கோடிட்ட இடங்களை நிரப்புக



ஏங்கும் பசு! ஏக்கத்தை போக்கியதா காளை?

விவகாரமான கோட்டை தன்னுடைய புத்திசாலித்தனத்தால் நிரப்ப முயற்சித்திருக்கிறார் பார்த்திபன்.நடுத்தர வயதையும் தாண்டிவிட்ட டிராவல்ஸ் டிரைவர் பார்த்திபனுக்கு அம்சமான இளம் மனைவி பார்வதி நாயர்.

பார்த்திபன், சைட் பிசினஸாக ரியல் எஸ்டேட்டும் செய்கிறார். பெரிய இடம் ஒன்றை வளைத்துப் போட லண்டனில் இருந்து வரும் சாந்தனுவை தன்னுடைய பேயிங் கெஸ்டாக தங்கவைக்கிறார் பார்த்திபன். சாந்தனுவுக்கு பிராஜக்ட் முடித்துக் கொடுத்தால் லைஃபில் மொத்தமாக செட்டில் ஆகிவிடலாம் என்பது அவர் திட்டம்.

வயசு வித்தியாசம் மற்றும் விபத்தில் ஏற்பட்ட உடல் பாதிப்பால் பார்வதியின் தாம்பத்தியத் தேவைகளை பார்த்திபனால் ஈடுசெய்ய முடியாது என்பதை அறிகிறார் சாந்தனு. பார்வதிக்கு அடிக்கடி வலிப்பு வேறு வருகிறது. இதற்கு காரணம், நடைபெற வேண்டிய ‘மேட்டர்’ முறையாக நடைபெறாததுதான் என்றும் தெரிகிறது.

கோடிட்ட இந்த மேற்படி மேற்படி இடங்களை சாந்தனு நிரப்பினாரா, பார்த்திபன் லைஃபில் செட்டில் ஆகும் முயற்சியில் வென்றாரா என்பதே பரபர கிளைமேக்ஸ்.கயிற்றின் மேல் பேலன்ஸ் செய்து ஆடவேண்டிய ஆட்டத்தை தன்னுடைய அறிவுஜீவித்தனமான வசனங்களாலும், நுணுக்கமான திரைக்கதையாலும் சரியாகவே பார்த்திபன் ஆடியிருக்கிறார். “இருக்குற லட்சணத்துலே செல்ஃப் எடுக்குறதே கஷ்டம், இதுலே செல்ஃபீ எங்கே எடுக்குறது?” மாதிரியான வசனங்களில் டபுள்மீனிங் தாண்டவமாடினாலும், எப்படியோ சென்சாரை ஹேப்பி செய்து ‘யூ/ஏ’ சான்றிதழ் வாங்கியிருக்கிறார்.

சாந்தனுவுக்கு இப்படியெல்லாம் நடிக்க வருமா என்று ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் பார்வதிநாயருக்கும் அப்படியொரு அசத்தலான ஜோடிப்பொருத்தம். பார்த்திபன் வழக்கம்போல தன்னுடைய ஜனரஞ்சகமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிம்ரனுக்கு ஸ்கோப் இல்லை. பார்க்கவே பரிதாபமாகத் தெரிகிறார். தம்பி ராமையா ஓக்கே. டிராவல்ஸ் அதிபராக சிங்கம்புலி. மொத்தப் படத்திலுமே இத்தனை கேரக்டர்கள்தான்.

கதையை உணர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அர்ஜுன் ஜனா. சத்யாவின் இசையில் டி.ஆர் வாய்ஸில் ‘டுமுக்குத்தான் டுமுக்குத்தான்’ பாட்டு செம கலாட்டா. பின்னணி இசை மிரட்டாமல், கதைக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது.ஐரோப்பிய பாணி கதையை எடுத்துக் கொண்டு தன்னால் முடிந்தவரை நிரப்ப முயற்சித்திருக்கிறார் பார்த்திபன்.