இனி பேயுமில்லை...பிசாசுமில்லை!



வேற லெவல் திரிஷா

திரையுலகுக்குள் நுழைந்தே பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. நடிப்பில் ஐம்பது படங்களைக் கடந்தும் இன்னும் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறார் திரிஷா. தீபாவளிக்கு திரைக்கு வந்திருக்கும் ‘கொடி’யைத் தொடர்ந்து ‘மோகினி’, ‘சாமி-2’, ‘என்.எச்-10’, மற்றும் விஜய்சேதுபதியோடு ஒரு படமென்று அடுத்த ஆண்டு இறுதிவரை இவரது கால்ஷீட் டயரி ஃபுல். ‘கொடி’ படத்துக்கான புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தவர் ‘வண்ணத்திரை’ தீபாவளி ஸ்பெஷலுக்காக கொஞ்சநேரம் கால்ஷீட் கொடுத்தார்.

“சந்தோஷமா தீபாவளி கொண்டாடப் போறீங்க போலிருக்கு...”
“உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும். ரொம்ப வருஷம் கழிச்சி இந்த தீபாவளிக்குத்தான் சென்னையில் இருக்கேன். அம்மாவோட ஜாலியா கொண்டாடுறேன். இப்பவே தீபாவளி மூட் ஸ்டார்ட் ஆயிடிச்சி. போதாக்குறைக்கு இந்தமுறை நம்ம படம் வேற தீபாவளி ரிலீஸ்.

‘கொடி’ செமத்தியா வந்திருக்கு. இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுற அத்தனை படத்தையும் முதல் நாளே ஆடியன்ஸோட ஆடியன்ஸா விசில் அடிச்சி ரசிக்கப் போறேன். தியேட்டருக்கு மாறுவேடத்துல போறதுக்கு காஸ்ட்யூமெல்லாம் கூட ஆர்டர் பண்ணி வெச்சிட்டேன்.”

“தனுஷோட முதன்முறையா நடிச்ச அனுபவம்?”

“ஏறக்குறைய ஒரே காலத்தில்தான் ரெண்டு பேரோட கேரியரும் ஆரம்பிச்சது. இருந்தாலும், நேஷனல் அவார்ட் வாங்கின ஆக்டரோட நடிக்கிறோமேன்னு மனசுக்குள்ள படபடன்னுதான் இருந்தது. முதல் ரெண்டு, மூணு நாள்தான் அப்படி இருந்தது. அப்புறம் கேஷுவலாயிட்டேன். முன்னாடியே அவரோட நடிச்சிருக்கணும்.

பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிடிச்சி. கூட நடிக்கிறவங்களுக்கு நிறைய டிப்ஸ் கொடுக்கிறார். டைரக்டருக்கே திருப்தி ஆயிட்டாலும்கூட, அவருக்கு திருப்தி ஆகிறவரைக்கும் டேக் போயிக்கிட்டே இருக்காரு. அவரோட நடிச்சேன்னு சொல்லுறதைவிட, ஆக்டிங் பத்தி பாடம் படிச்சேன்னு சொல்லுறதுதான் சரியாயிருக்கும்.”

“அடுத்தடுத்து ‘அரண்மனை-2’, ‘நாயகி’, ‘மோகினி’ன்னு நீங்களும் பேய்ப்பட நாயகி ஆயிட்டீங்களே?”

“தொடர்ச்சியா கிளாமர் பண்ணி அலுத்திடிச்சி. கொஞ்சம் வேற விதமா நம்மை ரசிகர்களிடம் வெளிப்படுத்திக்கணும்னு நெனைச்சேன். ‘மோகினி’தான் இந்த டிரெண்டில் கடைசி. இனி பேயுமில்லை, பிசாசுமில்லை. வேற லெவல் திரிஷாவை இனி நீங்க பார்க்க முடியும்.”

“தெலுங்கு சினிமாவை கைகழுவிட்டீங்களா?”

“இல்லையே. இப்போ நடிக்கிற படங்களே கூட பெரும்பாலும் தமிழ்-தெலுங்குன்னு இருமொழி படங்களாதானே எடுக்கிறாங்க! தமிழில் கொஞ்சம் பிஸி ஆயிட்டதால, அங்கே கால்ஷீட் கொடுக்க முடியலை. நல்ல பிராஜக்ட் கிடைச்சா கண்டிப்பா செய்வேன்.”

“பாலிவுட்?”

“எனக்கு இந்தி செட் ஆகலை. பாலிவுட்டோட ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே வேற மாதிரி இருக்கு. படத்துக்காக எவ்வளவு உழைக்கிறோமோ, அதே அளவு உழைப்பை பிரமோஷனுக்கும் கொடுக்கணும்.

இந்தியிலே பண்ணணும்னா எப்பவும் மும்பையிலேயே தங்கியிருக்கணும். ஒரு படத்தோட குறைஞ்சது ஒரு வருஷம் இன்வால்வ் ஆகியிருக்க வேண்டியிருக்கு. நாம இங்கே குவான்டிட்டியில் அடி பின்னினவங்க. நமக்கு செட் ஆவாதுன்னு திரும்பி வந்துட்டேன்.”

