சாத்தானை வென்ற இராணுவ வீரன்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்!மாணவன் 7

‘தி செவன் பேசிக் ப்ளாட்ஸ்’ என்கிற நூலில் குறிப்பிட்டிருக்கும் ஏழு கதைகளை, ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.முதலாவதாக, வெல்ல முடியாததை வெல்லுதல்...பொதுவாக இந்த ரீதியான கதைகள் ஹாலிவுட்டில்தான் அதிகம். டைனோஸர், ராட்சத சுறா போன்றவற்றை ஹாலிவுட் ஹீரோக்கள் வெல்லுவது இந்த முறையில்தான். காதில் பூ சுற்றும் புராண, இதிகாச, மாயாஜால, மந்திரக் கதைகளில் பயன்படுத்தப்படும் உத்தி இதுவேதான்.

விட்டலாச்சாரியா இயக்கிய மாயாஜாலக் கதைகளில் சாமானியனான நாயகன், மிகப்பெரும் மந்திரசக்திகளைக் கொண்ட வில்லன்களை தன் மதியை பயன்படுத்தி வெல்லுவான் இல்லையா, அதேதான். பொதுவாக ஃபேன்டஸி ரக கதைகளாகத்தான் இந்த வகை அமைந்திருக்கும். சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ கூட இதே டைப் கதைத்தான்.

தமிழில் வரும் பேய்க்கதைகளை இந்த வகையில் பட்டியலிடலாம். 1985ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘யார்?’ திரைப்படத்தின் கதை இதற்கு நல்ல உதாரணம். கலைப்புலி ஜி.சேகரன் எழுதிய இந்தப் படத்தின் கதையை, இயக்குநர் மகேந்திரனிடன் உதவியாளர்களாக வேலை பார்த்த சக்தி - கண்ணன் என்கிற இரட்டை இயக்குநர்கள் இயக்கினார்கள்.

அர்ஜுன்,  நளினி நடித்து மகத்தான வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஹாலிவுட் பாணி பேய்க்கதை டிரெண்டை தமிழுக்கு அறிமுகப்படுத்திய சாதனை இப்படத்துக்கு உண்டு. தயாரிப்பாளர்களில் ஒருவர் நம்ம ‘கபாலி’ கலைப்புலி தாணு.

சூரியக் குடும்பத்தில் இருக்கும் 8 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமையும் நேரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. சாத்தானின் மகனாகப் பிறந்த இந்த குழந்தைக்கு அமானுஷ்ய சக்திகள் உண்டு. இவனுக்கு பதினெட்டு ஆண்டுகள் ஆனதுமே ஒரு குறிப்பிட்ட நாளில் செய்யப்படும் சடங்கு மூலம் உலகம், சாத்தானின் கைக்கு போய்விடும். இந்த ரகசியத்தை அறியும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.

ராணுவவீரனாக வரும் அர்ஜுன், தன் மனைவி நளினியோடு ரொமான்ஸ் செய்த நேரம் போக நல்லவர்களின் துணையோடு, கடவுள் அருளை கைவரப்பெற்று எப்படி சாத்தானின் மகனை அழிக்கிறார் என்பதே கதை.உலகை இருள் சூழும் சூழலில், சர்வமத கடவுளர்களும் ஹீரோ மூலமாக ஒளிபாய்ச்ச உதவுகிறார்கள் என்கிற கிளைமேக்ஸ், முப்பதாண்டுகளுக்கு முன்பு ‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் பெருமையை பறைசாற்ற, உச்சி குளிர்ந்துபோன ரசிகர்கள் ‘யார்’ திரைப்படத்தை பெரும் வெற்றி பெறச் செய்தார்கள்.

(கதை விடுவோம்)