எப்போ வேணும்னாலும் ரெடி! நிக்கி ரொம்ப லக்கி



கோதுமை தேசத்தில் பிறந்து சந்தன தேசத்தில் செட்டில் ஆன நிக்கி ரொம்ப லக்கி. பெரிய சவால்கள் எதுவுமின்றி தடதடவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் முன்னணிக்கு வந்தவர். பேட்டிக்காக எப்போது போன் போட்டாலும், “அண்ணா நான் ரெடி” என்பார். அவர் ‘அண்ணா’ என்று அழைப்பதுதான் நமக்கு துயரமே தவிர, நிக்கியுடனான பொழுதுகள் எப்போதுமே மகிழ்ச்சி நிறைந்தவைதான்.

“சிம்ரனே எழிலோட இயக்கத்தில்தான் மெருகேறினாங்க. நீங்க இப்போ அவரோட டைரக்‌ஷனில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ செஞ்சிருக்கீங்க. எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”“ரொம்ப கஷ்டப்பட்டு பண்ண படம் அது இதுன்னுலாம் அளந்துவிட மாட்டேன். இப்போதைக்கு நடித்ததில் பிடித்தது இதுதான்னு சொல்லுற அளவுக்கு படம் வந்திருக்கு.

எனக்கு ஜோடி விஷ்ணு விஷால். ஒரு படத்துலே ஹீரோயினுக்கு என்ன முக்கியத்துவமோ, அதுதான் இதுலேயும் எனக்குன்னு வெச்சுக்கங்களேன். ஆனா, இதுக்கு அப்புறம் அடுத்த லெவலுக்கு நான் போய்க்கிட்டிருக்கேன்னு உள்ளுக்குள்ளே ஒரு அலாரம் அடிக்குது.

எழில் சார் ரொம்ப கூல். டேக்குலே ஆர்ட்டிஸ்ட்டுங்க சொதப்பினா கூட டென்ஷன் ஆகமாட்டார். நானே நம்பமுடியாத அளவுக்கு என்னோட திறமையை இந்தப் படத்துலே எழில் வெளிக்கொண்டு வந்திருக்காரு. இந்தப் படம் நிச்சயமா சம்மர் ஜாக்பாட்டுங்கிறதிலே எனக்கு சந்தேகமே இல்லை.”“ஹீரோவோட கெமிஸ்ட்ரி எப்படி?”

“நானும், விஷ்ணுவும் ஒரே ஏஜ் க்ரூப். எங்களுக்குள்ளே எந்த ஃபார்மாலிட்டியும் இல்லை. கெமிஸ்ட்ரிக்கெல்லாம் சான்ஸே இல்லை. ஏன்னா, சில சமயங்களில் விஷ்ணுவோட ஒஃய்பும் ஷூட்டிங்குக்கு வருவாங்க. எனக்கு வசன உச்சரிப்பு உள்ளிட்ட சில தொழில்ரீதியான விஷயங்களில் அவர் ரொம்ப ஹெல்ஃப் பண்ணினாரு.”“கோ-2?”

“படம் ரொம்ப தாமதமா வெளிவந்துச்சி. படம் சொன்ன மெசேஜுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. என்னோட கேரக்டரை விமர்சகர்கள் எல்லாம் ரொம்ப புகழ்ந்திருக்காங்க. சரியான காலத்தில் ரிலீஸ் ஆகியிருந்தா பெரிய ஹிட் ஆகியிருக்கும்.”
“ஜி.வி.பிரகாஷ், ஆதி, பாபிசிம்ஹா, விஷ்ணுவிஷால் மாதிரி இளம் ஹீரோக்களுடனேயே நடிக்கறீங்க... எப்போ விஜய், அஜீத்தெல்லாம்?”

“கரும்பு திங்கறதுக்கு கூலி கொடுத்தா கசக்குமா என்ன? தலயும், தளபதியும் எப்போ கூப்புடுறாங்களோ, சம்பளம், கால்ஷீட் அது இதுன்னுலாம் பந்தா பண்ணாம உடனே ரெடி ஆயிடுவேன்.”

“ட்ரீம் கேரக்டர்?”
“எனக்கு கனவே கிடையாது. நல்ல காஸ்ட்யூம்லே, நல்லா டான்ஸ் ஆடணுங்கிறதுதான் ஆசை. நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளை நல்லா பண்ணிட்டாலே, அதுவே கனவு வேடத்துக்கான தேவையை நிறைவு பண்ணிடும்.

ஆரம்பத்தில் பெண்களை மையப்படுத்தின படங்கள்தான் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். இப்போது அதுகூட இல்லை. ரசிகர்களை திருப்தி செய்யக்கூடிய பாத்திரங்களைத்தான் தேர்வு செய்யுறேன். ஏன்னா, டிக்கெட்டுக்கு காசு கொடுக்குற ரசிகன்தான் சினிமாத்துறையின் அல்டிமேட் முதலாளி. ஹீரோயின் அழகா இருக்கணும், நல்லா டான்ஸ் ஆடணும்னு அவங்க எதிர்பார்க்கிறாங்க. அதை செஞ்சுட்டு போறேன்.”

“விளம்பரப் படங்களில் நிறைய நடிச்சீங்க?”
“ஆமாம். அதெல்லாம் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி. அதுலே எல்லாம் டைரக்டா அழகுதேவதைதான் (சிரிக்கிறார்).

நிறைய சம்பாதிக்கலாம். ஆனா, நம்ம திறமைகளை காட்டக்கூடிய வாய்ப்பு சினிமாவில்தான் கிடைக்குது. இப்போ எனக்கு விளம்பரங்களை விட சினிமாதான் முக்கியம்னு தோணுது. அதுக்காக விளம்பரப்பட வாய்ப்புகள் வந்தா மறுத்துடுவேன்னு அர்த்தமில்லே. ஏறிவந்த ஏணியை யார்தான் உதைப்பா?”“தமிழில் பிடிச்ச ஹீரோ யாரு?”

“எனக்கு மட்டுமில்லை, ரொம்ப பேர் ஆச்சரியமா பார்த்த படம் ‘ஐ’. அது கொடுத்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீளலை. பார்த்ததுமே மெர்சலாயிட்டேன். விக்ரம் அவரோட கேரக்டருக்காக எப்படியெல்லாம் மெனக்கெட்டிருக்கிறார் என்பது நடிக நடிகையருக்கு பாடம்.

செய்யுற வேலை சின்னதா இருந்தாலும் அதை அர்ப்பணிப்போடு செய்தால்தான் வெற்றி கிட்டும் என்பதற்கு விக்ரம்தான் சாட்சி. விக்ரமை ரொம்பப் பிடிக்கும். மத்தவங்களையும் பிடிக்கும். யாரையும் பிடிக்காதுன்னு சொல்லுறது எனக்கு பிடிக்காது.”
“ஆதியோட அடுத்த படம் செய்யுறீங்க போல?”

“ஆதி எனக்கு சிபாரிசு பண்ணுறாருன்னு கிசுகிசு எழுதறதுக்கு லீட் கேட்குறீங்களா அண்ணா? (அய்யோ திரும்பவும் அண்ணாவா?) ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்துக்கு அப்புறம் மறுபடியும் ஜோடி சேருகிறோம். ‘உறுமீன்’ தயாரித்த டில்லிபாபுதான் இதுக்கும் தயாரிப்பாளர். ஏ.ஆர்.கே.சரவண் இயக்குகிறார். பிரமாதமான கதை.”

- சுரேஷ்ராஜா