ஹீரோயினுக்கு ராயல் ட்ரீட்மென்ட்!



“சொந்தமாக கார் வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் எங்க படத்தைப் பார்த்தா, ரொம்ப கவனமா இருப்பாங்க. கார் திருடர்களின் தகிடுதத்தம் தொடர்பான அத்தனை விஷயங்களையும் ஆவணப்படுத்தி இருக்கிறோம்” என்று ஆச்சரியம் தருகிறார் ‘போங்கு’ டைரக்டர் ராஜ். திட்டமிட்டபடி அறுபது நாட்களில் படத்தை முடித்துவிட்ட உற்சாகம் அவரது உடல்மொழியில் தெரிகிறது.

“யாரு போங்கு ஆட்டம் ஆடுறது?”
“பிக்பாக்கெட்காரன் நம்ம பேன்டுலே பிளேடு போடறது நமக்கே தெரியாதில்லே? அதேமாதிரிதான் கார் திருடனும். அவ்ளோ பெரிய வண்டியை ரொம்ப அசால்ட்டா நம்ம கண்ணுலே மண்ணைத் தூவிட்டு லவட்டிட்டு போயிடுவான்.

அந்த மாதிரி ஒரு கில்லாடி திருடனோட கதைதான் ‘போங்கு’. இந்தக் கதையோட ஒன்லைனை ஈஸியா புடிச்சிட்டாலும், ரசிகர்கள் எங்காவது லாஜிக் இடிக்குதுன்னு துப்பிடுவாங்களோன்னு ஏகத்துக்கும் ஹோம் வொர்க் செய்ய வேண்டியதாயிடிச்சி.

கார் திருட்டில் கில்லிகளான சில டானுங்களை மீட் பண்ணி, நிறைய விஷயங்கள் சேகரிச்சேன். திரைக்கதை ரொம்ப சுவாரஸ்யமாவும், ரியாலிட்டிக்கு குளோஸ் ஆகவும் இருக்கும்.”“நட்டு இப்போ கேமரா ஒர்க்கில் ரொம்ப பிஸியா இருக்காரே! அவரை எப்படி ஹீரோ ரோலுக்கு புடிச்சீங்க?”“கதையை எழுதுறப்பவே அவர்தான் மனசுலே நின்னாரு.

அந்த சமயம் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ என்னோட நம்பிக்கையை அதிகரிச்சிது. கதை ரெடியானதுமே அவரைப் பார்த்து சொன்னேன். அப்போ ‘புலி’க்கு ஒளிப்பதிவு பண்ணிக்கிட்டு இருந்தாரு. முடிச்சிட்டு வந்துடறேன், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. சொன்னபடியே வந்ததும் ‘போங்கு’ படத்தை கமிட் பண்ணி, அவர் போர்ஷனை பக்காவா முடிச்சிக் கொடுத்துட்டாரு.

படத்துலே தேவ் என்கிற கேங்ஸ்டர் லீடர் கேரக்டர் அவருக்கு. ‘சதுரங்க வேட்டை’ ஏமாத்து வேலைக்கும், இந்தக் கதையோட போங்கு வேலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நட்ராஜோட கேரக்டர், இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்திருக்காத புதுமாதிரி கேரக்டர். அவரோட லுக் ஃப்ரெஷ்ஷாவும், டயலாக் டெலிவரியிலே அதிரடியாவும் செமத்தியா இருக்கும்.”“ஹீரோயின் ரூஹி சிங்?”

“அவங்க 2014லே மிஸ் மும்பை டைட்டில் வின்னர். இந்தியிலே மதுபண்டார்க்கர் இயக்கிய ‘காலண்டர் கேர்ள்ஸ்’னு ஒரு படத்துலே நடிச்சி பரபரப்பை உண்டாக்கினவங்க. பாலிவுட்டிலே செம பிஸி ஆர்ட்டிஸ்ட். தமிழுக்கு அவங்க புதுமுகம்தான்.

 ஆனாலும் டிரான்ஸ்போர்ட், கேரவன், ஹோட்டல்னு நம்மூர் திரிஷா, நயன்தாராவுக்கு எவ்வளவு செலவு பண்ணணுமோ, அதுமாதிரி செலவு பண்ணி ராயல் ட்ரீட்மென்ட் கொடுத்து அவங்களை ஹேப்பி பண்ணினார் தயாரிப்பாளர் திரு. இந்த கதைநாயகிக்கு பொருத்தமான தோற்றம் அவருக்குத்தான் இருந்தது என்பதால் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டோம். அவங்களோட நடிப்பும், கிளாமரும் எங்களுக்கு முழு திருப்தி.”

“பட்ஜெட் ரொம்ப ஹெவியோ?”
“சப்ஜெக்ட் அப்படி. ஆனாலும் எங்களை உற்சாகப்படுத்தி செலவு செய்தார் தயாரிப்பாளர். கார் திருட்டு பற்றிய படம் என்பதால் நிறைய ஆடம்பரக் கார்களை பயன்படுத்தியிருக்கோம்.

அதிலும் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஷூட்டிங்குக்கு யூஸ் பண்ணப்போதான் நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்கு பட்ஜெட் எகிறிடிச்சி. அந்தக் காரோட ஒரு நாள் வாடகையே நாலு, அஞ்சு லட்சம் ஆயிடும்.

அதுவுமில்லாமே அதை மெயின்டெயின் பண்றதுக்கு, ஓட்டறதுக்கு எல்லாம் கூடுதல் செலவு. ரஷ் போட்டு பார்த்தப்போ நாங்க செய்த செலவு, உழைப்பு எதுவுமே வீண் போகலை என்கிற நம்பிக்கை வந்திருக்கு.”
“ரொம்ப சீரியஸ் படமோ?”

“அப்படிச் சொல்ல முடியாது. ‘சூது கவ்வும்’ மாதிரி கொஞ்சம் டார்க் மூவிதான். ஆனா, கம்ப்ளீட் காமெடி. கதையோட லைன் கொஞ்சம் சீரியஸா இருந்தாலும், ஸ்க்ரீன்ப்ளே முழுக்க காமெடியில் பின்னியிருக்கோம். மயில்சாமி, சாம்ஸ், ராம்தாஸ்னு ஏகத்துக்கும் காமெடி ஆர்ட்டிஸ்ட்டுங்க இருக்காங்க. ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் படமா இது இருக்கும். க்ளீன் ‘யூ’ சர்ட்டிஃபிகேட் கிடைக்கக்கூடிய அளவுக்கு படத்தை பக்காவா எடுத்திருக்கோம்.”

- சுரேஷ்ராஜா