சதுரம்



வன்முறை மேளா!

ஒரு சதுர வடிவ அறை. இருவர் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர், தொழிலில் யோக்கியம். ஆனால், மனைவியிடம் அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளும் டாக்டர். இன்னொருவர், விஐபிகளின் அந்தரங்க வாழ்க்கையை திருட்டுத்தனமாக படம் பிடித்து கல்லா கட்டும் போட்டோகிராபர்.

இருவரின் பாக்கெட்டிலும் கேசட் ஒன்று இருக்கிறது. கூடவே சிறிய ஆடியோ ப்ளேயரும். ‘நீங்கள் இருவரும் குற்றவாளிகள், மரணம்தான் உங்களுக்கு தண்டனை’ என்கிற குறிப்பு. அவர்கள் தப்பிக்க சில வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் மாலை 6 மணிதான் அவர்களுக்கான காலக்கெடு. அதற்குள் தப்பிக்காவிட்டால் மரணம் நிச்சயம்.

இவர்கள் இருவரும் தப்பிக்க முயலும் நேரத்தில் நாட்டுக்காக சேவை செய்த அதிகாரி ஒருவரின் கதையும் கிளையாக விரிகிறது. சதுர அறையில் சிக்கியவர்கள் தப்பித்தார்களா, அதிகாரிக்கு இந்த செயலில் என்ன பங்கு என்பதே பரபர மீதிக் கதை.குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல் உலகளாவிய ரசிகர்களுக்கான கதைக்கருவை தமிழுக்கு கொண்டு வந்திருக்கும் துணிச்சலுக்காகவே இயக்குநருக்கு சபாஷ் போடலாம்.

தணிக்கைத் துறையும் கொஞ்சம் கை கொடுத்தால், வித்தியாசமான கதைக்களங்களில் நம் படைப்பாளிகள் வீறுநடை போடுவார்கள் என்பதை ‘சதுரம்-2’ நிரூபித்திருக்கிறது. அளவுக்கதிகமான வன்முறை என்று இப்படத்துக்கு விமர்சனம் வரலாம். ஆனால், வன்முறை அழகியலை வெளிப்படுத்துகிற இத்தகைய கதைக்கருக்களுக்கும் இடம் இருப்பதே ஜனநாயகம்.

யோக் ஜேப்பி, ரியாஸ் இருவருமே சிக்கிக் கொண்டவர்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் சனம் ஷெட்டிக்கு நடிப்புக்கு மட்டுமல்ல, இடுப்பு காட்டவும் வாய்ப்பு குறைவு. சுஜா வாருணி கிடைத்த வாய்ப்பை வழக்கம்போல கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இருட்டான இந்தப் படத்தில் வெளிச்சமாக சில கிளாமர் காட்சிகள் இருந்திருந்தால் ரசிகர்கள் அமோகமாக ரசித்திருப்பார்கள்.

த்ரில்லர் மற்றும் பேய்ப் படங்களில் அளவான கிளாமர் காட்சிகள் இருப்பது மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் ஆசுவாசம்.கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை ஓக்கே ரகம்தான். ‘Saw’ என்கிற ஆங்கிலப் படத்தின் தாக்கம் நிறைய காட்சிகளில் இருந்தாலும், இதுபோன்ற ஒரு புது genreஐ தமிழுக்கு அறிமுகப்படுத்தி இருப்பவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.