தமிழ் சினிமாவின் சூறாவளி!



ஹீரோயினிஸம்

வரலட்சுமி

இதுவரை வரலட்சுமி நடித்திருப்பது மொத்தமாக மூன்றே படங்கள்தான். அதிலும் ஒன்று இன்னமும் வெளிவரவில்லை. ஆனாலும், வரலட்சுமி தமிழின் தவிர்க்கமுடியாத நடிகை. இந்நிலையை எட்டியிருப்பது, அவர் சரத்குமாரின் மகள் என்பதால் மட்டும் அல்ல. தன்னுடைய தனித்துவமான உழைப்பால். சரத்குமாரின் மகள் என்கிற விசிட்டிங் கார்டை பயன்படுத்தி மட்டுமே அவர் சினிமாவில் நுழைந்திருந்தால் பத்தொன்பது வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி பத்து வருடத்துக்குள் ஐம்பது படங்களிலாவது நடித்து முடித்திருப்பார்.



ஆனால், அவர் தன் உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே மேலே வரவேண்டும் என்று நினைத்தார். ஆரம்பத்தில் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்லை. மேற்கத்திய நடனத்தில் பெயர் சொல்லும்படியான இடத்துக்கு வரவேண்டும் என்றே நினைத்தார். அதை நோக்கியே தன் பயணத்தையும் அமைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நடிகையாக வேண்டும் என்று முடிவு செய்த உடனேயே, தன் அப்பாவிடம், “எனக்காக ஒரு படம் எடுங்கள்.

இன்னாரை ஹீரோவாக போடுங்கள்” என்றுகூட ேகட்டிருக்கலாம். அதையும் நிச்சயம் சரத்குமார் செய்து கொடுத்திருப்பார். ஆனால், வரலட்சுமியோ அனுபம்கேரின் நடிப்பு பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து முறையாக நடிப்பு பயின்றார். எல்லா புதுமுக நடிகைகளையும் போல தனக்கான வாய்ப்புக்காக காத்து நின்றார்.

நீண்ட காத்திருப்புக்குப் பின்பே ‘போடா போடி’ படத்தில் அறிமுகமானார். நடனம் தொடர்பான கதையம்சம் கொண்ட அந்தப் படத்துக்கு வரலட்சுமி ‘நச்’சென பொருந்தினார். தன்னுடைய நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார். அடுத்த வாய்ப்புக்காக அவசரப்படவில்லை. கமர்ஷியல் ஹீரோயினாகவும் தன்னால் மிளிரமுடியும் என்பதை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதுதான் ‘மதகஜராஜா’.

கிளாமரில் அவர் பட்டையைக் கிளப்பியிருக்கும் இப்படம் துரதிருஷ்டவசமாக இந்த கட்டுரை எழுதப்படும் நொடிவரை வெளிவரவில்லை. அப்படத்தின் நாயகன் விஷால் முயற்சியால் விரைவில் வெளிவரலாம் என்கிறார்கள். இப்படம் வெளிவராததால் சோர்ந்து போகாமல் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் வாய்ப்புக்கு மீண்டும் காத்திருந்தார். கிடைத்தது. அதுதான் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’.

வரலட்சுமி, இப்படத்தில் நடித்திருந்த ‘சூறாவளி’ கதாபாத்திரம், தமிழ் சினிமாவின் சாதனைகளில் ஒன்றாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறது. தேசிய விருதுக்குத் தகுதியான நடிப்பை வரலட்சுமி வழங்கியிருந்தார். நடிப்பு தன் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்பதை கவனப்படுத்தி அப்பாவுக்கு பெருமை சேர்க்கும் மகளானார். அச்சுஅசலாக கிராமப்புற நடன மாதுவின் உடல்மொழியை எவ்வித தயக்கங்களும் இன்றி திரையில் காட்டினார். இந்தப் பாத்திரத்தை ஏற்றால் தன்னுடைய இமேஜ் போய்விடுமோ, அடுத்த வாய்ப்பு கிடைக்குமோ என்றெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை.

வரலட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை, ஊடகங்களுக்கு புதிர்விளையாட்டு. அவர் விஷாலை காதலிக்கிறார், அவரோடு லீவிங்-டுகெதர் முறையில் வாழ்கிறார் என்றெல்லாம் சர்ச்சைகள் கச்சைக் கட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை. நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்பு விஷாலும், சரத்குமாரும் எதிரெதிர் துருவங்களாக நின்றபோது, “நான் நியாயத்தின் பக்கம் நிற்பேன்” என்று தில்லாக சொன்னார் வரு.

தேர்தலின்போது, “ஒரு மகளாக தந்தைக்கே வாக்களிப்பேன்” என்று குடும்ப கவுரவத்தையும் காப்பாற்றினார். பாசத்தையும், நட்பையும் அவர் நேர்த்தியாக கையாண்ட விதம், தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட பலருக்கும் ஆச்சரியம். வரலட்சுமி ஒப்புக்கொள்ளப் போகும் அடுத்த படம் என்னவென்பது நம்மைப் போலவே அவருக்கும் இந்த நிமிடம் வரை தெரியாது. மற்ற முன்னணி நடிகைகளைப் போல, இவரது கால்ஷீட் டயரி எப்போதும் பிஸியாக இருப்பதில்லை. இதற்காக அவர் கவலைப்படவில்லை. எப்போதும் போல பளீர் சிரிப்புடனேயே வலம் வருகிறார். எந்த சமரசத்துக்கும் உட்படாத, தொழில் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் அரிதான நடிகை இவர்.

- மீரான்