“இத்தனை வருஷம் கழிச்சும் பிஸியா இருக்கீங்களே! என்ன சீக்ரட்?”

“நிக்காம, திரும்பிப் பார்க்காம ஓடிக்கிட்டே இருக்கணும். சினிமாவில் ஜெயிக்க இது ஒண்ணுதான் வழி. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாமேன்னு ரெஸ்ட் எடுத்தீங்கன்னா கூட, உங்களுக்கு பின்னாடி வர்றவங்க ரொம்ப முன்னாடி ஓடிட்டிருப்பாங்க...

”“நீங்க அறிமுகமான காலத்தில் சிம்ரன், ஜோதிகா, சினேகா, லைலா, கிரண், மீரா ஜாஸ்மின்னு டஃப் பைட் கொடுத்த ஹீரோயின்ஸ் இருந்தாங்க; அப்புறமும் ஏகப்பட்ட பேர் வந்தாங்க; இப்பவும் நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, காஜல், தமன்னாவில் தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை உங்களுக்கு காம்பெடிட்டர்ஸ்...?”

“இதென்ன அநியாயமா இருக்கு! சினிமா என்ன திரிஷாவுக்கு மட்டுமா சொந்தம்? திறமையுள்ள யார் வேணும்னாலும் இங்கே வரலாம். ஜெயிக்கலாம். யாருக்கு யார் போட்டியா இருக்க முடியும்? கலைத்திறமையை வெளிப்படுத்த சினிமா அருமையான ஃபீல்ட். இங்கே கொஞ்ச காலம்தான் எல்லாருமே இருக்க முடியும்.

இருக்கிற அந்த கொஞ்ச காலத்தையும் பொறாமை, எரிச்சல் இல்லாம கடக்கறதுதான் நம்ம வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். அடுத்த வருஷ தீபாவளிக்கு நீங்க என்னை பேட்டி எடுக்குறப்போ இன்னும் ஒரு நாலஞ்சி பேராவது வந்திருப்பாங்க. எல்லாருக்கும் அவங்க அவங்க திறமைக்கு ஏத்த ஸ்பேஸ் இருந்துக்கிட்டேதான் இருக்கும். யாரோட இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது.”

“முன்பெல்லாம் பரபரப்பான செய்திகளில் அடிப்பட்டுக்கிட்டே இருப்பீங்க! இப்போ ஏன் திடீர் அமைதி?”

“நற்சான்றிதழ் கொடுத்ததற்கு நன்றி. எனக்கு பக்குவம் வந்திருக்குன்னு உங்க கேள்வியில் இருந்து என்னை நானே புரிஞ்சுக்கறேன். முன்னாடி பெரிய ஹீரோஸ் படம் மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். கதை கூட கேட்க மாட்டேன். ஒருவகையில் அது ப்ளஸ். இன்னொரு வகையில் மைனஸ். பெரிய படங்களில் நடிக்கிறப்போ பெரிய முதலீடு என்பதால் எல்லாரும் அதை கவனிச்சிக்கிட்டே இருப்பாங்க. தேவையில்லாமே எதையாவது கிளப்பிக்கிட்டே இருப்பாங்க.

ஆனால்-நான் இப்போ கதை கேட்டு நடிக்கறேன். பிராஜக்ட் பெருசா, சின்னதான்னு பார்க்குறதில்லை. என்னோட கேரக்டர் பிடிச்சிருந்தாதான் ஒத்துக்கறேன். எனக்கு இப்போ பணம் மேலேயோ, புகழ் மேலேயோ விருப்பம் இல்லை. நல்ல படம், நல்ல கதை, நல்ல கேரக்டர்... இதுதான் திருப்தி தருது. கூட நடிக்கிறவங்க சீனியரா, ஜூனியரா என்பதெல்லாம் அடுத்தபட்சம் ஆயிடிச்சி.”

“இத்தனை வருஷத்தை திரும்பிப் பார்க்குறப்போ எப்படியிருக்கு?”

“முன்னாடியே சொல்லிட்டேன். நான் திரும்பிப் பார்க்க மாட்டேன். முன்னாடி பார்த்துக்கிட்டுதான் ஓடிக்கிட்டு இருப்பேன். எவ்வளவோ செஞ்சிருக்கேன்னு என்னைப் பத்தி எனக்கே ஆச்சரியம் இருக்கு. அதே நேரம் நிறைய விஷயங்களை இழந்தும் இருக்கேன். நான் இனிமே என்ன பண்ணணும் என்பதை இந்த லாங் டிராவலில் கத்துக்கிட்டேன்.”

“நிறைவேறாத ஆசை?”

“அப்படின்னு சொல்லமுடியாது. ஆனா, ஒரு சின்ன விருப்பம் இருக்கு. உலகநாயகனோடு கூட படம் பண்ணிட்டேன். சூப்பர் ஸ்டாரோடு ஒரு படம் பண்ணிட்டேன்னா என்னோட கேரியரில் எந்த குறையுமிருக்காது.”“சரி. அதெல்லாம் இருக்கட்டும். எப்போ கல்யாண சோறு போடப்போறீங்க?”“வண்ணத்திரை வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!”