசை: இமான்’ என்று வந்தபோது ஆனந்தக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

‘கிருஷ்ண தாசி’ தொடரின் இசை வெற்றி, இவருக்கு மேலும் பல வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது. ‘கோலங்கள்’, ‘உறவுகள் ‘, ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட 85 தொடர்களுக்கு டைட்டில் பாடலுக்கு இசையமைத்தார் இமான். ஏழுக்கும்  மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார்.



‘காதலே சுவாசம்’ படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் ஜீ.வி ‘தமிழன்’ படத்தில் இவரை இசையமைப்பாளர் ஆக்கினார் . அந்தப் படத்தில் விஜய்- பிரியங்கா சோப்ரா பாடிய ‘உள்ளத்தைக் கிள்ளாதே...’, இவரும் அனுராதா ஸ்ரீராமும் பாடிய ‘மாட்டு மாட்டு...’ பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. ‘கிரி’ படத்தில் இவரும் அனுராதா ஸ்ரீராமும் பாடிய ‘டுபுக்கு டுபுக்கு...’, தேவன் - அனுராதா ஸ்ரீராம் பாடிய ‘டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா...’ பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில், ‘தெரியாம பாத்துப்புட்டேன்...’, ‘மதுர ஜில்லா...’ மற்றும் ‘என்னம்மா கண்ணு...’ பாடல்கள் விலாசம் பெற்றன.

‘லீ’ படத்தில் ஏக்நாத் எழுதிய ‘தண்டோரா கொண்டக்காரி...’, ‘மாசிலாமணி’ படத்தில் ‘டோரா டோரா...’, ‘ஓடி ஓடி விளையாட...’, ‘ஓ திவ்யா திவ்யா...’, ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் ‘கடவுளே கடவுளே...’, ‘மைனா’ படத்தில் ஏக்நாத் எழுதிய ‘நீயும் நானும்...’, யுகபாரதியின் ‘கிச்சு கிச்சு தாம்பாளம்...’, ‘கும்கி’ படத்தில் இவர் பாடிய ‘ஒண்ணும் புரியல...’, ஹரிசரண் பாடிய ‘அய்யய்யோ ஆனந்தமே...’, கே.ஜி.ரஞ்சித்- ஸ்ரேயா கோஷல் பாடிய ‘சொல்லிட்டாளே அவ காதல...’, மகிழினி மணிமாறன் பாடிய ‘சொய்  சொய்...’, அல்போன்ஸ் ஜோசப் பாடிய ‘நீ எப்போ புள்ள சொல்லப்போற...’ பாடல்கள் இமானுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தன.

‘தேசிங்குராஜா’ படத்தில் ‘நெலாவட்டம் நெத்தியிலே...’ பாடல் ரசிக்கப்பட்டது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இமானுக்கு உச்சகட்ட வரவேற்பைக்  கொடுத்தது. யுகபாரதி எழுதி, ஹரிஹரசுதன் பாடிய ‘ஊதா கலரு ரிப்பன்..’ சிட்டி-பட்டிஎல்லாம் சிறப்புப் பெற்றது. ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’, ‘பாக்காதே பாக்காதே...’, சிவகார்த்திகேயன் குரலில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்...’ பாடல்களும் ரசிகர்களால் பாராட்டப்பட்டன.

‘பாண்டிய நாடு’ படத்தில் ‘ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை...’ , ‘ஏலே ஏலே மருது...’, ‘ரம்மி’யில் ‘கூட மேல கூட வச்சு...’, ‘ஜில்லா’ வில் விஜய்- ஸ்ரேயா கோஷல் பாடிய ‘கண்டாங்கி...’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ வில் ஏக்நாத் வரிகளில் லட்சுமி மேனன்- சத்யன் பாடிய ‘குக்குறு குக்குறு ...’, பாடல்களும் இமானுக்கு புகழ் சேர்த்தன.

விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ படத்தில் இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து மூவரும் பாடல்  எழுதியது சினிமா வரலாற்றுக்கான பதிவு. ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்...’, ‘ஒரு ரோசா...’, ‘சங்கி மங்கி...’ பாடல்கள் கவனம் பெற்றன. ‘கயல்’ படத்தில் ‘என் ஆள பாக்கப்போறேன்...’ ‘டிய்யாலோ டிய்யாலோ...’, ‘எங்கே புள்ள இருக்கே...’ ‘உன்ன இப்போ பாக்கணும்..’ என யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் வலம் வந்தன.

‘வெள்ளக்கார துரை’ படத்தில் வைரமுத்துவின் ‘கூத காத்து...’, யுகபாரதியின் ‘காக்கா முட்ட...’, ‘ரோமியோ ஜூலியட்’டில் ‘டண்டணக்கா...’, ‘அடியே இவளே...’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ‘லக்கா மாட்டிக்கிச்சி...’, ‘நான் ரொம்ப பிசி...’, விஷால் நடித்த ‘பாயும் புலி’ படத்தில் வைரமுத்து வரிகளில் ‘யார் இந்த முயல் குட்டி...’, ‘சிலுக்கு மரமே...’ பாடல்கள் இவரது இசையில் வசீகரித்தன. 

‘ரஜினிமுருகன்’ படத்தில் யுகபாரதி எழுதிய அனைத்துப் பாடல்களும் ஆரவாரமான வெற்றியைப் பெற்றன. சிவகார்த்திகேயன் பாடிய ‘முருகன் ரஜினி முருகன்...’, மற்றும்  ‘உம்மேல ஒரு கண்ணு...’, ‘ஆவி பறக்கும் டீக்கட...’, ‘என்னம்மா இப்பிடி  பண்றீங்களேம்மா...’ பாடல்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

விக்ரம் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்துக்கு பாடல்களுக்கான இசையை மட்டும் அமைத்திருந்தார் இமான். ‘ஆனாலும் இந்த மயக்கம்...’ வசீகரித்தது. ‘மிருதன்’ படத்தில் ‘முன்னாள் காதலி...’, ‘போக்கிரி ராஜா’வில் ‘அத்துவுட்டா...’, ‘பப்ளி பப்ளி...’ பாடல்களுடன் ‘தொடரி’, ‘வாகா’, ‘வீர சிவாஜி’ என இமானின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்கிறது.

அடுத்த இதழில்
இசையமைப்பாளர் அன்புராஜா