நம்பியார்



எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் சண்டை!

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்துக்கு கலெக்டராக வேண்டும் என்பது கனவு. ஆனால், அவருடைய மனசாட்சி ‘நம்பியார்’ மனப்பான்மையோடு இருக்கிறது. அதன் தூண்டுதலால் நிறைய கெட்ட பெயர் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் இந்த மனசாட்சியை மீறி மீண்டும் எப்படி எம்.ஜி.ஆர் ஆகிறார் என்பதே கதை.

ஸ்ரீகாந்தின் வசீகரமான தோற்றத்துக்கே ‘ஜே’ போடலாம். தான் விரும்பியபடி நல்லவனாக வாழமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். அவருடைய கெட்ட மனசாட்சியின் உருவமாக வருகிறார் சந்தானம். நட்புக்காக தோன்றும் ஆர்யாவும் பார்வதி ஓமணகுட்டனும் தங்கள் பங்கினை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் இளமையைத் தூண்டி, சுண்டியிழுக்கும் வேலையை கிறங்கடிக்கும் தன் அழகால் சிறப்பாகவே செய்திருக்கிறார் சுனைனா. ஜெயப்பிரகாஷ், ஜான்விஜய், தேவதர்ஷினி என்று தெரிந்த முகங்கள் ஏராளம்.

விஜய் ஆண்டனியின் இசையும், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும் வித்தியாசமான கதைக்கு வலுச் சேர்க்கிறது.கெட்ட எண்ணங்கள் கொண்ட மனசாட்சிக்கு ஓர் உருவம் கொடுத்து, அதையே வில்லனாக்கி வித்தியாசமான கதைக்களத்தில் ஷார்ட் & ஸ்வீட்டாக படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷா.